About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 9 மே, 2018

வந்த வழியே போகும்

வருடம்: 1945-55
இடம்: பம்பாய் 
மட்டுங்கா பகுதியில் ஒரு குடும்பத் தலைவர் நுகர்பொருள் பண்டக சாலையில் கொள்முதல் அதிகாரியாக இருந்தார். அக்காலத்தில் கப்பலில் பல சாமான்கள் வரும். பழைய உடைகள், பூட்ஸ், இத்தியாதிகளை போட்டுகொண்டு போவார். வரும்போது அதை அங்கே வீசிவிட்டு புதிய இறக்குமதியான பொருளை அணிந்து வருவார். அரசாங்கத்தின் பண்டகசாலையே இவருடையது போல் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் செய்வதில் ஒரு பாய் நண்பர் கூட்டு. அக்கம்பக்கத்தில் எல்லோருக்கும் தாராள விநியோகமும், விற்பனையும் ஜரூராக நடத்தி பொருள் ஈட்டினார். புகை/மது எல்லாமே இருந்தது. அவருக்கு ஒரே மகன்.
வருடம்: 1964-91
இடம்: பம்பாய் / மாயுரம்
வங்கியில் பணிபுரியும் அம்மகனுக்குத் திருமணம் செய்தார். ஊரில் வீடு, நூறு பவுன் நகைகள், என்று மகனுக்கு சேர்த்து வைத்தார். திருமணம் செய்து வைத்தபிறகு அக்குடும்பத் தலைவர்-தலைவு இறந்து போகிறார்கள். மகன் மகாகருமியாக இருந்தார். அவருக்கு வலிப்பு வந்து விழும் மனைவி. ஒரு மகன், மகள். குழந்தைகள் படித்து வளர்ந்தனர். குடும்ப சொத்துகள்/செல்வம் ஏராளம். இவரும் தன் மகனுக்கும் மகளுக்கும் வங்கியில் நிறைய சேர்த்து வைத்தார் . ரியல் எஸ்டேட் செய்யும் மகன் மராத்தி பெண்ணை காதல்மணம் செய்துக்கொண்டான். மகள் ஒரு பஞ்ஜாபி இந்துவை மணந்தாள்.
வருடம்: 1992-2014
இடம்: பம்பாய்/பூனா
அண்ணன் தங்கையின் வாழ்க்கை நன்கு ஓடிக்கொண்டிருந்தது. கருமி தாய்-தந்தை மாண்டார்கள். கொடுக்கல்/வாங்கலில் புத்திசாலியான மகன், தன் தொழிலில் எல்லாவற்றையும் முதலீடு செய்தான். நிறைய பணம் சம்பாதித்தான். அங்கு குஜராத்தி /மார்வாரியுடன் கூட்டு வைத்தான். திடீரென்று ஒருநாள் எதிர்பாராமல் நெருக்கடி ஏற்பட, கூட்டாளிகள் இவன் மென்னியைப் பிடித்தனர். பணம் தயார் செய்துவிட்டு வருவதாகச்  சொல்லிவிட்டு கர்நாடகா பக்கம் ரத யாத்திரைக்கு வந்தவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டான். இவனுடைய எஞ்சிய சொற்ப செல்வம் என்ன இருந்ததோ அது அந்த மராத்தி பெண்ணுக்குச் சென்றது. அவள் தன் மகளை வளர்த்து வந்தாள். அவன் தங்கையின் சீர் நகைகளை அவளுடைய பஞ்சாபி கணவன் தொடாமல் இருந்தானா என்பது தெரியவில்லை. அக்குடும்பத்தை நான் நன்கு அறிவேன், ஆனால் அதில் பெரும்பாலானோர் இன்று உயிரோடு இல்லை.
ஈசன் சரியாக ஊழ்வினை ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்தான் என்பதை நினைத்து கைத்தட்டிப் பாராட்டுவதா? அதர்ம வழியில் பொருளீட்டி வந்தவை எல்லாமே போய்விட்ட தாற்பரியம் பற்றி சிந்திப்பதா? பாட்டன் சேர்த்துவைத்த பெரும் பணமும் பாவமும் பேரன் தலையில் விழுந்து கதை முடிந்தது!
மூதாதையரின் புண்ணியமும் சொத்தும் நமக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, பாவம் மட்டும் வந்துவிடக் கூடாது. ஆனால் அது நம் கைகளில் இல்லை. அதனால் முடிந்தவரை தர்மநெறியோடு வாழுங்கள்.
Image may contain: 1 person, text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக