முதல் பகுதி பரபரப்பு இல்லாமல் மெதுவாக நகர்ந்தது. சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் முடிந்தவரை அப்படியே சாவித்திரியின் நடை-பேச்சு-முக பாவங்களை 80% கொண்டுவர முயற்சி செய்துள்ளார். மற்ற கதாபத்திரங்களான, தாய் சுபத்ரம்மா, நாகி ரெட்டி (பிரகாஷ் ராஜ்), ரங்கா ராவ், எல்.வி.பிரசாத் ஓரளவுக்கு மத்திம ஷாட் காட்டும் போதும் கச்சிதமாகவே உருவ ஒற்றுமை உள்ளது. துல்கர் சல்மான், ஜெமினி கணேசனாக வருகிறார். சிறுவயது தோற்றம் சுருள் முடி, பாவம் எல்லாமே பார்க்கும்படி இருந்தது. இரண்டாம் பகுதியில்தான் நடிகையார் திலகமாகி புகழ் உச்சிக்குப் போனது, மகாராணியாக வாழ்ந்தது, அவருடைய கால்ஷீட் பெற தயாரிப்பாளர்கள் காத்திருந்த காட்சிகள் மிகுந்த சுவாரசியத்தைத் தந்தது. தமிழ் தெரியாமல் வந்து இங்கு தமிழ் சினிமாவை ஆண்டது அபாரம்!
விஜயாவாகினி ஸ்டுடியோ (இன்றுள்ள கிரீன் பார்க் & போரம் மால்) இடிக்கப்படும்முன் இருபது வருடங்களுக்குமுன் எப்படி இருந்ததோ அப்படியே செட் போட்டு எடுத்தள்ளது அருமை. சாவித்திரியின் கதை அநேகமாக எல்லோருக்குமே தெரியும் என்றாலும் அவரைப்பற்றி உண்மைக்குப் புறம்பான வதந்திகள் அக்காலத்தில் பரப்பி விடப்பட்டது தெரிகிறது. திரைக்கதை உண்மையைத்தான் காட்டியுள்ளதா என்பதை சாவித்திரியின் மகள் திருமதி.விஜய சாமுண்டேஸ்வரி மற்றும் மகன் திரு.சதீஷ், ஆகியோர் சரிபார்த்து ஒப்புதல் அளித்தபிறகுதான் படபிடிப்பு தொடங்கியது என்றனர்.
சாவித்திரி அதுவரை சம்பாதித்த பங்களாக்கள், கார்கள், ஆபரணங்கள், ரொக்கம் என்று எல்லாமே ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்தது கொண்டதுமே ஒவ்வொன்றாக கைவிட்டுப்போனது என்பதை ஊரே அறியும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் விதி வசம் மதி சென்றது. அதுவரை படம் எடுக்க யோசனை இல்லாதிருந்த அவர் யாரோ கொடுத்த உந்துதலில் படம் எடுத்து பெரும் செல்வத்தை இழந்தார். எழுபதுகளின் பிற்பகுதியில் வருமானவரித்துறை பிரச்சனையில் அவர் பார்த்துப்பார்த்து கட்டிய தி.நகர் வீடு ஜப்தி செய்யப்பட்டது. அதை மறக்க மதுவுக்கு அடிமையானார்.
கணக்கு வழக்கின்றி தானதர்மங்களைச் செய்தும் அவர் ஏன் அல்லல்பட்டு கடைசியில் 45 வது வயதில் கோமாவில் கிடந்தது போனார்? அதுதான் ஊழ்வினை. அவர் செய்த தாராளக் கொடையும் தேசத்தொண்டும் இன்று அவருடைய வாரிசுகளைக் காக்கிறது. தென்னிந்தியாவின் முதல் பையோபிக் படம் என்ற முறையில் நாக அஷ்வின் எடுத்த இப்படம் அசத்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக