அன்று பள்ளிக்கூடம் அரைநாள். நான் பள்ளியிலிருந்து வந்தபின் சுட்டெரிக்கும் பிற்பகல் வெயிலில், வயதான செருப்பு தைக்கும் தொழிலாளி எங்கள் வீட்டின் முன்பகுதியில் பப்பாளி மரத்தின்கீழ் அமர்ந்து செருப்பு தைத்துவிட்டு ரூ.5 கூலி பெற்றுக்கொண்டார்.
கடுமையாக வியர்வை நாற்றம் வீசும் அளவிற்கு அவர் வெயிலில் சுற்றியுள்ளார். என் அம்மாவிடம், "காலையிலேர்ந்து பட்டினி.. ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பிட குடும்மா" என்று கேட்டார். அவருக்கு சிறிய வாழை இலையில் 4 பூரியும் கிழங்கும் வைத்து கொண்டுபோய் தந்துவிட்டு, "தாத்தா நிழல்ல வந்து சாப்பிடுங்க... மக்குல தண்ணி கொண்டுவரேன் கை கழுவிக்கோங்க, ரொம்ப அழுக்கா இருக்குல்ல" என்றேன். "இல்ல கண்ணு..அதுவரைக்கும் என்னால் தாங்கமுடியாது, இப்படியே உக்காந்து துன்றேன்" என்று அவசரப்பட்டார். உடனே அழுக்கு கையோடேயே அதை பிய்த்து சாப்பிட்டார். சொம்பில் குடிக்க தண்ணீர் கொண்டுபோய் கொடுத்தேன். கை கழுவிக்கொண்டு நீர் குடித்தபின் எஞ்சியதை முகத்தில் தெளித்துக் கொண்டார். தன் முண்டாசை கழட்டி முகத்தை துடைத்துக்கொண்டு பையையும் சாமானையும் தோளில் மாட்டிக் கொண்டு, வெயிலில் மெள்ளக் கிளம்பி நடந்துபோனார்.
செருப்பு தைத்து அழுக்கு அப்பிய கையோடே உண்ணத் துடிக்கும் நிலையில் ஒருவர் இருப்பார் என்றால் அது எப்பேர்பட்ட பசிப்பிணி! உழைக்கத் தயாராக இருந்தும், சக்தியின்றி ஏழ்மையின் பிடியில் அகப்பட்டவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். இறைவா, ஊழ்வினை எப்படியோ இருக்கட்டும் இவர்களுக்கு நித்தம் படி அளந்திடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக