பொதுவாகவே வேலைக்கு விண்ணப்பிக்கும் பலபேர் தங்கள் Resumeல் பணிக்காலம், கல்வித் தகுதி, ஊதியம் போன்ற விஷயங்களில் பிசிறு ஒட்டவைத்த நகாசு வேலைகள் செய்வதுண்டு. ஆனால், ஒரு அமெரிக்க பெண்மணி போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மொத்தமாகவே ஒரு பெரிய நிறுவனத்தை மோசடி செய்துள்ளது சென்ற வாரம் வெளியானது.
சிண்டி, வயது 41, அமெரிக்காவின் லுயிசியனா மாகாணத்தைச் சேர்ந்தவர். லிங்க்டு-இன் வலை தளத்திலிருந்து பெரிய பதிவியில் உள்ள பெண்ணின் ரெஸ்யூமை காப்பி அடித்து, ஓட்டுனர் உரிமம் மற்றும் சமூக பாதுகாப்பு இலக்கத்தையும் திருடி அதை வைத்து போலி அடையாள அட்டை தயார் செய்து, அதற்கேற்ப கச்சிதமாய் நடித்து Diversified Foods & Seasonings, Inc. என்ற நிறுவனத்தில் மனிதவள மேலாளராக பணியில் சேர்ந்தார்.
LinkedIn வலைத்தளம் என்பது வேலையிலுள்ள Professionals க்காக நிறுவப்பட்ட ஒரு சமூக தளம் என்றாலும் அதையே நம்பிக்கொண்டு யாரையும் நாம் வேலைக்கு எடுக்கமுடியாது. நான் என்றுமே அதை நம்புவதில்லை. வலைப்பின்னலில் உள்ளவர்கள் எல்லோருமே பரஸ்பரம் testimonial போட்டுக்கொள்வதுண்டு. அதில் அவதூறு, இகழ்ச்சி, போன்ற எதுவுமே அநேகமாக இடம் பெறாது. ஒரே புகழாரம்தான்!
முன் அனுபவம் ஏதுமில்லாத சிண்டி சாதுர்யமாக தன்னை எதிலுமே பட்டுக்கொள்ளாமல் தளுக்காக பணியை தள்ளிக்கொண்டிருந்தார். இவர் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை இந்த லட்சணத்தில் அடுத்த ஆறு மாதத்திற்குள் பணி உயர்வு கிட்டியது. ஆண்டு சம்பளம் $105,000. பிறகுதான் அம்மையார் சொதப்புவதும், பணியில் அடிப்படை வேலைகள்கூட செய்வதில் திணறுவதும் அவர்கீழ் வேலைசெய்யும் சக ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது மேலிடத்திற்குப் போக, பிறகு விசாரணை நடக்க, எல்லா உண்மைகளும் அம்பலமானது. பலநாள் திருடி ஒருநாள் அகப்பட்டாள்!
அதுவரை $56,209 ஊதியம் ஏழு மாதங்கள்வரை வாங்கியது சட்டப்படி குற்றம் என்று நீதி மன்றம் சொல்ல, இவருடைய வக்கீல், 'இவர் வேலையில் இருந்ததால் கம்பனி ஊதியம் கொடுத்தது, இவர் பெற்றார். இதில் என்ன குற்றம்? பணிக்கு எடுக்குமுன் Background check செய்துவிட்டு எடுத்தபின் இப்போது அவதூறு சொல்வது சட்டப்படி குற்றம்' என்று வக்காலத்து பேசினார். ஆனால் எதுவாயினும், அப்பெண்மணி செய்தது மாபெரும் குற்றம் என்று சொல்லி, பத்து ஆண்டுகள் சிறைவாசம் பெற்றுள்ளார். அங்கேயே இந்த நிலை என்றால், இங்கே எந்த அழகில் நடக்கிறது என்பதை நான் அறிவேன்! Fake it till you make it.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக