மதங்கள்-சாதிகள்-குலங்கள் இருக்கக் கூடாது என்று எல்லோருமே சொல்லி வருவார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் பின்னணியில் பல நுட்பங்கள் பொதிந்துள்ளது என்பது சமத்துவமும் சாதிமறுப்பு பேசுபவர்களுக்கும் எப்போதுமே தெரிய வாய்ப்பில்லை.
ஷத்ரியன், பிராமணன், சூத்திரன், வைசியன், கிறித்துவன், முஸ்லிம், என்று எல்லா பிரிவுகளிலும் இத்தேசம் முழுக்க பல ஜெனனங்களை சுழற்சியில் எடுத்துவிட்டு புத்தி இல்லாமல் இன்றைக்கு ஏதோ ஒரு சாதியில் பிறந்து நிற்கிறோம். பல பிரிவுகளில் புதைந்தும் எரிந்தும் எப்படியோ உடல் போனது. ஆன்மா மௌனமாய் காலி செய்துவிட்டு வெளியேறியது. இப்பிறவிகளின் பயன் என்ன? நாம் பிறப்பதை எப்போது நிறுத்துவோம்?
ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாணவன் இருக்கிறான். அவன் சூட்டிகை இல்லை. தட்டுத்தடுமாறி ஒவ்வொரு வகுப்பிலும் தர்ம ப்ரமோஷன் பெற்று எப்படியோ பத்தாம் வகுப்பு வரை வந்து விட்டான். ஆனால் பலமுறை தேர்வு எழுதியும் பாஸ் மார்க் வாங்க முடியவில்லை. "ஏண்டா, இன்னுமா பத்தாங்கிளாஸ்? இத்தனை முறை எழுதியுமா பாஸ் ஆகல? உனக்கே குத்துமதிப்பா இந்த கேள்விக்கு இதுதான் சரியான விடைன்னு இந்நேரம் தெரிஞ்சிருக்கணுமே! மக்கு பிளாஸ்திரி... ஆளு மட்டும் ஜோரா மைனர் மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கிட்டு போறதுல மட்டும் குறைச்சலில்லை" என்று திட்டுவதைப் பார்த்துள்ளோம்.
நாம் அந்த மாணவனின் நிலையில்தான் உள்ளோம். பல வகுப்புகள் படித்தும்கூட (பல சாதிகளில் பிறப்புகள் எடுத்தும்கூட) பத்தாம் வகுப்பை (வீடுபேறு அடையாமல்) தாண்டத் தெரியாமல் இருக்கிறோம். ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு தொழில் ரகசியம் இருக்கிறது அதை பலபேர் அறியார். இன்னும் உயர் வகுப்புகளுக்குப் போகும்போது ஞானம் கிட்டும். அதே ஞானத்தை வெகுசிலர் பத்தாம் வகுப்பிலேயே பெறுவதும் உண்டு.
ஒருவருக்கு இயல்பாகவே கைவினை பொருள் செய்ய, அடிப்படை தச்சு வேலை பார்க்க, சமைக்க, கவிதை பாட, சிலம்பம் சுற்ற, வடமொழி மந்திரங்கள் சொல்ல, தோட்டக்கலை பார்க்க, துணி தைக்க, வியாபார நுணுக்கம் அறிந்து தொழில் செய்ய,.. என்று பலதும் செய்ய முடியும் என்றால் அதன் பின்புலத்தில் அவன் கடந்து வந்த வகுப்புகளில் படித்தவை கைகொடுத்தது என்பதுதான் பொருள். உயரவுயரப் போகாமால் ஒரே வகுப்பிலேயே இருந்தால் அந்த பாடத்திட்டத்தில் இத்தனையும் கற்க முடியாது. ஆக, நாம் இத்தனை சாதிகளில் குலங்களில் பிறந்து பல வகுப்புகளை /பள்ளிகளைக் கண்டுள்ளோம் என்பதே மெய். சமத்துவம் என்பது ஒருவரை ஒருவர் நோக்கும் பாவனையே தவிர மற்றபடி வேறேதுமில்லை. அப்படிப் பார்த்தால் நம் ஆன்மா சமத்துவமாக எல்லா சாதிகளிலும் இருந்துள்ளது. சமத்துவம் வேண்டும் என்றால், இவ்வுலகில் சிவன் சமத்துவத்தோடு எல்லோரையுமே செல்வந்தனாகவோ (அ) ஏழையாகவோ ஏன் படைக்கவில்லை? ஏன் இந்த வஞ்சனை?
“முதுகலை முடிச்சே, ஆய்வு பட்டம் வாங்கிட்ட... படிச்சது போதும். இதை வெச்சி ஸ்திரமான பாதையில போகப் பார்” என்று சொல்வோர் உண்டு. ஆன்மிக பாதையில் உருப்படவேண்டும் என்றால் சிலருக்கு பத்தாம் வகுப்பே போதுமானது, சிலருக்கு முதுகலையும் போதாது.
நமக்கு ஒவ்வொரு வகுப்பிலும் (பிறவியிலும்) இனிப்பான-கசப்பான பல அனுபவங்கள் நடந்திருக்கும். நண்பர்கள்-எதிரிகள் வருவார்கள். அதெல்லாம் ஆன்மா பெற்ற ஞானம்.. தேர்வு முடிவுகள் வெளியாகி “நான் பாஸ் ஆயிட்டேன்” (வீடுபேறு பெற்றேன்) என்றால் நம் பெற்றோர் (சிவ-சக்தி) மகிழ்ந்து போவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக