About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 22 டிசம்பர், 2022

முக தரிசனம் தந்த சித்தர்!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி, குன்னத்தூர் அய்யம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயிலை ஒட்டியுள்ள வயல்கள் சூழ் கால்வாய் அருகேயுள்ள எங்கள் மூதாதையர் ஸ்ரீ மத்யார்ஜுனம் சுப்பாராவ் @ விபூதி சித்தரின் சமாதி பீடம் உள்ளது.

சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தபோது விபூதி சித்தர் தன் முகத்தைக் காட்டியுள்ளார். தரையிலிருந்து கீழே சமாதி குழிக்குள் எட்டிப் பார்த்தால் எப்படித் தெரியுமோ அவர் முகம் அப்படித் தெரிகிறது. அவர் சமாதி பிரவேசம் செய்த காலம் 1561 AD. அப்போது அவர்க்கு வயது 54.

ஜூலை 2022 ஆடி மாதம் குருபூர்ணிமா அன்று பீடம் ஸ்தாபிதம் ஆனது. அப்போது எடுத்த ஒரு காணொளியிலிருந்து இப்போதுதான் படம் பிடித்துப் பார்க்கிறேன். முதல் படத்தில் தலையில் தொங்கும் சடை, நீண்ட தாடி, காதில் ருத்ராட்ச குண்டலம், அகலமான நெற்றிக்கு மேலே தலையில் சூர்யசந்திர சிகை ஆபரணமும் தெரிகிறது. இப்போது 460 வருடங்கள் கடந்து போயுள்ளது. சமாதியில் அமர்ந்தது முதல் இன்றுவரை தன் இருவேறு காலகட்டத்தின் முகங்களை இதில் வெளிக்காட்டியுள்ளார். ஓம் நமசிவாய.🙏

அவர் பூசித்து வந்த ஸ்படிக லிங்கமானது தற்போது பங்காளிகள் வம்சத்தாரிடம் புதுவையில் உள்ளது.

-எஸ்.சந்திரசேகர்











வெள்ளி, 9 டிசம்பர், 2022

நீர் உயர நெல் உயரும்!

குலோத்துங்க சோழனின் முடிசூட்டும் நாளன்று அவனை ஔவை பிராட்டி வாழ்த்திப் பாடினாள். அப்பாடலை நாம் சிறுவயதிலேயே படித்துள்ளோம். 

"வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்"

வரப்பு உயர்ந்தால் நீர் உயரும். நீர் உயரத் தேங்கினால் நெல் உற்பத்தி எப்படி உயரும்? பயிர்கள் நீரில் நின்று அழுகிப் போய்விடுமே என்று பலர் நினைக்கலாம். வரப்பு என்பதை ஏரி/ குளம்/ வயல் கரைகள் என விளங்கும். நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்தால் விவசாய பாசனம் சிறப்புறப் பயிர் சாகுபடியும் உயரும் என்பது பொருளாம்.

அக்காலத்தில் வரப்பில் நீர் மட்டம் உயரவுயர நெற்பயிர்கள் மூழ்காமல் உயர வளரும் தன்மையைக் கொண்டிருந்தன. புயலைத் தாங்கியும் மணிகள் கொத்துக்கொத்தாய்த் தலை வணங்கி நிற்கச் சாகுபடியும் உயர்வாய் இருந்தது. பஞ்சம் பட்டினி இல்லாமல் குடிகளும் உயர்வாக வாழ்ந்தனர்.

காட்டுயானம், கருங்குறுவை, தூயமல்லி, தேங்காய்ப்பூ சம்பா ஆகியவை பாரம்பரிய நெல் ரகங்கள். நாம் கேள்விப்படாத பல ரகங்களின் நெல் விதைகளை ஆங்காங்கே விநியோகம் செய்யும் மையங்கள் இன்று உள்ளன. காலஞ்சென்ற நெல் ஜெயராமனே சுமார் 170 வகை நெல் ரகங்களை மீட்டெடுத்தார்.

இக்காலத்தில் பயிரிடும் குட்டை ரக நெற்பயிர் பற்றி ஔவை தன் பாடலில் சொல்லவில்லை. அன்று மாதம் மும்மாரி பொழிந்தது, வருடம் முப்போகம் நடந்தது. ஆனால் இன்று அறுவடை என்றால் தை மாதம் மட்டும்தான் என்று நினைக்கும் அளவில் ஒரு போகமாகி விட்டது. இன்று வரப்பில் ஒரு பருவ மழைக்கே அதிக நீர் தங்கினால் பயிர் அழுகிப்போகும் நிலை இருப்பதுபோல் அன்று எதுவுமில்லை. யானையை மறைக்கும் அளவில் எட்டடி பத்தடி வரை உயரம் வளரும் ரகங்களாகும். பாடல் மூலம் ஔவை நமக்கு விவசாயப் பாடம் நடத்திவிட்டாள்! 👍


-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

கற்பகம்!

கண்டேனே தசநாதம் கேட்கக்கண்டேனே

கண்ணாக லலாடம் திறக்கக் கண்டேனே

விண்டேனே பரமன் ஆட்டம் விண்டேனே

விளையாட்டை வாய் பிளக்க விண்டேனே

உண்டேனே கபால அமுதமே உண்டேனே

உள்நாவால் பாலும் சிந்தவே உண்டேனே

கொண்டேனே சக்தி ஏற்றிக்கொண்டேனே

காயமும் கல்லாய் ஆக்கிக்கொண்டேனே!

-எஸ்.சந்திரசேகர்



ஓம் நமசிவாய 🌿

குடையாட குழலாட சாமரம் அசைந்தாட

குவித்த பல விழிகளும் கரங்களுமாட

விடையாட மதியாட மனமகிழ் உமையாட

வாதித்த சித்தர்களும் தவரிஷிகளுமாட

சடையாட புவியாட ஈரேழு புவனமுமாட

சேவித்த உன் அடியார்கள் வினையுமோட

நடையாட நயமாக ஓதும் நான்மறையாட

நாதாந்த பரவெளியில் நான் ஆடினேனே!


-எஸ்.சந்திரசேகர்



சனி, 26 நவம்பர், 2022

சிவப்பேறு!

சித்தர் பாடல்களை ஆழம் வாசிக்கச்

    சித்தம் தெளிந்திட உயர்த்தும் பாரு

அத்தர் பூசியும் மணக்காத மனமதில்

    அத்தன் சூட்சுமம் காட்டுவார் பாரு

பத்தர் போகர் எனையாளும் குருநாதர்

    பித்தம் தீர்த்துப்புடம் போடுவார் பாரு

புத்தர் ராமர் கிருஷ்ணர் வடிவத்தில்

    புதுயுகம் தோறும் தோன்றுவார் பாரு


கூத்தர் நடமிடும் தில்லை அம்பலத்தில்

    கனிவாய்த் திருமூலரின் சமாதி பாரு

பித்தர் பிறைசூடிய பெம்மான் மனங்கவர்

    பதியில் அமர்ந்த சிவகாமியைப் பாரு

முத்தர் முப்பத்தாறை ஏறி நிலைத்தோர்

    மாயை வினையறுத்துப் போவார் பாரு

நித்தர் யோகஞான வித்தையைப் பற்றி

    நித்திய சதாசிவத்தில் கலப்பார் பாரு!

-எஸ்.சந்திரசேகர்



"சித்தரின் பாதத்தில்..."

அது 2012. 'அதிசய சித்தர் போகர்' மற்றும் 'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' ஆகிய நூல்களை எழுதி முடித்த சமயம். பதிப்பாளர்களிடம் கையெழுத்துப் பிரதியைக் கொடுக்கும் முன் அகத்தியர் கோயிலுக்குச் சென்றேன். அங்கு அவர் பாதத்தில் அதை வைத்துக்கொடுக்கச் சொன்னேன். அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது அகத்தியரின் சிரசின் மீதிருந்த ஒரு பெரிய ரோஜாப்பூ கீழே பிரதியின் மீது விழுந்தது பெரும்பேறு. 

குரு போகர் தான் இயற்றிய நூலை எப்படி அகத்தியரிடம் தந்து அனுமதி பெற்றாரோ அதுபோலவே என்னுடைய படைப்புக்கும் அமைந்தது என் பாக்கியம்.

முகநூல் நண்பரும் என் அத்யந்த அன்பு வாசகருமான ஆயுதப்படைப் பிரிவு காவலர் திரு.லோகநாதன் அவர்கள் அண்மையில் பொதிகை அகத்தியர் கூடம் சென்று வந்தார். அங்கே கும்பமுனி அகத்தியரின் பாதத்தில் என் புத்தகத்தை வைத்து வணங்கியுள்ளார். இவர் மூலம் மீண்டும் சித்தரின் மகத்துவமான கருணைக்குப் பாத்திரமானேன். எல்லாம் சிவசித்தம்! 🕉️

நன்றி லோகு! 🙏 வாழ்க வளமுடன்.


-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 20 நவம்பர், 2022

பேசாமல் பேசும் சித்திரம்!!

சுவரில் வரைந்திருந்த இப்படியொரு ஓவியத்தை நண்பரின் முகநூல் பக்கத்தில் பார்த்தேன். அது நிறைய விஷயங்களைச் சொல்கிறது.

குரு போகர் பழனியில் நவபாஷாண முருகனைத் தண்டபாணியாக வடித்து நிறுவுகிறார். அதன் சிரசில் குடுமியின் சுவடை ஆழப்பதித்து நீவுகிறார். சிகையானது செவ்வாயுடன் பரவெளித்தொடர்பைப் பெற அவர் தன் நடுவிரலால் ஆகாய முத்திரையைக் காட்டி உணர்த்துகிறார். அவரைச் சுற்றி கீழே புலிப்பாணி சித்தர்கள் கைகூப்பியும் கைகளில் மருந்துக்கலவையை ஏந்தியும் நிற்கிறார்கள். தம் நாயகனை எவ்விதம் போகர் வடிக்கிறார் என்பதை வள்ளியும் தெய்வானையும் ஆச்சரியத்தடன் எட்ட நின்று பார்க்கின்றனர். சிலை வார்ப்பு முடிந்ததும் நவபாஷாண விக்ரகத்திற்குப் போகர் உயிரூட்டும்போது முருகனின் வாசிக்கலைளாக இருவரும் அவனுள் இயங்க ஆயத்தமாக உள்ளனர். 

தலையில் குடுமியும், முப்புரி நூலணிந்த மார்பும், அரையில் கோவணத்துடனும், கையில் நெடிய தண்டத்துடனும் ஒரு பிரம்மச்சாரியாகக் காட்சியளிக்கிறான். கையில் தண்டத்தைப் பிடித்திருக்கும் விரல்கள்கூட சின்முத்திரையைக் காட்டும் விதமாகவும் உள்ளது. மிக எளிமையாய் வாழ்ந்து, ஆணவம் கர்வம் ஆசை என்கிற தீய எண்ணங்களை விடுத்து வாழ்ந்திடு என்பதே இவ்விக்ரஹ தோற்றம் நமக்கு விடுக்கும் செய்தி. அப்படி வாழ்ந்து வந்தால் மெய்ஞானம் தானே வந்திடும்.

இச்சிலைக்கு முறையான பூஜா விதிகளை நம் போகர் விரிவாகப் புலிப்பாணிக்கு எடுத்து இயம்புகிறார். பிறகு அதுவே புலிப்பாணி பூஜாவிதி 50, ஷண்முக பூஜை 30 என்ற நூல்களாக வந்தன.

-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

ஆட்டுக்கிடா வாகனம்!

கோவை, சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில் கந்தசஷ்டிப் பெருவிழா இன்று நடந்தது. மடாலயம் பதிவேற்றிய காணொளியைத் தற்சமயம் முகநூலில் பார்க்க நேர்ந்தது. 

உந்துதல் வர ஒரு படம் பிடித்தேன். அது மானோ என நினைக்கத் தோன்றியது. அதை உற்றுப்பார்த்தால் அது மானல்ல, உட்புறம் வளைந்த கொம்புகளுடன் உள்ள முருகனின் வாகனமான ஆட்டுக்கிடா என்பது தெரிந்தது. உங்களுக்குத் தெரிகிறதா?

இது ஆட்டுக்கிடாதான் என்கிறது கந்தர் கலி வெண்பா பாடல்.

"நெருப்பில் உதித்து அங்கண் புவனம் அழித்துலவும்

செங்கட் சிடா அதனை சென்று சென்று கொணர்ந்து

அதன் மீது இவர்ந்து எண்திக்கும் விளையாடும் நாதா!’’

அதாவது, வேள்விக் குண்டத்திலிருந்து  அஞ்சத்தக்கப் பெரிய ஆடு ஒன்று உலகையே அழிக்க உலவுவதுபோல் தோன்றியது. வீரபாகுதேவர் விரைந்து சென்று அந்தச் செங்கண் செம்மறிக்கடாவை அடக்கி இழுத்துக்கொண்டு வந்து முருகனிடன் ஒப்படைக்கிறார். முருகப் பெருமான் அதன்மீது ஏறி அமர்ந்து, அதை எட்டுத் திக்கிலும் செலுத்தி விளையாடினார். இதுவே அப்பாடலின் பொருள். நாமும் கண்டு தரிசித்தோம்.

ஓம் சரவணபவ 🕉️ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

-எஸ்.சந்திரசேகர்




அசைந்தாடும் ஊஞ்சலில் மனம்!

ஆன்மிக முகநூல் பக்கத்தில் என்னுடைய கருத்துரைக்கு முன்பாக ஒரு அம்மையாரின் பதில் இருந்தது. அவருடைய பெயர் பரிச்சயமாய்த் தெரிந்ததால் அவருடைய ப்ரோஃபைல் பக்கத்தைச் சென்று பார்வையிட்டேன். என்ன ஆச்சரியம்! அவர் எனக்கு 10ஆம் வகுப்பு ஆசிரியை.

உடனே அவருக்கு, “மேடம், நான் படித்த பள்ளியில் நீங்கள்தான் எங்களுக்கு கிளாஸ் டீச்சர். உங்கள் கணவர் திரு.ராஜேந்திரபிரசாத் ஒரு மனநல மருத்துவர் என்று நீங்கள் ஒருமுறை சொன்னது நினைவுள்ளது. வேளச்சேரி விஜயநகரில் வசித்தீர்கள். பத்தாம் வகுப்பு தொடக்கம்வரை எங்களுக்குப் பாடம் நடத்திய திரு.மாணிக்கம் அச்சமயம் திருச்சி நேஷனல் காலேஜுக்கு வேலை கிடைத்துப் போனதால் நீங்கள் வந்தீர்கள். மெட்ரிகுலேஷன் வகுப்பிற்கு ஆங்கிலம் துணைப்பாடம் ‘டிரெஷர் ஐலன்ட்’ இருந்தது. உள்ளூர் திரையரங்கில் அப்பழைய படம் ஓடிக்கொண்டிருந்ததை அறிந்து மொத்த வகுப்பையும் உங்கள் செலவில் படம் பார்க்க அழைத்துச் சென்றது நினைவிருக்கிறதா? உங்களை இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ இறையருள் புரியட்டும்” என்று பதிவிட்டேன்.

அதைப் பார்த்துவிட்டு அவர், “ஆமாம்ம்ம்... நன்றாக நினைவுள்ளது. இதைவிட எனக்குப் பெருமையான தருணம் இருக்க முடியுமா?  மிக நீண்ட... பல வருடங்கள் கழித்து என்னை என் பழைய மாணவர் நினைவு வைத்துக்கொண்டு பேசியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி... ஆனந்தம்! ஃபிரென்ட் ரிக்வெஸ்ட் தருகிறேன் எற்றுக்கொள்ளவும்” என்று திருமதி ரமணி பிரசாத் போட்டிருந்தார். 

காலம்தான் எத்தனை வேகமாய்க் கடந்து போய்விட்டது! நம் உடல் மூப்படைந்து போனாலும் மனம் மட்டும் என்றுமே இளமைக்காலத்து நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை. தற்போது கோவை அருகே பாலக்காட்டில் கணவருடன் வசிக்கும் அவருக்கு வயது 74.

-எஸ்.சந்திரசேகர்



அவதாரங்களும் நிலைகளும்!

வேதம்/புராணம் கூறும் எந்த ஒரு கருத்தையும் விளக்கவோ ஒப்பீடு காட்டவோ நம் சித்தர்களின் நூல்கள் பெரிதும் உதவுகின்றன. மேரு மலையில் (கபால சக்கரத்தில் அல்ல) தான் கண்டு தரிசித்த தசாவதார ரிஷிகள் யார் யார் என்பது பற்றி காலாங்கி தன்னுடைய சீடர் போகருக்கு விளக்கியுள்ளார். அதில் மச்சம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்பது வரிசை. இனி வரவுள்ள கல்கி எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்பே கூறிவிட்டதால் அதையும் இந்த வரிசையில் முன்கூட்டியே சேர்த்தாயிற்று. 

அழிக்கும் தொழிலைச் செய்வது சக்தி/விஷ்ணு. அதாவது சிவனின் வாமபாகம். உடனே நீங்கள் முருகனைப்பற்றி இக்கணம் நினைப்பீர்கள். சிவனாகிய குகன் அழிப்பதில்லை. தாயும்/ மாமனும் வழங்கும் யோகசக்தியை/ஆயுதத்தைக் கொண்டு அவன் ஆவேசமாகத் தாக்குவான், அதனால் முருகனே சத்ருசம்ஹாரம் செய்தான் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவன் செய்வதில்லை. 

நாம் அறிந்த விஷ்ணுவின் தசவதாரங்கள் எல்லாமே தீயோரைக் கொன்று நல்லவர்களைக் காக்கும் நோக்கில் நடந்ததுவே. கீதையில் “யதாயதா ஹி தர்மஸ்ய...” என்ற ஸ்லோகத்தில் கிருஷ்ணன் சொன்னதுபோல் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வருவது அவதாரம். அவதாரம் என்றால் பரப்பிரம்மமே உருவமேற்று இறங்கி வருதல் என்பதாகும். அது ஜீவராசிகள் வடிவாகவோ, பிராணி- மனிதன் கலந்த வடிவமோ, மனிதனாகவோ இருக்கும். 

மச்சம்/ கூர்மம்/ வராஹம் அவதாரம் எல்லாம் அதனதன் வடிவில் இறை அம்சத்துடன் வந்து செயல் புரிந்தது. வாமனன்/நரசிம்மம்/ பரசுராமன் அவதாரம் எல்லாம் அக்கணம் மட்டும் ஆவேச சக்தி வெளிப்பட்டுப் பணியை முடித்தது. ராமன் கிருஷ்ணன் அவதாரம் எல்லாம் மனிதனாக அவதரித்து வாழ்ந்து தமக்கு இட்ட பணியை முடித்தனர். 

ஆக நம் புரிதலுக்காக அவதாரங்களை அம்சம்/ ஆவேசம் / பூரணம் என்ற நிலைகளாகக் கொள்ளலாம். கோபம் கொண்டு ஷத்ரிய படைகளை அழித்து ஒழிக்கும் வரை பரசுராமனிடம் இறைசக்தி இருந்தது. வந்த நோக்கம் நிறைவேறியதும், பரசுராமனிடம் சக்தி வெளியேறியது. நித்ய சிரஞ்சீவியாக வாழ சிவன் அருள் புரிந்தார். நரசிம்ம அவதாரமும் அப்படியே! ஹிரண்யனை சம்ஹாரம் செய்யும் நேரம் மட்டும் அவதாரமாகப் பிரவேசித்து முடிக்கிறார்.           

‘இராமன், கிருஷ்ணன் எல்லாம் கடவுள் என்றால் ஒரு கட்டத்தில் ஏன் வாழ்க்கை முடிந்து போனது?’ என்று போகர் கேட்பது சரிதானே? அவர்கள் விஷ்ணுவின் பூரணத்துவத்துடன் மனிதர்களாக அவதரித்து வாழ்ந்தனர். அந்தந்த யுகத்தில் வந்த வேலை முடிந்தவுடன் மறைந்தனர். நந்தி, பிரம்மன், விஷ்ணு, இந்திரன், முருகன், இராமன், என தானும் அந்நிலைகளில் ஜெனித்து வாழ்ந்ததைத் தன் நூலில் போகர் சொல்லியுள்ளார். 

காலாங்கி நாதருக்கு அவதாரங்கள் எல்லாமே எப்படி ஒரு சேர காட்சி தரமுடியும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. விஷ்ணுவின் அவதார உருவங்கள் அழிந்தாலும், சூட்சும உருவங்கள் அதே சக்தியுடன் நிலைக்கும் தோன்றும் மறையும். அவ்வண்ணமே அவதார ரிஷிகள் சித்தர்பிரானுக்குத் தரிசனம் தந்தனர். புத்தரிஷியையும் பார்த்துள்ளார். ஆனால் ஆதி புத்தரை நாம் கணக்கிலேயே கொள்வதில்லை. 

தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீபாத வல்லபர், அகல்கோட் மகாராஜ், ஷிர்டிசாயி, சிருங்கேரி நரசிம்ம பாரதி எல்லோரும் வெவ்வேறு காலங்களில் ஜனனம் எடுக்கும் முன்னமே ஒருவரையொருவர் சந்தித்து உரையாடியுள்ளனர். பரசுராமனும் இராமனும் சந்தித்தனர், திருப்பதியில் வாசம் செய்ய வெங்கடாசலபதி ஆதிவராஹ சுவாமியிடம் அனுமதி பெற்றார் என்கிறது தலபுராணம். இவை நமக்கு விந்தையாகத் தெரியும்!  

விஷ்ணுவின் அவதாரப்பட்டியலில் முக்கியமாக தசாவதாரங்கள் மட்டுமே சொல்கிறோம்! ஆனால் அதையும் தாண்டி இன்னும் எவ்வளவோ ஜனன அவதாரங்கள் உண்டு. அம்சத்துடன் வாழ்ந்து, ஆவேசத்துடன் வெளிப்பட்டு, பூரணத்துவத்துடன் வாழ்ந்ததுண்டு. புராணம் சொன்னாலொழிய நமக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. ‘நந்திகள் நால்வருடன் தானும் பயின்றதாகத் திருமூலர் சொல்வாரே, அந்த சனகாதியர் நால்வர் உள்பட நாரதர், அகத்தியர், தத்தர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆதிசேஷன், வியாசர், கோவிந்த பகவத்பாதர் என இன்னும் எத்தனையோ அவதாரங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

பக்தி யோகம் ஞானம் போதித்த அவதார மகான்களில் ஆதிசங்கரர், இராமாநுஜர், இராகவேந்திரர், ஸ்ரீவீரப்பிரம்மம், வள்ளலார், காஞ்சி பரமாச்சார்யார், ஷிர்டிசாயி, என இன்னும் நிறைய பேர் தேசம் முழுக்க இருந்தனர். சமணம், முஸ்லிம், கிறிஸ்து மதங்களில் ஜனனம் எடுத்திருந்தாலும் நம் மனம் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. 🤔

உங்களில் யாரேனும்கூட இறை அம்சத்துடனோ ஆவேச குணத்துடனோ அவதாரம் எடுத்திருக்கலாம். இப்போது அது உணரப்படாமல் இருக்கலாம், ஆனால் காரணமும் காலமும் நெருங்கும்போது வெளிப்படலாம். கல்கியின் கையாளாக சமுதாயத்திலே பிரவேசித்து நெறிமுறைப்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் சாத்தியம் உண்டு. ஓம் நமோ நாராயணாய!

-எஸ்.சந்திரசேகர்



தெய்வீக அஷ்டபந்தனம்!

ஒரு கோவில் எப்படி அமைய வேண்டும், சிலைகள் எப்படி வடிக்கப்பட வேண்டும், எப்படி பிரதிஷ்டாபனம் செய்ய வேண்டும் என்பது வரை ஆகம விதிமுறைகள் பல இருக்கின்றன. ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து அது பீடத்திலிருந்து அகலாமல் இருக்க அடிபாகத்தில் அஷ்ட பந்தன மருந்து சாத்து செய்வார்கள்.

அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை. இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இந்த மருந்து கல்போல் இருக்கவும் கூடாது, இளகலாகவும் இருக்கக்கூடாது. 

எல்லா பொருட்களை எந்தெந்த அளவு சேர்த்து எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்கும் கால அளவு உள்ளன. சித்தர் பாடல்களிலும் பதார்த்த செய்பாகமுறை சொல்லப்பட்டுள்ளது.

"கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்"

இது பொதுவான அஷ்டபந்தன முறை என்றாலும் சில தலங்களில் தங்கத்தால் சொர்ண பந்தனமும் செய்யப்படுகிறது. இவை குறிப்பிட்ட காலம் வரையே கெட்டியாக நிற்கும். அபிஷேகம் மற்றும் தினசரி பூசைகளால் காலப்போக்கில் தேய்மானமாகி பலவீனப்பட்டு உதிரும் தன்மை உடையது. ஒவ்வொரு முறையும் குடமுழுக்கின்போது மூலவர் விக்ரகத்தை வெளியில் எடுத்துச் செப்பனிட்டு அதன்கீழே புதிதாய் இந்த சிவப்பு மருந்தை இடுவார்கள்.

ஊர் அரட்டை அடித்துக்கொண்டு மருந்து இடிக்க முடியாது. உரலில் இடிப்பவர்கள் மந்திரங்கள் ஜெபித்தபடி ஆச்சாரமாகச் செயல்பட வேண்டும். அம்மருந்தில் சக்தி அலைகள் உருவேற்றப் பாய்ந்திட தெய்வீகத் தன்மையைப் பெறும். கும்பாலங்காரம் செய்யும்போது வெவ்வேறு பிரமாணங்களில் நூல் சுற்றும்போது மானசீக மந்திர ஜபம் நடப்பது போலவே இம்மருந்தையும் உருவேற்றி இடிக்க வேண்டும்.

ராஜராஜ சோழன் கட்டுவித்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் முதல் குடமுழுக்கின்போது கருவூராரை அழைக்காமல் அகம்பாவத்தில் மன்னன் அவமானப்படுத்தியதால் பெருவுடையார் அடிபாகத்தில் மருந்து ஒட்டவில்லை. என்ன செய்வதென அறியாமல் அங்கே அந்தணர்கள் குழம்பினர். சோழன் தன்னுடைய தவறை உணர்ந்தபின் சித்தரைத் தேடிப்போய் அழைக்க, அவர் தன் வாயில் தரித்திருந்த தாம்பூலத்தை உமிழ்ந்து 'இதைப் போய் அதில் சாத்து' என்றதும், அதன்பின் அஷ்டபந்தனம் திடப்பட்டு லிங்கத்திருமேனி ஸ்திரமாக நின்றது என்பதும் நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம்தான்.

ஆக, ஆகம விதிப்படி கல் தேர்வு, சிலை வடிப்பு, சோதனை முறைகள், வேள்விகள், ஸ்தாபனம், மந்திரங்கள், அஷ்டபந்தன மருந்து சாத்து, சம்ப்ரோக்ஷணம் வரை எல்லாம் நூல் பிடித்தபடி வரிசையாக நடக்கும். தெய்வீக பந்தனம் நமக்கும் காப்பாக இருக்கும்!

-எஸ்.சந்திரசேகர்




இதுதான் சமையல் ரகசியம்!

உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ள மாடவீதிகளில் பல உணவு விடுதிகள் இருப்பதைக் கண்டேன். ஹோட்டல் உரிமையாளர் பெயர்கள் ஸ்ரீனிவாச பட், சுரேஷ் பட் என்ற ரீதியில் இருக்கவே நம்மூரில் உட்லன்டஸ், பட்ஸ் ஹோட்டலை எனக்கு நினைவூட்டியது. காலையில் அங்கே சிற்றுண்டி உண்டபின் கல்லாவில் இருந்த அந்த நபரிடம் என் சந்தேகக் கேள்வியைக் கன்னடத்தில் கேட்டேன். 

“உங்கள் ஊர் முழுக்க பட் ஹோட்டல்கள் நிறைய உள்ளதே, சமையல்தான் இந்த ஊர் மக்களின் பிரதான தொழிலா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “ஹௌது சுவாமி.. குருஷேத்திர யுத்த காலதிந்த அடுகே மாடுவதே நம் சர்வீஸ்” என்றார்.

“குருக்ஷேத்ர யுத்தம்னா... துவாபர யுகம் முதலேவா... ஆச்சரியமா இருக்கு.. மேலே விவரமா சொல்லுங்க” என்றேன். அவர் மகாபாரதக் கதையைக் கூறினார்.

உடுப்பி பகுதியை ஆண்ட அரசன் நரேஷ் குருக்ஷேத்திர யுத்தத்தில் பங்குகொள்ள படைகளுடன் சென்றான். அப்போது ஸ்ரீகிருஷ்ணரிடம் கோரிக்கை வைத்தான். கௌரவர்கள்/பாண்டவர்கள் இருதரப்பிற்கும் உணவு சமைத்துப்போட அனுமதி தரவேண்டும் என்று வேண்டினான். “ஆகட்டும் நீயே சமையலைப் பார்” என்று உத்தரவானது. அதன்படி தினமும் ருசியான உணவு படைத்து அது மீதம் ஆகாதவாறு சமைத்தான். தினமும் அதெப்படி முடியும்? உத்தேசமாக சமைக்கலாமே தவிர துல்லியமாக எப்படி? தேர், யானை, குதிரை, காலாட்படை என இருவரின் படைகளும் மொத்தம் 18 அக்குரோணி. ஆக தினமும் இத்துணை தலைகளுக்குச் சமைப்பது என்பது தெய்வத்தின் செயலுக்குச் சமமாகுமே! ஆம் அந்த ரகசியம் பற்றி நரேஷ் விளக்கினான்.      

தினமும் அளிக்கும் உணவில் கிருஷ்ணர் சாப்பிடாமல் மீதம் வைத்த வறுத்த வேர்கடலைகளை எண்ணி அதை ஆயிரத்தால் பெருக்க, வரும் தொகை எண்ணிக்கையே மறுநாள் போரில் மாண்டுபோவோர் எண்ணிக்கை என்பதை வெளிப்படுத்தினான். மொத்த அக்குரோணி சேனைகளின் எண்ணிக்கையில் தினமும் மீதமான வேர்கடலைகளை ஆயிரத்தால் பெருக்கிக் கழிக்க மீதம் உள்ளவர்களுக்கே சமையல் செய்து பரிமாறினான். இதன்படி பதினெட்டு நாள் போரில் முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு வீரர்கள் மாண்டது தெரிந்தது. கிருஷ்ணர் தலைமையில் பாண்டவர்கள் வென்றனர். அன்றிலிருந்து உடுப்பி தேசம் அன்னம் படைக்கும் தொழிலைச் செய்ய ஸ்ரீகிருஷ்ணர் அருள் புரிந்தார் என்று ஹோட்டல் உரிமையாளர் சொன்னார்.

மகாபாரத யுத்தத்தில் பாரதத்தின் பல பகுதிகளிருந்தும் அரசர்கள் தங்கள் படைகளை அனுப்பி இரு தரப்பினர்க்கும் போரிடவும்/ சமைக்கவும் உதவினார்கள். சேரன் உதியன்கூட சமைத்துள்ளான். இதில் சாரங்கத்வஜ பாண்டியன் அஸ்வத்தாமனால் கொல்லபட்டான், அவன் படை வீரர்களும் கொல்லப்பட்டனர். 

மகாபாரதம் தன்னுள் எண்ணற்ற ரகசியங்களைக் கொண்டுள்ளது. நாம்தான் இன்னும் முனைந்து அதைப் படிக்கவில்லை என்பதே உண்மை! 

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

புலவனின் பரிதாப நிலை!

கீழ்வரும் இப்பாடலில் பரிசில் பெற வரும் ஓர் ஏழைப் புலவனின் வறுமை நிலையை ஆழமாக விவரிக்கிறார் 'சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை' நூலாசிரியர் வித்துவான் தெய்வசிகாமணிக் கவுண்டர். இவர் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர்.

“மானம் குலம் கல்வி வன்மை அறிவு தானம் தவம் முயற்சி பொறுமை மொழிக்காதல் என்ற பத்தும் பசிவந்தால் பறந்துபோகும் என்று ஔவை பிராட்டி சொல்லியுள்ளார். வறுமைப் பிணியில் வாடும் புலவனானவன் ஒட்டிய வயிறுடன், இருபுறமும் துருத்திக்கொண்டு நிற்கும் விலா எலும்புடனும், பொந்தில் இரையைப் பற்றிக்கொண்டுள்ள உடும்பைப்போல், சதை எல்லாம் வற்றிப்போய் உரித்தெடுத்த உடம்போடும், கந்தல் ஆடையை அணிந்தும், கையில் ஒரு கிழிந்த நூலேடுடன் வருகிறான்.

முத்தமிழில் கரைகண்ட புலவன் மும்மதயானைக்கு இணையான வீரியத்துடன் இருக்கவேண்டியவன் பூனையைப்போல் உள்ளான். வெயிலில் வதங்கிய மென்மையான மலர்போல் வாடியுள்ளான். வருத்தும் அந்த வறுமை மிகக்கொடியது” என்று அப்புலவனின் மெய்நிலையைப் பொருள்படப் பாடியுள்ளார்.             

அதன் பின்வரும் பாடலில், “கடுங்காற்று மழை வெயில் என ஒன்றன்பின் ஒன்றாய் வந்து துயர் தருவதோடு இல்லாமல், ஓட்டைகள் நிறைந்த இல்லத்துக் கூரையோலை கீழே வறுமை என்னும் பேய் ஆட்சி செய்யும் அடையாளமாக, அந்தப்புலவனின் மனைவி தன் தலையில் எண்ணெய் வைக்காமல், முகத்தில் மஞ்சள் பூசாமல், நெற்றியில் திலகமிடாமல், கழுத்தில் மங்கிய கயிறு தெரிய, ஒட்டிய வயிறும், மெலிந்த இடையில் கந்தல் ஆடையுடன் துயர் நிறைந்தவளாக, கணவனுக்கு உப்புநீர் கஞ்சியேனும் தரவேண்டுமே என்ற கவலையில் தோய்ந்தபடி காணப்படுகிறாள்” என்று பாடுகிறார். 

-எஸ்.சந்திரசேகர்



சனி, 27 ஆகஸ்ட், 2022

பொங்கியின் வங்கி!

அம்மா தரும் பத்து காசைப் 

பத்திரமாய்ப் பொத்தி வைப்பாள்

நிறைய நிறைய சேர்க்க எண்ணி

நினைத்துக்கொண்ட சிறுமி ஒருத்தி.


ஒற்றைப் பின்னல் எலிவாலுடன்  

கால்பாவாடையின் மங்கிய ஒளியும்

காது மூக்கு குத்திய இடத்தில்

வேப்பங்குச்சி தோடாய் மின்னி,

ரப்பர் வளையல் மெல்லிய விரல்கள்

சேற்றுப்புண் கால்களோடு வெளிர 

கண்கள் மட்டும் பளிச்சென மிளிரும்

சிறுமியின் நிலை பாவம்தான்!


அவளையே தூக்கும் சுமையொன்றை

இடுப்பில் ஏற்றி வைத்திருக்க

சற்றே தடுமாறி நடக்கும்போது

கனத்த பாவாடை எழுப்பும் ஓசை

அவள் இதயத்துடிப்பின் எதிரொலி.


கோடிவீட்டுப் பாப்பாவின் ஆயாவாக

இவள் மூணு ரூபாய் ஊதியம் பார்த்திட

வாயெல்லாம் பல்...

கசங்கிப்போன காகிதத் தாள்களைப்

பத்திரமாய்ச் சேர்த்து வைத்தாள்.

தீப்பெட்டிதான் டிரங்குபெட்டி!


சேர்த்துவைத்த காசுகளை 

பெட்டியில் வைத்துக் காப்பதை

குடிகாரதந்தையின் கண்ணில்   

போதையை கொஞ்சம் காட்டியது.

முண்டாசுக்குள் பெட்டி நுழைந்தது

வயிற்றுக்குள் சரக்கு இறங்கியது.

பற்றவைத்துப் பீடியை இழுக்க

பெட்டியே நெருப்பையும் தந்தது.


முண்டாசு வியர்வையில் நனைந்தும்

நமுத்துப் போகாத ஒரு தீப்பெட்டி..

இவன் செயல் கண்டு சகிக்காமல்

பெட்டிக்கே வயிற்றெரிச்சல்!

போதையில் அவன் பாதையில் உருள

நசுங்கிப்போனது டிரங்கு பெட்டி!   

தள்ளாடிப் போனவன் வந்தபின்

பொந்துக்குள் பெட்டியை வைத்தான்.


காலையில் விழித்த பொங்கி

பெட்டியைக் காணாது அதிர்ந்தாள்.

பெட்டியைக் கடித்த பெருச்சாளி

எந்தப் பொந்தில் வைத்ததோவென

அதைத் தேடுவதைக் கைவிட்டாள்.


குடிசைக்குள் துள்ளலாய் நுழைந்தாள்.

வீரம் பொங்க வைத்திருந்தாள்

புதிய 'சீட்டாபைட்' டிரங்கு பெட்டி!


-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

சித்தாடலை விமர்சிப்போர் கவனத்திற்கு!

நீண்ட இடைவெளிக்குப்பிறகு சித்தர்கள் பற்றி இங்கே பதிவிடுகிறேன். ‘சொர்ண மேரு’ என்ற என் பழைய பதிவைப் படித்த சிலர், போகர் சொல்லிய சங்கதியின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல், அது பொய், அது சூரிய ஒளியால் வந்த நிறம், இருளில் மலை மின்னும் கதையைக் கேள்விப்பட்டதில்லை, பொய் சொல்ல அளவேயில்லையா என்ற ரீதியில் விமர்சனங்களைப் பார்த்தேன். நான் இத்தகைய விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில்லை.

சித்த புருஷர்களின் அஷ்ட சித்திகள்பற்றி பாம்பாட்டி சித்தரே நீண்ட விளக்கத்தைத் தந்துள்ளார். சித்தர்கள் எப்படிப்பட்டவர்கள், பெற்றுள்ள சக்திகள் என்ன, இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம் என்ன, போன்ற விவரங்களைப் பாடல்களில் உரைத்துள்ளார். அதை இங்கே பார்ப்போம்!

“பெரிய தூணையே சிறு துரும்பாகவும், சிறியதைப் பெரியதாகவும் தோன்றச் செய்வோம்; ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவோம். மலைகளையே பந்தாக உருட்டி வீசுவோம், சப்த சாகரங்களையே குடித்து ஏப்பம் விடுவோம், அளவில்லாத மணலையே அளந்திடுவோம். மண்டலத்தையே உள்ளங்கையில் மறைத்து விடுவோம், வானத்தை வில்லாக வளைப்போம், சீடர்களுக்கு அஷ்டகர்ம ரகசியமும் சொல்லித் தருவோம்.

தகிக்கும் அக்னியில் மூழ்கிக்குளித்து இயல்பாய் எழுவோம், நீருக்குள் இருந்து மூச்சை அடக்கி வாழ்வோம், பாயும் புலியையும் தாக்கி வசியப்படுத்துவோம். மூவுலகத்தையும் பொன்னாய் மாற்றுவோம், சுடும் செங்கதிரைக் குளிராக்கிப் பாய்ச்சுவோம், இவ்வுலகே இல்லாமல் நாங்கள் மறைத்து மாற்றிடுவோம்.

வேதியன் செய்த சிருஷ்டியைப்போலவே எல்லாம் படைப்போம், அவனுக்குச் சமமாகத் திகழ்ந்து ஐந்தொழில் புரிந்து அவனாகவே வாழ்வோம். ஆயகலைகள் அனைத்தும் அறிவோம், அதற்கும் மேலான அழிவற்ற நிலையையும் அறிவோம், பற்றற்ற மனமுடன் வாழவும் செய்வோம்.

வேங்கை யானை யாழி சிங்கம் முதலானதைக் கட்டுப்படுத்தி ஏவி விடுவோம், அந்தக் கடவுளையே எங்களுடன் விளையாடச் செய்வோம், ஆதிசேஷன் வாசுகி பத்மன் தக்ஷன் அனந்தன் குளிகன் கார்கோடகன் சங்கபாலன் ஆகிய நாகங்களையே ஆட்டிப்படைப்போம். அஷ்டதிக்குகளில் யந்திர சக்கரங்களை எழுதி நாட்டி, அஷ்ட நாகங்களையே கட்டுவோம். இவை கக்கும் விஷத்தை எடுத்துப் பருகுவோம்” என அதிசயக்கும் வகையில் சித்தர்களின் சக்திகளை விளக்கி இவை அளவிடமுடியாதது அளப்பரியது என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

ஏழுகடலும் வற்றிடக் குடித்த அகத்தியர், மலைகளைப் பெயர்த்துப் போட்ட நந்தீசர், பரமணு ரகசியங்களை விளக்கிய திருமூலர், அண்டங்களைச் சுற்றிவந்த காலங்கி, ஆக்கங்கள் தந்த போகர், பொன்னைச் செம்புக்குள் மறைத்த கருவூரார், விஞ்சை மந்திரத்தால் வேங்கையை வாகனமாக்கிக்கொண்ட புலிப்பாணி, தென்காசியில் மலைக்குப் பச்சிலை அரைத்துப் பூசி துருத்தி கொண்டு ஊதிய தேரையர், நாக விஷத்தை அருந்திய மருதமலை பாம்பாட்டி, பனைமர உயரமாகி மீண்டும் சுருங்கிய கம்பளிச்சித்தர், பல்வேறு சித்துகள் ஆடிய மச்சமுனி கோரக்கர் கொங்கணர், நவகண்டர், என பலரைச் சொல்லலாம். 

கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த சித்தர்களும் அப்படியே! உள்ளங்கையில் ரசமணி கட்டிய ஒளிதேகம் பெற்ற வள்ளலார், வெட்டப்பட்ட கரத்தைப் பொருத்திக்கொண்ட சதாசிவ பிரம்மேந்திரர், சமாதிக்கு உள்ளேயும் வெளியேயும் சஞ்சரிக்கும் பாம்பன் சுவாமிகள், எளிய பக்தனின் மறுபிறவிகளை ரத்து செய்து முக்தி தந்த காஞ்சி பரமாச்சாரியார், என பல உதாரணங்களைச் சொல்லலாம். தற்போது தட்டச்சு செய்யும்போது இவ்வளவுதான் என் நினைவுக்கு வந்தது. 

ஆகவே தூண்டுதலின் பேரில் சித்தர்களை/ மகான்களைத் தவறாக விமர்சித்துப் பாவக்கடலில் விழுந்திட வேண்டாம். உங்களுக்குப் பிறக்கும் வாரிசு அடிமைகள் நீங்கள் சேர்த்து வைத்துள்ள சாபத்தையும் பாவத்தையும் சுமக்க வேண்டும். சாமானியனின் புரிதலுக்கும் கற்பனைக்கும் இவை ஆட்படாது. சித்த புருஷர்களைக் கொடிய சொற்களால் தூற்றி இகழ்வோர் செய்யட்டும், அக்கருத்திற்கு நீங்கள் செவி சாய்த்து ஆமோதிக்க வேண்டாம். மீண்டும் இது ஓர் எச்சரிக்கை!

- எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

மறைப்புகள் நீங்கி எல்லாம் வெளிச்சமாகி...!

சித்தர்களின் வெளிப்பாடுகள் மற்றும் அவர்களுடைய ஜெனனங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்தான் நடக்கும் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது அப்படியல்ல! மதத்தை, மொழியை, மாகாணத்தை, தேசத்தைத் தாண்டி அயல்நாடுகளிலும் நடக்கும். சில வருடங்களுக்கு முன் வெளிவந்த என் ‘சித்தநூல் ரகசியங்கள்’ (கற்பகம் புத்தகாலயம்) என்ற புத்தகத்தில் இதுபற்றி நான் சொல்லியிருந்தேன். 

ஃபேரடே, எடிசன், டெஸ்லா, ரூதர்ஃபோர்ட் மற்றும் பல மேலைநாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வழங்கிய தொழில்நுட்ப ரகசியங்களும் கருவிகளும் கடந்த நூற்றாண்டுகளில் பெரிதும் பேசப்பட்டன. ஆனால் இந்த நவீனங்களை எல்லாம் மூத்த சித்தர்கள் கடந்த யுகங்களிலே கண்டுபிடித்துச் செயலாக்கிவிட்டனர் என்பதைப்பற்றி நம் பழைய பதிவுகளில் பார்த்துள்ளோம். 
 
ஜெர்மானியர்கள் நம் பண்டைய சமக்ஸ்ருத்த ஏடுகளைத் திருடிக்கொண்டு போனார்கள், சீனம்/திபெத் நூலகங்களில் இன்னும் நம் பொக்கிஷ நூல்கள் உள்ளன என்று நிறையவே இங்கு அங்கலாய்த்தனர். திருடிக்கொண்டு போனதால் மேலைநாட்டினர் கண்டுபிடித்தனர் என்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் அதுகாறும் நம்மிடம் இருந்த நூல்களை வைத்து ஏன் நம்மவர்கள் புதிய ஆக்கங்களைத் தரவில்லை? விஸ்வகர்ம குலத்தினர் தம் குலத்தொழில் முறையில் சிலவற்றைச் சிறப்பாய் வெளிக்கொண்டு வந்தனர். ஆனால் மற்றவர்கள்...? இத்தனைக்கும் வடமொழி கோலோச்சிய காலம் ஆயிற்றே? ஏன் செய்யவில்லை? விடை காணமுடியாத பல கேள்விகள் உண்டு. எல்லாம் சிவசித்தம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.  

அப்படி ஓர் அயல் நாட்டவர்தான் திரு. அலெக்ஸாண்டர் பட்னி. பரவெளி ஆய்வாளர், நூல் ஆசிரியர், சமஸ்க்ருத மொழி ஆர்வலர், பிரபஞ்ச மின்காந்த ஒலி அதிர்வு விஞ்ஞானி, ரசவேதி என இவர் பன்முகங்கள் கொண்டவர். அலெக்ஸிடமிருந்து இன்று ஒரு விரிவான மின்னஞ்சல் எனக்கு வந்தது. இவர் என்னுடைய பழைய ஆங்கில சித்தவியல் கட்டுரைகளையும், பதிப்புகளையும் வாசித்துள்ளார் என்றார். போகருடைய கண்டுபிடுப்புகளை நான் முடிந்தவரையில் திறம்பட வெளிக்காட்டியுள்ளேன் என்று என்னைப் பாராட்டினார்.  என் 'போகர் ஏழாயிரம்: சப்தகாண்டம் ஒரு பார்வை' நூலை மொழிபெயர்த்துப் படித்துள்ளார். அவர் தன் கடிதத்தில் சொல்லிய சாரம் என்ன?

“நண்பா, சித்தர் போகர் உரைத்த மறைப்பு மிகுந்த கண்டுபிடிப்புகளை என் ஆய்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். அவர் உரைத்த ரசவாத வேதியல் ரகசியங்களை உடைத்துப் பிரயோகம் செய்து நூறு சதவிகிதம் வெற்றியும் பெற்றேன். வெவ்வேறு வெப்பங்களில் படிமங்களின் அதிர்வில் வெளிப்படும்   துகள்களின் ஆய்வையும், புவியீர்ப்பு காந்தவிசை சார்ந்த ஒலி ஆய்வையும்  மேற்கொண்டேன். சில ஆண்டுகளுக்கு முன் பரவெளியில் கேட்கும் "ஓங்கார" நாதம் பற்றி வெளியிட்டதும் நானே. 

சித்தரின் பாடல்களில் உறைந்துள்ள மறைப்புகள் அத்தனையும் இரத்தினங்கள் என்பதை உணர்ந்தேன். அவருடைய பாடல்கள் மூலம் நான் செய்த கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவலாய் உள்ளேன். என் ஆய்வுகளில் அவருடைய மறைப்புகள் எல்லாமே எனக்குப் பரிச்சயமாகி வருவதை சில வருடங்களாகவே உணர்கிறேன். பாடல்களிலுள்ள மறைப்பு விலகிட அந்த விதியாளி நானாகி நானே போகராக மாறி அனைத்தையும் செய்யமுடிகிறது என்பதை நினைத்தால்... நான் போகரின் மறுபிறப்போ என்றும் சிந்திக்க வைக்கிறது. உங்களிடம் மேலும் பல விஷயங்களை விவாதிக்க ஆவலாக உள்ளேன். நன்றி, வாழ்த்துகள் நண்பா!”

இவரைப்பற்றி நான் இன்று அலசி ஆராயும்போதுதான் இவர் எழுதிய கட்டுரைகளையும், புத்தகங்களையும் காண நேர்ந்தது. சிலவற்றைக் கூர்ந்து வாசித்தேன். இவர் BBC வானொலிக்குத் தந்த பேட்டியையும் கேட்டேன்... அசந்து போனேன்! இவருடைய புத்தகத்தைப் படிக்கும்போதுதான் இவருக்கும் நிகோலா டெஸ்லாவுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் அவர் சிந்தனை, ஆய்வு, உருவ நிலையில் உள்ளதை அறிந்தேன். போகர் கையாண்ட, மின்காந்தவியல் சூத்திரம் மூலம் செலுத்திய வான்ரதம், பூமியை ஸ்கேன் செய்த படிகமானி கதிர்கள், ஆகாய விமானத்தை இருளாக்கிப் (Stealth) பார்வைக்குப் புலப்படாமல் மறைக்கும் சூத்திரம் என பலதும் நினைவுக்கு வந்தன. பல ரிஷிகள் போதித்த நுட்பங்களை அன்றே போகர் வடிவாக்கினார்.

என் ஆங்கிலக் கட்டுரைகளும் பதிப்புகளும் எங்கோ யாருக்கோ பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவையும் தருகிறது. அலெக்ஸ் அளவுக்கு நான் எதையும் முனைப்பு எடுத்துச் செய்யவில்லை என்றாலும், அவர் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை. எல்லாம் சிவசித்தம்!
   
-எஸ்.சந்திரசேகர்



சனி, 11 ஜூன், 2022

ஆவணம் பேசுகிறது!

"கொளநல்லி வழியாக இன்று கொடுமுடி வந்தேன். காவிரிக்கரையில் அமைந்த ஸ்ரீ மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் பாழடைந்து உள்ளது. அதைப் புதுப்பிக்கும் பொருட்டு உள்ளூர் செட்டி வியாபாரிகள் நிதி திரட்டுகிறார்கள். இன்று சிவனுக்கான விசேஷ நாளாம், மக்கள் கூட்டம் அலைமோதியது. சமயப்பணிக்கென இவ்வூரில் பதினொரு பிராமண குடும்பங்கள் உள்ளன. இத்தலம் புராதன வரலாறு உடையது என்பதை அறிந்தேன்" என்று ஆங்கிலேய சர்வேயர் புக்கானன் செப்டம்பர் 5, 1892 தேதியிட்ட தன்னுடைய பயணக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

எங்கள் ஊரின் இக்கோயிலில் அன்று போதுமான அளவில் பணியாளர்கள் வேலை செய்துள்ளனர் என்ற விபரம் அண்மையில் பார்த்த ஒரு பழைய ஆவணத்தில் இருந்தது.

ஸ்தானீகம், பரீச்சாரகம், சுயம்பாகம், அர்ச்சகம், வேதபாராயணம், பஞ்சாங்கம், யக்ஞோபவம், மணியம், சங்கீதம், மெய்க்காவல், மாலைகட்டி, நாதசுரம் முகவீணை, ஒத்துவூதல், தவுல், டவண்டை, கைத்தாளம், திருச்சின்னம், மத்தளம், நட்டுவம், தித்தி, தாசி, மாராயம், திருவலகு.

சுமார் எண்பது ஆண்டுகளுக்குமுன் எங்கள் ஊர் சிவாலயத்தில் இருந்துள்ள பணி இடங்களின் பெயர்கள்தான் இவை. 1943 ஜூன் மாதம் கோயில் ஆவண ஊதியப் பட்டியலில் ஏழு தாசிகள் பணியில் இருந்துள்ளனர். அன்று மாத ஊதியமாக தாசிகள் ரூ 4 அணா 8, இசைக் கலைஞர்கள் அதிகபட்சமாய் ரூ 8 அணா 4 வரை பெற்றனர்.

இன்று தாசிகள் இல்லை. ஆனால் மாராய திருவலகு, கூட்டி, எள்ளுக்கிழிகட்டு தீபம் விற்பனை, ஆகிய பணிகளுக்கு Scale of pay range 10000 -31500 plus allowances as per TNHRCE rules என்று உள்ளது. சுயம்பாகம், சைவ/வைணவ முறையில் சமையல்/பிரசாதம் தயாரிக்க மடைப்பள்ளி உதவியாளர் (மடையர்) ஊதிய நிலை 7100-13200 மற்றும் இதர படிகள் என்ற அளவில் உள்ளது.

சம்பளப் பட்டியலில் அன்று இடம்பெற்ற தாசிகளான அங்கமுத்து, சவுந்திரம்,  வெங்கலெட்சுமி, ஆகியோர் சம்பள ரெஜிஸ்தரில் தங்கள் கையொப்பத்தை இட்டுள்ளனர். இவர்கள் குறைந்தபட்ச கல்வி அறிவைப் பெற்றிருந்தனர் என்பது ஆச்சரியத்தைத் தந்தது.

சிவன் கோயிலில் உழவாரப்பணி செய்ய இன்று நல்ல ஊதியம் கிடைக்கிறது. நாமும் சிவனே என அப்பணிக்குப் போய்விடலாம். நம் ஜாதகத்தில் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அதற்கும் சிவசித்தம் அருள் வேண்டுமே! 😀

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 2 ஜூன், 2022

வஞ்சபக்தியின் விளைவு!

அண்மைப் பதிவில் ஸ்ரீஅரவிந்தரின் கட்டுரையைப் படித்துவிட்டு ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார். “சார், நான் சிவனை வணங்குவேன், தமிழை விரும்புவேன், திருமுறைகள் பிடிக்கும் வேதங்களையும் ஓதுவோரையும் பிடிக்காது, பீஜ மந்திரங்களில் உடன்பாடில்லை, ஆரியக் கலப்புள்ளதை எதிர்க்கிறேன். மிகக் கடுமையாய் விமர்சிப்பேன். ஆனால் சிவன்மீது அலாதி பக்தி உண்டு. எனக்கும் யோகம் சித்தம் ஆகியவற்றைப் பெறவேண்டும் என்ற ஆசை உள்ளது. நிறைவேறுமா?” என்று அந்த மென்பொருள் எஞ்சினியர் கேட்டிருந்தார்.

“சிவனை வணங்குவது நல்ல விஷயம். சக்தி அம்சமாம் தமிழை நேசிப்பதும் நன்று. திருமுறைப் பதிகங்களைப் பாராயணம் செய்வதும் நல்ல விஷயம். வேதங்கள் யுகாந்திரங்களாய் உள்ளன. ஆரியன்/ வேதியன்/ வேதபுரீசனாம் சிவன்தான் அதைப் படைத்தான். ஓங்காரத்துடன் பீஜங்கள் சேர்வது சக்தியூட்டும் அலைகள். உருவேற்றப்படும் மந்திரங்களில் அது கோர்வையாக இடம்பெறும். 

நான்மறை வேதங்கள் சுயம்புவாய் என்றென்றும் இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அது உங்களை என்ன செய்தது. சிவனுக்கும் உங்களுக்கும் என்ன பகை? அவன் உங்களுக்கு ஆலகால விஷத்தையா ஊட்டினான்? பக்தி இருந்தும் உங்களுக்கு ஏன் இந்தக் காழ்ப்பு? சிவனின் வெளிப்பாடுகள் எத்தனையோ இந்தப் பிரபஞ்சத்தில் உண்டு. நீங்கள் உங்கள் வேலையில் எல்லா மென்பொருள் கோடிங் மொழிகளையும், வடிவாக்கங்களையுமா கற்றுள்ளீர்கள்? எது தேவையோ அதில் மட்டும்தானே பயிற்சிபெற்றுப் பணி செய்கிறீர்? அப்படித்தான் மறைகளும், மந்திரங்களும்! அதைக் கற்க ஒரு பிரிவினர் உண்டு. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒசையின்றி ஒதுங்கிடுங்கள். கணினி உபயோகிக்கும் அனைவரும் அதன் பின்புலத்தில் மறைவாக உள்ள செயலாக்கக் கட்டளை மென்மொழியையா கற்கிறோம்? அதை வெறுத்து என்ன பயன்? எனக்கு வேதங்கள் மற்றும் பீஜங்கள் தெரியாது, அதனால் நான் அதை நிந்தித்து வெறுக்க வேண்டும் என்று எவன் சொன்னான்? 

தில்லையில் நான்மறைகள் எந்நேரமும் ஈசனைக் கைகூப்பித் தொழுகின்றன என்று அப்பர் அடிகள்/ மாணிக்கவாசக சுவாமிகள் சொல்லியுள்ளனர். தேவாரம் அருளிய அவர்களே சொன்னதால் நான் வேதத்தை ஏற்கவேண்டும் என்று எவன் சொன்னான் என்று நீங்கள் தர்க்கம் செய்தால் அது நிந்தனை. பீஜமந்திரங்களை, மறை ஓதுவாரை நீங்கள் இகழ்ந்தாலும் அது நிந்தனை. உங்களுடைய கொள்கைகள் சிவநிந்தனையை ஈட்டும் என்றால் அதை உங்கள் அளவில் மட்டும் பழக்கிக்கொள்ளுங்கள். அதை இச்சமூதாயத்தில் பரப்பவேண்டாம். ஏன்?

சிவ வடிவங்களை அனுபூதிகளை ஏற்கவிடாமலும், மந்திரங்களைப் பழித்துப் பேசினாலும், இறையை உணரவிடாமல் துர்போதனைகள் செய்தாலும் அது சிவநிந்தனை! இச்செயல்களால் தள்ளினாலும் போகாத அளவில் பாவங்கள் வந்துசேரும் என்று போகர் சொல்கிறார். உங்களுடைய சிவதுவேஷத்தால் வந்த பாவ வினைகளை உங்கள் சந்ததிகள் மீது சுமத்திவிட்டுப்போனால் உங்கள் ஆன்மாவுக்கு வேலை அதிகம். மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல்பட்டு ஊழ்வினைகளைத் துடைக்கப் பிராயச்சித்தம் தேடவேண்டும். உங்களைக் கெடுத்தவனுக்கும் இதே கதிதான்! இப்படி இருக்கும்போது நீங்கள் எங்கே அடுத்த நிலையைப்பற்றிக் கனவு காண்பது? எப்படி எதைப் பேசினாலும் வெளிப்படுத்தினாலும் சிவநிந்தனை என்றால் இது என்ன சன்மார்க்கம் சனாதனம்? என்று உங்களுக்குக் கோபம் வரும். ஆம், அதுதான் மெய்! சமயமானது தனிநபர் ஒழுக்கக் கட்டுப்பாட்டு மையம்.

முதல் நிலையில் என்னென்ன நிந்தனைகள் செய்கிறீர் என்பதை நீங்கள் மதிக்கும் நடுநிலையான ஒரு சைவசமயப் பெரியவரிடம் கேட்டுத்தெரிந்து சரி செய்துகொள்ளுங்கள். சிவபாதகங்களை மனத்தில் நினைத்தாலும், வாக்கில் சொன்னாலும், செயலில் வெளிப்படுத்தினாலும் ஏற்றம் ஒருபோதும் வராது. அவன் மன்னித்தருள உங்களுடைய பக்தி மூடபக்தி அல்ல, பாரபட்சம் கொண்ட வஞ்சபக்தி!

-எஸ்.சந்திரசேகர்

வியாழன், 21 ஏப்ரல், 2022

பாடலைப் பற்றிக்கொண்டு...

சித்தர் பாடல்களை நிதானமாய் வாசித்துப் பொருளறிந்தால், அதன் நுட்பத்தை அகத்தே (பிண்டத்தில்) யோக மார்க்கத்திலும், புறத்தே (அண்டத்தில்) பிரபஞ்சத்திலும் உணர முடியும். அநேகர் இதில் ஒன்றை மட்டுமே புரிந்து வைத்துக்கொண்டு, அப்பாடல் உரைப்பது இப்படியல்ல, அப்படியல்ல என்று தர்க்கத்தில் ஈடுபடுவார்கள். இறுதியில் சித்தரையே கிண்டல் செய்வதோடு, “சும்மா எதையோ பாடலில் அடித்து விட்டுள்ளார். அப்படி இல்லையென்றால் ஒருவேளை இது ஆரிய, ஓரிய சதியால் மாறியிருக்கும்” என்ற நிலைப்பாட்டைக் கொள்வார்கள். மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றால் அதை மெய்யா/பொய்யா எனக் கண்டுணர்ந்துத் தெளிய மனத்திட்பம் வேண்டும்.

நான் இந்த ஏழாண்டுகளில் சுமார் பத்து சித்த நூல்களை ஓரளவுக்குப் படித்து உள்வாங்கி இருப்பேன். முழுவதும் வாசித்துக் கிரகிக்க நம்மால் ஆகாது. அதுபோக சிறிதும் பெரிதுமாய் அவ்வப்போது ஆதாரத் தேவைக்காகச் சிலவற்றைப் படித்திருப்பேன். ஆனால் பெருநூலை முழுவதும் படிக்காமல் அதில் எனக்கு வேண்டிய பாடலை எப்படி எடுப்பது? அது சிரமமான வேலைதான்! 

அதனால்தான் கண்கள் ஸ்கேன் செய்யும்போது எனக்கு என்ன தெரியவேண்டுமோ அப்பாடலை மட்டும் சித்தர்பிரான் காட்டுவார். அப்பாடலின் முன்/பின் பாடல்களையும் சேர்த்து வாசித்து அறிந்தாலே எனக்கு வேண்டிய தகவல் கிடைத்துவிடும். இல்லாவிட்டால் நான் எங்கே இத்துணை நூல்களை அலசிப்பார்த்துக் கரை ஏறுவது? எல்லா சித்த நூல்களையும் படித்து அதிலுள்ள எண்ணற்ற விஷயங்களை அறிய வேண்டுமானால் இப்பிறவியே போதாது. இதற்காக இன்னொரு பிறவியா எடுக்கமுடியும்? நான் என்றுமே ஈசனிடம் அதைக் கோரியதில்லை. நான் நிறை மதிஞராக இல்லாமல் போனாலும் கவலையில்லை, நாதன் தாள் பணிந்துப் பிறவாமல் இருக்கவே விரும்புகிறேன்.

ஒரு சித்தர் பாடலை முன்னும் பின்னும் படித்துப் பொருளறிந்தும், அதே சமயம் தனிப்பாடலாய் அதைப் படித்துப் பொருள் தேடவேண்டும். எடுத்த எடுப்பிலேயே, அதற்கு இதுதான் பொருள் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது.  இங்கே உதாரணத்துக்கு ஒன்றைத் தருகிறேன். 

பரமகுரு காலாங்கி @ கமலமுனி @ கஞ்சமலை சித்தரைப் பற்றியது. “சோதி திகுதிகு நடமிடும் பெருமாளே” என்று அருணகிரியார் பாடியதுபோல், மூலத்திலிருந்து எழுந்த வாசிக்கால் ஓடித்திரிந்து, எண்ணிக்கையுடன் அஜபை நடனமாடி, மலைமேலே சங்கமித்துச் சுடரொளி ஜோதியாய் ஒளிப்பிழம்பாய் நிலைத்தால் அதுவே சித்-ஆகாசம் என்கிற சகஸ்ரார கடுவெளி. நம்முள்ளே ரசவாதம் சமைக்கும்போது ஒளிரும் மேருகிரியே கஞ்சமலை! 

இங்கே மலைமேல் நடப்பதுதான் புறத்தே கயிலாய மேருவிலும் நடக்கிறது. அதிகாலை இருளில் மேருமலைச் சாரல் பழுக்கக் காய்ச்சிய தங்கமாய் ஒளிரும். வாசியில் அமர்ந்த சித்தரிஷிகள் யாவரும், ஒருங்கே பச்சிலைப்பூசி துருத்திக் கொண்டு ஊதும்போது ரசவாதம் நிகழ ஒரு சாமம்வரை அது ஜொலிக்கிறது. ஆகவே அண்டத்தில் பிண்டத்தில் நடப்பது என்னவோ ஒன்றுதான். வாசிக்கால் என்னும் துருத்தியால் தீர்க்கமாய் ஒருநிலைப்படுத்தி சுழுத்தீயில் சங்கமிக்கச் செய்தால் அதுவே கோடி சூரிய ஒளியுடன் பிரகாசிக்கும் மலை. இதை உங்களுக்காக எளிமைப்படுத்தினேன். யோகிகள் இதையே இன்னும் ஆழமாய் விளக்குவார்கள். 

பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கிணங்க, கஞ்சமலையரின் கால் பற்றி அத்தடத்தில் வந்தோரே அகோரர், மாளிகைத்தேவர், நாதாந்தர், பரமானந்தர் மற்றும் போகர். ஆக கஞ்சமலை என்பது நம் சிகரத்தில் இருப்பதுவா, சேலம் அருகே இருப்பதுவா என்று வாதித்துக் குழம்பக்கூடாது. அறம் பொருள் இன்பம் சங்கமித்தால் அதுவே நமக்கு வீடு தரும் ஜோதிமலை, சொர்ணமலை, பொன்மலை, கஞ்சமலை! ஸ்ரீ சித்தேஸ்வரர் அருள் புரியும் கஞ்சமலைக்கு நாமும் போய் தரிசிப்போம். கோயில் அலுவலக பேசி: 4272491389.

- எஸ்.சந்திரசேகர்



ஞானக்கூத்து!

உயிர்சக்தியின் நாதமாக விளங்கும் சிவனே அனைத்திலும் வடிவமாகிறான். அவனுடைய திருநடனம் என்றால் அது வெறும் அம்பலத்தோடு நின்றுவிடாது. அவனே கருவாய் உள்ள வேதங்கள் ஆடும், பஞ்சபூதங்கள் ஆடும்,;ஆகமங்கள் ஆடும், கீதங்கள் ஆடும்; ஆறாதார சக்கர அண்டங்கள் ஏழும் ஆடும், புவனம் முழுதுமே ஆடும். அது ஞானவடிவான திருக்கூத்து என்கிறார் திருமூலர். அப்படி இருக்கும் அவன் பஞ்சமுகனாய் இருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழிலை (பஞ்சகர்தவ்யம்) நடத்துகிறான்.

வேதம் என்றால் அது புருஷ அம்சம், மொழி - சமஸ்கிருதம். சந்தேகமின்றி இதை உறுதியாய் மனத்தில் நிறுத்துங்கள். அகளமும், சகளமும், அகளசகளமுமாய் (அருவம் உருவம் அருவுருவம்) உள்ள சிவனானவன் சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம், மதுரை, திருவாலங்காடு ஆகிய பஞ்சசபைகளில் ஐந்து விதமாக ஆடினான். அவை ஆனந்த தாண்டவம், திருத்தாண்டவம், திரிபுர தாண்டவம், சந்தியா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் என ஐந்து நடனங்கள். சிவனன்றிச் சக்தி இல்லை என்பது உண்மை. உமையவள் சிவனின் இடபாகத்தில் தேன்மொழியாய் (தமிழ்) உள்ளாள். சிவன் ஆடினால் சக்தியும் அல்லவோ ஆடவேண்டும்? ஆக, தேன்மொழியாம் தமிழே அவன் பாகமாய் விளங்கும் தேவியும் ஆடினாள் என்று திருமூலர் மிகத் தெளிவாக உரைக்கிறார்.  

சமஸ்கிருதத்தைவிட தமிழ் உயர்ந்ததா, தாழ்ந்ததா, நிகரானதா? அதை இப்பாடலில் திருமூலரே தெளிவாக்கிவிட்டார். நாதவிந்துவாக சிவனும் சக்தியும் சரிநிகராய்க் கலந்துள்ளனர். புருஷகலை மொழியின் ஆதாரமாய்த் திகழும் சிவன் தன் ஸ்திரீகலை பாகமாய்த் தமிழைக் கொண்டுள்ளான் என்று திருமந்திரம் பாடலில் திருமூலர் இயம்பியதை எள்ளி நகையாடி கண்டித்துப்பேசி சிவநிந்தனைப் புரிய இனியும் யாருக்கேனும் துணிவு வருமா? 

இது புரியாமல் ‘ஆரியம் அழிந்து ஒழிந்தது’ என்று சிவனை இகழ்ந்து பேசிவிட்டுத் தமிழை வணங்குகிறேன் என்று பேசுவது அமங்கலம், அது பிரம்மஹத்தி தோஷத்தைத் தரும். நமக்கு வடமொழி புரியாமல்/ பிடிக்காமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் ஒருபோதும் அதை வெளிக்காட்டிச் சிவபாதகச் சொல்லைப் பேசக்கூடாது, சிவபாதகச் செயலைப் புரிந்திடக்கூடாது.  

-எஸ்.சந்திரசேகர்




செவ்வாய், 19 ஏப்ரல், 2022

கதை சொல்லும் படம்!

 


முகநூலில் இந்த ஓவியம் என் கண்ணில் பட்டது. அது பல விஷயங்களைப் போதித்தது. மழையில் வீட்டின் கூரை ஒழுகுகிறது. பெரிய கட்டில் ஒரு பக்கம் காலில்லாமல் செங்கற்கள் மீது நிற்கிறது. அதன்மீது ஒட்டுமொத்த குடும்பமும் ஆனந்தமாய்த் தூங்குகிறது. ஒவ்வொருவரின் முகத்திலும் நிறைவே இருக்கிறது. அசதியோ வேதனையோ கஷ்டமோ சற்றும் தெரியவில்லை. இருக்கும் ஒரு போர்வையே அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறது. பூனையும் நாயும் இவர்களுடன் படுத்துத் தூங்குகிறது. அதுபோக உள்ளே சேவலும் ஜன்னலில் குருவிகளும் அந்த அறைக்குள் இடம் பெற்றுள்ளன.

பார்த்த மாத்திரத்தில் இது சாதாரண படம் போல்தான் எண்ணத் தோன்றும். ஆனால் ஆழ்ந்து உற்றுப் பார்க்கப்பார்க்க அது உங்கள் ஆன்மாவுடன் பேசுவதைக் கவனிப்பீர்கள். மனம் பெரிதாக இருக்கும்போது, வசிக்கும் சிறிய இடமும் விசாலமாகவே தெரியும். அதற்கேற்ப வாழ்ந்திட மனப்பக்குவம் வந்துவிடும். ஆனால் குறுகிய மனத்துடன் வாழ்ந்தால் ஒய்யார அரண்மனையும் போதாது. 

சிறுவயதில் நாங்கள் எல்லோரும் கோடையில் கிராமத்திற்குச் செல்லும்போது, எங்களைப் பரவசப்படுத்தியவை ஓட்டுவீடு, வயல், காவேரி, கோயில், புகைவண்டி ரயில். அதைத்தாண்டி வேறு எதுவும் இருந்ததில்லை. இரவு நேரம் அண்டை வீடுகளின் வாசல் திண்ணையில் பெரியவர்கள் பனையோலை விசிறியுடனும், குடிக்க ஒரு சொம்பு நீரையும் வைத்துக்கொண்டு அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். கே.பி.எஸ் திரையரங்கில் இரவு நேர சினிமா காட்சி தொடங்கும் அடையாளமாக ‘பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா’ பாடல் ஒலிபெருக்கியில் கேட்கும்.

ஒரு பெரிய உருளியில் சோறு போட்டு, செக்கில் ஆட்டிய கடலெண்ணெய்யில் வதக்கிய சுங்கங்காய்/ சுண்டைக்காய் வத்தக்குழம்பு ஊற்றிப் பிசைந்து அதை அத்தைப்பாட்டி எங்களுக்குக் கதைகள் சொல்லியபடி உள்ளங்கையில் ஒவ்வொருவருக்கும் வைப்பாள். நாங்கள் பசியாறும்வரை உணவுச்சுற்று நீடிக்கும். வெய்யிலுக்கு மோர் சாதமும் உலர்ந்த உப்பு நாரத்தையும் ஈடிணையற்றது. 

பெரிய ஊஞ்சலில் அகலமான பலகையின் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சங்கிலியைப் பிடித்துக்கொள்ள இடம்பிடித்து நங்கள் சந்தோஷமாய் ஆடுவோம். இரவு எட்டுமணி ரயில் வண்டி எழுப்பும் ஒலி கேட்டதும், தரையில் பாய்களை விரித்துபோட்டுப் படுத்திடுவோம். எல்லோருக்கும் போதுமான தலையணைகளும் போர்வைகளும் இருக்காது. பாட்டி தன்னுடைய பழைய புடவையை எடுத்து எங்களுக்குப் போர்த்திட, உத்தரத்தில் சுற்றும் மின்விசிறியைப் பார்த்தபடி அதன் ஓசையிலேயே உறங்கிப்போனோம். 

சிறுவயதில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பருவத்தில், சூடு தகிக்கும் ஓட்டு வீட்டில் கொள்ளுப்பாட்டி, தாத்தா, பாட்டி, வந்துபோகும் அக்கம்பக்கத்து உறவுகள் என சொந்தங்கள் நிறைய இருந்ததால் அந்த வீடே எங்கள் உல்லாச விருப்பத்தலமானது. ஆனால் காலவோட்டத்தில் அவர்கள் மறைய, நம் சிறுவயது நினைவுகள் இப்போது வந்து போகும்போது, மனத்தில் ஏக்கமும் வெறுமையும் வருவது உண்மைதான். அத்தகைய ஒரு நினைவூட்டல் தாக்கத்தை இந்த ஓவியம் ஏற்படுத்தியது. 

-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

புலப்பட்ட ரகசியம்!

நல்ல பாம்பு படம் எடுத்துக் கொத்தும் என்பது தெரியும். ஆனால் மனித ஜாதியில் ஒரு பெண்ணானவள் பாம்பின் கெடு பலன்களுடனும் பழிதீர்க்கும் குண அம்சத்துடனும் வாழ்ந்து வருவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட அவளுக்கே தன்னைப் பற்றியோ, நடக்கும் சம்பவங்களின் சூட்சுமமம் பற்றியோ எவ்விபரமும் தெரியவில்லை. 

அவளைக் காதலிக்க நினைக்கும் ஆண் மர்மமாக இறந்திடுவான், அவன் காதலை வெளிப்படுத்தினாலோ அவளுடைய பொருளைக் கையகப்படுத்தினாலோ ஒரு மண்டலத்தில் சாவான், அவளுக்கு நிச்சயமான மாப்பிள்ளை பரலோகம் போவான், அப்படியே மணமானாலும் சித்தபிரம்மைப் பிடித்து ஓடிவிடுவான். தாம்பத்தியம் இல்லாமல் கணவன் என்ற நிலையில் அவளைப் பராமரிப்பவன் பிழைத்தான். பணக்காரி என்றாலும் ஒரு சராசரி பெண்ணாக வாழ முடியவில்லை. அவளுடைய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் இவ்விதம் அமைந்துவிட்டது.🤔

இது மர்மநாவல் அளவுக்குத் திகிலாக உள்ளதே என நினைக்கத் தோன்றுதா? புனையப்பட்ட கட்டுக்கதையோ என்று நினைக்கிறீர்களா? இல்லை. சொன்னது அத்தனையும் உண்மை! அந்தப் பரிதாபப் பெண் என் வெளிநாட்டு வாசகி. தன் வாழ்க்கையில் நடந்த சோகங்களை ஏமாற்றங்களை அண்மையில் சொல்லி வருத்தப்பட்டார். பூர்வஜென்ம வாசனை விடாத குறையாகத் தொடர்ச்சி நடக்கிறது என்பதை நான் சொல்லாதவரை எதுவும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

அவர் உடலில் சர்ப்பத்தின் ஆன்மா பூட்டிக்கிடப்பதைச் சொன்னேன். ராகு- கேது வழியே பாவங்களாய் வரும் மூதாதையர் கைவரிசையும் காரணம். இதற்கு விமோசனம் இல்லை என்பதால் ஆன்மிக வழியில் மன அமைதியுடன் வாழ்க்கையைக் கடத்துங்கள் என்றேன். அறுபதை எட்டும் அவர் பரிகாரம் செய்து இனி ஆகப்போவதும் ஒன்றுமில்லை. ஒரு பெண் குழந்தை தக்க வயதில் ருது ஆவதில் சிக்கல் இருப்பதும், சமைந்த கிழமை ஹோரை நட்சத்திரம்கூட அவளுடைய மணவாழ்வைக் காட்டிக் கொடுக்கும்.

அவருடைய ரகசியத்தை ஆணித்தரமாக நான் சொன்னபோது அவர் அதிர்ந்தார். அவர் வசிக்கும் பகுதியின் பெயரோ/ அந்த இடத்திற்கு அருகிலோ பாம்பைக் குறிக்கும் விதமாய் ஏதேனும் உள்ளதா என்று அப்போது கேட்டேன். அதற்கு அவர் ஆச்சரியத்துடன், 'ஐயா, நான் நிற்கும் இடத்திற்கு எதிரே சாலையைக் கடந்தால் பெரிய புற்று உள்ளது' என்றவர் உடனே அழுதுவிட்டார்!

அவரை அமைதிப்படுத்தினேன். 'நீங்கள் பெரிய படிப்பு படித்துள்ள திறமையான உழைப்பாளி. இனி தனியாளாய் எந்தப் பயமுமின்றி ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் கால்பதித்து முன்னேறுங்கள். உங்கள் அமானுஷ்ய பின்புலம் அறியாமல் தொழிலில் யாரேனும் உங்களைக் கவிழ்க்க வஞ்சம் தீட்டினாலோ, காதலித்து உறவாடிக் கெடுத்தாலோ, ஐயோ பாவம்... அவன் ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வது அவன் குடும்பத்திற்கு நலம் பயக்கும்' என்றேன். வாசகி வாய்விட்டுச் சிரித்தார். 'ஐயா.. இனி எனக்குக் குழப்பமில்லை... நான் தெளிவாக உள்ளேன். மிக்க நன்றி' என்று கூறினார். என்னுடைய எல்லா நூல்களையும் அவர் வரவழைத்து வாங்கி வைத்துள்ளார். 

இவருக்கு மணமாகி இருபது ஆண்டுகள் ஆகிறது. இவருடைய வயதான கணவர் பள்ளிக்கல்வியோடு நின்றவர். தற்சமயம் ஒரு நண்பனாக, கர்த்தாவாக, தொழில் ஆலோசகராக மனப்பக்குவத்துடன் இந்த அம்மையாருடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய கடந்தகால வாழ்க்கையை அறிந்து மணந்தார். ஆனால் இன்னும் தன் மனைவியின் பிறப்பு ரகசியத்தை அறியார்.

வாசகியின் பெயர்? மாணிக்கப்பரல் என்று சூசகமாகப் பொருள் தரும். அவர் கருட பஞ்சமி, நாக சதுர்த்தி, பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி ஆகிய தினங்களில் தன்னை மறந்து பக்திப் பரவசத்தில் இருப்பார். சிவசித்தம்!

-எஸ்.சந்திரசேகர்



மிரட்டும் சிகை அலங்காரம்!

அக்காலத்தில், சமைந்த பெண்ணுக்கு 10-15 வயதிலேயே திருமணம் செய்து வைப்பது வழக்கத்தில் இருந்தது. அவள் சிறுபெண்ணாகத் தெரிவதால், வாலைக்குமரியாகவே பாவித்து அவளுக்குத் தலை அலங்காரம் செய்வார்கள். நெற்றிச்சுட்டி, ராக்கொடி, சூரிய சந்திரர், ஜடைவேணி, குஞ்சம் என சகலமும் தலைமுடியில் வாகாய்த் தைத்து விடுவார்கள். 

இக்காலத்தில், மணப்பெண்ணுக்கு 25 - 35 வயதில்தான் திருமணம் நடக்கிறது. மேற்படி அலங்காரம் சினிமா பாணியில் மாறுபட்ட விதமாய்ப் பியூட்டி பார்லர் பெண் செய்து விடுகிறாள். அலங்கார ஜோடனைகள் சம்பிரதாயப்படிதான் செய்வாள் என சொல்வதற்கில்லை. அவள் வாலையை அறிவாளா, கோதையை அறிவாளா? 

இப்படத்தில் மஹா'கனம்' பொருந்திய மணப்பெண்ணுக்குச் செய்த அலங்காரம் விசித்திரமாய் உள்ளது. பூஜடைப் பின்னலில் உள்ள பெரிய நாகம் எதேச்சையாகச் சொருகி இருப்பதுபோல் தெரிந்தாலும், அது அவளுடைய நாகதோஷத்தையோ / நாக கன்னிகையின் மறுபிறவியாகவோ வெளிக்காட்ட வாய்ப்பு உள்ளது. எதுவும் காரணமின்றி அமைவதில்லை. நம் அண்மைப் பதிவில்தான் இப்படிப்பட்ட என் வாசகியின் சரிதத்தைப் பார்த்தோம். 

-எஸ்.சந்திரசேகர்



பாஸ்கர பூஜை!🌞

நம் தென்னகத்தில் உள்ள பழமையான சில கோயில்களின் கருவறையில், லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு, ஆண்டுதோறும் பங்குனி, 23 முதல் 29 வரை, காலை, 6:15 மணி முதல், 6:45 மணி வரை நடக்கிறது. வெவ்வேறு பாகையில் அமைந்துள்ள தலங்களில் சூரிய உதயாதி நேரத்தைப் பொறுத்து இது மாறும். 

அக்கால ஸ்தபதிகள் கட்டியது மிகுந்த ஆச்சரியத்தைத் தரும். இன்னும் சில கோயில்களில் வெளிச்சுற்றிலுள்ள 12 தூண்களில் மாதம்-ராசி வாரியாக ஒளி விழும். ஆயாதி கணிதம், ஸ்தபத்ய வாஸ்து, திரிகோணவியல், வானசாஸ்திரம், ஸ்படிக-தர்பன் பௌதிகம், சௌரதரிசன சாஸ்திரம், போன்றவற்றைத் தங்கள் சிற்ப கலையில் வெளிக்காட்டிய விதம் பிரமிப்பைத் தரும். சித்திரை முதல் நாள் மேஷ ராசியில் துல்லியமாய்க் கிழக்கில் பானுவின் தேர் வரும். 

'சித்தர்களின் அறிவியல் பங்களிப்பு' (விஜயா பதிப்பகம், கோவை) என்ற என் நூலில் இதைப்பற்றி உள்ளது.

இவ்வண்ணம் வடிவமைத்த பண்டைய காலத்து மயன் வம்சத்து விஸ்வகர்ம ஸ்தபதிகளின் திறமைக்குத் தலை வணங்குவோம். 🙏🙏

-எஸ்.சந்திரசேகர்



நல்வழியைத் தேடி!

போகருடைய நூலிலுள்ள பாடலைத் தொடர்ச்சியாய்ப் படித்தாலும் தனித்து எடுத்துப் படித்தாலும் அர்த்தமுள்ள போதனைகள் உண்டு. அதில் வேதசாரம், குறள்நெறி, ஜென் தத்துவம், நல்வழி, என எல்லாமே வந்துவிட்டுப் போகும். இவை எல்லாமே ஒன்றுதான் என்றுணர் என்று சொன்ன ஔவையின் வாக்கியம் உண்மைதான் என விளங்கும்.

இவர்கள் இத்தனைச் சொல்லியும் ஏன் இவையெல்லாம் சராசரி மனிதனின் புத்திக்கு எட்டாமல் போகிறது? அவரவர்க்கு என தனியான காழ்ப்புக் கொள்கைகளை வகுத்துக்கொண்டு அதற்கேற்ப தத்தம் ஆசான், குருமார், தலைவர், எவ்விதம் போதித்தாரோ அவ்விதம் பின்பற்றும் கூட்டத்தினரே அதிகம். எண்ணற்ற நூல்கள் இருந்தும் பயனற்றுப்போவதும் இதனால்தான். இல்லாவிட்டால் ஔவையின் சொல்லை மதியாமல் போவாரோ? 

இவர்கள் சித்தர்கள் என்பதை மறந்துவிட்டு வெறும் நூலாசிரியர்கள் என்ற மட்டில் பார்த்தால், சராசரி வாசகனுக்கு அச்சங்கதிகள் புரியாமல் போகுமோ? ஆனாலும் புரிவதில்லை! அதில் பிழை, பொய், அவதூறு உள்ளனவா என்று பூதக்கண்ணாடி வைத்து ஆராயும் திறன் மட்டும் உள்ளது. அது இருந்தால் மெய்ஞானம் வரவேண்டுமே, ஏன் வரவில்லை?

குரு/ஆசான் என்பவர் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த பண்டிதனோ, யோகம் முடித்து ஞானம் கைவரபெற்றவராகவோ இருக்கவேண்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் குருவுக்கான எந்த இலக்கணத் தகுதி லட்சணங்களும் தேவையில்லை. நிகழ்வாழ்வில் நாம்தான் ஒருவரைக் குரு என்று அழைக்கிறோம். தான் தேர்ந்தெடுத்த குரு தன்னை நல்வழியில்தான் அழைத்துச் செல்வாரா என்பதைக் காலமும் அனுபவமும்தான் சொல்லும்.

நீரில் அணைந்துபோகும் சுடர்விளக்கைக் கையில் ஏந்திக்கொண்டு யாரேனும் பாழும் கிணற்றுக்குள் வழிதேடி இறங்குவார்களா? சகல வித்தைகளைக் கற்றவன் தர்மநெறி நல்வழிகள் அறிந்தும் வாழ்க்கையில் சீர்கெட்டு இருள் பாதைக்குள் போக விரும்புவானா? தேவையான மார்க்கத்தைக் காணாத பலகோடி மாண்பர்கள் இந்தக் குவலையத்தில் உள்ளனர் என்கிறது இப்பாடல். யோகமும் இறுதியில் ஞானமும் அமைந்தாலே பூரணத்துவம். நிற்க. 

போகர் திருப்பாற்கடலைத் தரிசிக்கும் படலத்தில் இப்பாடல் உள்ளது. இதன் உள்ளார்ந்த பொருளை உணர்ந்தால் அதிலுள்ள அனுபவ மெய்யறிவு புலப்படும்.

-எஸ்.சந்திரசேகர்




வெயிட்டான' காது!

எங்கள் ஊரில் மூதாட்டிகள் இதுபோன்ற காதணிகள் அணிந்தனர். வீடுதோறும் வந்து நெய் காய்ச்சித் தந்த சில பிரிவினர் இதை அணிந்திருந்ததை என் சிறுவயதில் பார்த்துள்ளேன். சாமிக்கு நேர்ந்துகொண்டு செய்த இப்பழக்கம் இப்போது மிக அரிது.

கொப்பு அள்ளி முடிந்த நரைத்த தலை, கையில் பச்சை குத்தி, காதுகளில் பெரிய அளவு பாம்படம் தண்டட்டி தொங்கவிட்டு, எஞ்சிய சிறிய காதோலை ஒன்னப்பூ வகையறாவை மாட்ட இடம் போதாத நிலையில் இருந்த காலமும் உண்டு. ஆப்பிரிக்கப் பழங்குடி பெண்களைப் போல் இவர்களும் காது வளர்த்தனர். வெங்கலம், தங்கம் உள்ளே அரக்கு ஊற்றி இதுபோன்ற வடிவங்களை மாட்டிக் கொண்டனர். 

நாம் குழந்தையாக இருந்தபோது காது குத்தி அதில் தங்கக் கம்பி/ தொங்கட்டான் பூட்டி, கையில் வெள்ளிக்காப்பு/ வேம்புக்காப்புப் போட்டு, இடுப்பில் நாய் காசும், அத்துடன் தாயத்தில் காய்ந்த தொப்புள் கொடியும் அடைத்து அரைஞாணில் அணிவித்தனர். காது சோனையில் துளை வடிப்பது எளிது என்றாலும் அது பெரிய விஷயம்தான்! ஆனால் இந்தப் பாட்டிகளின் 'பேப்பர் வெய்ட்' காதணிகளோ நமக்குப் பிரம்மிப்பைத் தரும்.

-எஸ்.சந்திரசேகர்



"கர்மாவை வாங்கிக்கொள்ளும் தியாகி!"

போகப்பெண், வேசி, தாசி, விபச்சாரி, பொதுமகள் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் ஒரு விலைமாது, உண்மையில் போகத்தைத் தருவாளா, ஞானத்தைத் தருவாளா, ரோகத்தைத் தருவாளா, என்பது அவளுக்கே தெரியாது. ஒரு பெண் இங்ஙனம் ஆவதற்கு ஆண்களின் காம இச்சையே காரணம். அதற்கு அவனுடைய கிரக நிலைகளும் அலைபாயும் மனமும்தான் காரணம். அதைப்போல் ஒருவள் வேசியாவதற்கும் அவள் ஜாதகத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கவேண்டும். 

பொதுமகளிடம் ஒருவன் செல்கிறான் என்றால் அவன் உடல் ரீதியாகக் கூடி அவளுடன் ஈருயிர் ஓருடலாக ஐக்கியப் படுகிறான். எப்போது இந்தத் தீட்டு நிகழுகிறதோ, அப்போதே அவளுடைய பிராரப்த கர்மவினைகள் இவனுக்குச் சரிபாதியாகப் பகிரப்பட்டு இவனை அடைகிறது. Better half என்பது மேலோட்டமாகப் பொருள் தருவதாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்த மெய்ப்பொருள் இதுவே. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி இருந்தாலும், அலைபாயும் மனங்களுக்கு அது விதியாகாது என்பது சிலப்பதிகாரம் முதலே நாம் அறிவோம். (இதைப் படித்ததும் ‘தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை’ என்று கம்பனைப் பற்றிய ஒரு கதை உண்டே என்று நினைக்கக் கூடாது. அது எதிராளிகளின் சூழ்ச்சியால் பரப்பட்ட அவதூறு. அதற்கே அவர் படாதபாடுபட்டார். காலசர்ப்ப தோஷம் பீடித்த காலத்தில் அவர் இயற்றிய இராமகாவியத்தை அரங்கேற்றப் பலகாலம் கஷ்டப்பட்டார்.) 

மாதவியிடம் போகாதவரை கோவலன் உருப்படியாகவே இல்லறம் நடத்தினான். ஆனால் அங்கே போகத் தொடங்கியதும் இவனுக்குச் சோதனைகளும் ஏழரையும் பிடரியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தது. மாதவி ஏன் இவனுடைய வாழ்க்கையில் வந்தாள் என்பதற்கு இவர்களுடைய முன்ஜென்ம பந்தமே காரணம். கலிங்க தேசத்தில் கண்ணகி-கோவலன்-மாதவி ஆகியோராது முற்பிறப்பு ரகசியங்களை அறிந்தோர் பாண்டிய நாட்டில் நடந்ததை ஆச்சரியமாய்ப் பார்க்கமாட்டார்கள்.

ஆக, அனுதினமும் பாவக்கடலில் விழுந்து ஜீவனம் நடத்தும் ஒருவளுடைய பிராரப்த கர்மாவை எப்பாடுபட்டாவது பணம் கொடுத்து வாங்கிக்கொள்ள விழைபவன் உண்மையில் தியாகியே! நாய், பல பாத்திரங்களில் வாய்வைத்துக் கொஞ்சம் கொஞ்சம் குடிப்பதுபோல் இவனும் முகம் தெரியாத வேசிகளின் தீய கர்மாவை வாங்கிக்கொள்கிறான். விட்டகுறையின்றி இவனால் அவள் புனிதமாகி விடப்போவதும் இல்லை! இன்னும் சொல்லப்போனால் இது உலகத்திலேயே பழமையான தொழில் என்று தொல்காப்பியமே சொல்கிறது.

அரண்மனை அந்தப்புரத்தில் எண்ணற்ற பெண்களுக்கு எந்த வேலையும் தராமல் சோறுபோட்டு, தங்க இடமும் தந்து, அவர்களைத் தண்டமாய்ப் பராமரித்துப் போஷித்த வரலாற்றை நினைத்தால் ஐயோ பாவம் என்று தோன்றும். பட்டத்தரசி நீங்கலாக அந்தக் கூட்டத்தில் எவள் ஒருத்தி மன்னனுக்குப் போகத்தை, ஞானத்தை, வெற்றியை, புண்ணியத்தைத் தேடித்தருவாள் என்பது அவனுக்கே தெரியாது. அதுபோல் அவளுடைய எதிர்மறை மற்றும் கர்ம-ரோக-ருண பண்புகள் இவனுக்கு வந்து அதனால் இவனும் இவனுடைய சாம்ராஜியமும் சுவடின்றிப் போகுமா என்பதும் தெரியாது

‘வேசியிடம் சென்ற தறுதலைக்கு செருப்படி’ என்ற சித்த மருத்துவப் பழமொழி சொலவடையாகப் பேசப்படுவதுண்டு. செருப்படி என்பது மூலிகையைக் குறிக்கும். இந்த மாயை இச்சையில் விழுந்து அதுவே மோட்சம் தரும் சொர்க்கம் என நம்பிக்கொண்டு மாண்டவர்கள் அதிகம் என்கிறார் போகர். கலியுகம் 5000-ற்குப்பிறகு ஆண்களின் எண்ணிக்கையும், பெண்களின் நிலையும், ஆணைப் பெற்ற தாய்க்கு நேரும் கதியும் பற்றி கோரக்கர் அன்றே சந்திரரேகையில் உரைத்தார். கலியுகத்தில் எல்லோருமே அருணகிரியாராக உயர் நிலைக்கு வந்திட முடியுமா? அதுவும் வினைப்பயனே!

-எஸ்.சந்திரசேகர்








வெள்ளி, 25 மார்ச், 2022

சுந்தரம்போல் மதிப்பிழந்து மறந்து!

 'சமசுகிருத சொற்கள் எங்கேனும் தமிழில் புகுந்தாலோ அதை உரையாடலில் கையாள நேர்ந்தாலோ என் நெஞ்சம் புண்படும். நல்ல தமிழ் சொற்களுக்கான செயலிதான் உதவும்' என்று தமிழ் கவிஞர் ஒருவர் நாளிதழ் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

புண்படுத்தும் அளவிற்குப் படைப்பால் சமசுகிருதம் கூர்மையான மொழி என்று அவர் சொல்வதாகப் பாவிக்கவேண்டும். உயிரை, நெஞ்சத்தை அசைத்துப் பார்க்க வலியது என்றால் அது இறைமொழியே! சிவனின் சூலாயுதமா சிவனடியார்களின் நெஞ்சத்தைப் புண்படுத்தும்? சிவனின் டமரு ஒலியா அச்சத்தைத் தரும்? ஜிலேபி, சோன்பாப்டி முதல் சல்வார் கமீஸ், காஜாபீடி வரை தூய தமிழில் சொற்களை உருவாக்க எந்த அவசியமும் இல்லை. அது பொழுது போகாத வீண் வேலை! 😂

தமிழ் மீதான காதலால் மொழியைப் போற்றி உயர்த்தி ஏற்றிப்பேசும்போது தன்னை அறியாமலே உணர்வுபூர்வமாக எழும் ஆவேசச் சொற்கள் ஒருபோதும் சிவ நிந்தனையாய் மாறிவிடக்கூடாது. இதில் மிகுந்த கவனம் தேவை! ஆரிய சிவன் வழக்கழிந்து ஒழிந்தான் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்ன மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, சிவ நிந்தனை என்ற மாபெரும் பிழையைச் செய்தார். 🕉️ பட்டிமன்றத்தில், சொற்பொழிவில், உரையாடலில் அன்றாடம் கம்பனும் பாரதியும் பேசப்படும் அளவுக்குக்கூட இவரை ஒரு பொருட்டாய் எவரும் மதித்ததில்லை. அதன் பயனாகத் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் வெட்டப்பட்டுச் சுருங்கிப் படாதபாடு படுகிறது.

தேவாரத் திருமுறைகள் தந்த குரவர்கள் சமசுகிருத ஒலியைக் குற்றமென எங்கும் கருதாதபோது, நாம் ஏன் அதைப்பற்றி அலட்டிக்கொள்ள வேண்டும்? பரந்துபட்ட மொழி வீச்சு உள்ள நம் சமுதாயத்தில் ஒன்றிரண்டு கலப்பு இக்காலத்துப் பேச்சு வழக்கில் வந்தால் ஒரு பாதகமுமில்லை. அதனால் குடியா முழுகிவிடும்?

'மெசின்ல பணம் எடுத்துகினு நைட்டுக்கு பஸ் புடிச்சி ஊர் போய் சேர்ந்ததும் நாஷ்டா துன்னுட்டு, சுருக்க வேலைய முடிச்சுகினு பொழுதோட வந்டேன். பேரன் பகிட்டி பிரியாணி வாங்கி குடுத்தான்' என்று எங்கள் வீட்டு வேலைக்காரம்மா பேசியதை நினைத்துப் பார்த்தேன். இந்த வகையான உரையாடலும் மொழிதான்! இதற்கென சங்கத்தைக்கூட்டி நக்கீரரா வந்து ஒப்புதல் தரமுடியும்? 😂

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 3 மார்ச், 2022

தொடரும் அற்புதங்கள்!

பழைய பதிவு ஒன்றில் ஒருங்கிணைந்த மும்மூர்த்திகளின் உருவமான ஸ்ரீதத்தாத்ரேயரைப் பற்றி நாம் பார்த்தோம். யார் எல்லாம் இவருடைய அவதாரங்களாக வந்து போனார்கள் என்று உங்கள் மனத்தில் கேள்வி எழும். 

கடந்த யுகங்களில் பலவுண்டு என்றாலும் இந்தக் கலியுகத்தில் இதுவரை ஐந்து அவதாரங்கள் நடந்துள்ளன. முதல் இரண்டு அவதாரங்கள் தென்னகத்திலும் மற்றயவை மராட்டியத்திலும் நிகழ்ந்தன. இவர்களுடைய பின்னணியைப் பார்த்தால் அத்திரி-அனுசுயை ரிஷி தம்பதி வளர்த்து ஆளாக்கும் முதல் நிலைப் பருவமாகவே இருக்கும். ஸ்ரீபாதவல்லபர், ஸ்ரீநரசிம்ம சரஸ்வதி, ஸ்ரீமாணிக்க பிரபு மகாராஜ், அகல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்தர், ஷிர்டி ஸ்ரீசாயிநாதர் என அவ்வரிசை வரும். தாணுமாலயனாக தத்தர் வாசம் செய்யும் தலங்கள் என்றால் அது சதுரகிரி, சபரிகிரி, சஹாயாத்ரி, நீலாஞ்சனகிரி, ஸ்ரீசைலம்.

இவர்கள் சராசரி மனித உருவில் வாழ்ந்து சித்துகள் நிகழ்த்தி மகாசித்தி அடைந்தவர்கள். சரி, இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இவர்கள் சித்தியாகும் முன்பாக அடுத்து வரவுள்ள தன் அவதாரத்துடன் உரையாடி, தொடர வேண்டிய பணிகளைக் குறித்துப் பேசிப் பரிமாறும் தருணங்கள் நடந்தன. இதுதான் நமக்கு ஆச்சரியம்! இன்னும் ஜனனம் எடுக்கவேயில்லை என்கிறபோது அடுத்த நூற்றாண்டில் வரவுள்ள ஒரு அவதாரம் முன்பாகவே முதல் அவதாரத்துடன் பேசுவதா? விந்தை! இதை எல்லாம் அவர்களே சொல்லி வெளிப்படுத்தாதவரை நாம் அறிய வாய்ப்பில்லை. சிதம்பரம் ஸ்ரீ பழனிச்சாமி சித்தர், திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சி பரமாச்சாரியார், போன்ற உச்ச நிலை தபஸ்வி ஞானதிருஷ்டியில் அவதார புருஷர்களின் சந்திப்புக் காட்சிகள்  உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஆனால் ஷிர்டி மகான் மீது மட்டும் ஏன் இந்த துவேஷம்? முஸ்லிம் என்பதும் அவரைப் பற்றிய தவறான பரப்புரையுமே காரணம். தெருவோரம் பிக்ஷம் எடுத்துக்கொண்டு இருந்த ஒரு சாதாரண முஸ்லிம் ஃபக்கிரான இவரை முஸ்லிம்களே தங்கள் மதத்தின் துறவியாக ஏற்காதபோது, நாம் மட்டும் ஏன் ஏற்க வேண்டும்? அங்கே சாயி மந்திர் கோயிலில் ஆகம முறைப்படி நடக்கும் அனுஷ்டானங்களை எதிர்ப்பது ஏன்? அவர் அவதாரப் பிறவி என்பதை ஏற்க முடியாததால்! அத்திரி-அனுசுயா ரிஷி தம்பதி கங்காபாவ்-தேவகி என்ற கதாபத்திரமாக வந்து தம் ஐந்து வயது சிறுவனை ஒரு முஸ்லிம் துறவியிடம் விட்டுவிட்டுப் போகிறார்கள். பரத்வாஜ கோத்திர பிராமண சிறுவன் பிற்பாடு சுஃபி துறவியாக மாறியதை அவர் சத்சரிதங்கள் சொல்லும். அது ஏன் முஸ்லிமாக வரவேண்டும்? விடை இல்லை! 

‘ஆதியில் நந்தியாகி தவம் செய்து அயன்மால் இந்திரனாகி சுப்ரமணிய ரூபமாகி ராமனாய் கிருஷ்ண வடிவாய் நபி ரூபமாகி போகராக நிலைத்திட்டேன்’ என்று போகர் தன் ஜெனன சாகரத்தில் சொன்னதுபோல்தான் இதுவும் உள்ளது. கலிகால நிலைக்கு ஏற்ப வேற்று மதங்களிலும் அவதாரங்கள் நடக்கும். ஏன் எதற்கு? அது சிவ ரகசியம்! போகரே வெளிப்படுத்தாத தன்னுடைய ஏனைய அவதாரங்களை அவர் ஆசிகளுடன் நாம் சுயமாய்க் கண்டுகொள்ளலாம். 

சாஹிபு உருவத்தில் தத்த அவதாரம் ஏன் வர வேண்டும்? நபியாக போகர் ஏன் வர வேண்டும்? பழனியில் சமாதியில் வைத்தபின் அங்கிருந்து மறைந்து சீனம் போய் மன்னனாக ஏன் ஜெனிக்க வேண்டும்? இதற்கான விடையை அவரிடம்தான் கேட்க வேண்டும். நமக்கே எல்லாம் தெரியும், சூட்சுமத்தை எல்லாம் கரைத்துக் குடித்தாகி விட்டது என்ற போக்கில் அதை நிந்தித்து விமர்சிப்பது அறியாமை. ஆகாம்ய பாவத்தை ஈட்டும்! ஷிர்டி சாயிநாதரை இகழும் அதே வாய் நபியாக வந்த போகரையும்தான் இகழும். இக்காலத்தில் மகான்கள்/ சித்தர்கள்/ கடவுளர் உருவம் பொறித்து வியாபார நோக்கில் பலதும் நடக்கும். அதற்கு நாம் பொறுப்பல்ல!

அகத்தியர், போகர், கான்னட் ரிஷியே ஐரோப்பாவில் ஒரு வோல்டா, எடிசன், நியூடன், கெப்ளர், கில்பர்ட், டாலமி, கோபர்நிகஸ், என விஞ்ஞானிகளாக வந்து போயிருந்தால்தான் நமக்கு என்ன தெரியும்? அகத்தியர் மரபில் வந்த சீடர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் செய்த கண்டுபிடிப்புகள் சிலவற்றை மேல் நாட்டில் யாரேனும் செய்தால், ‘பார்த்தியா, இங்கிருந்து சித்த நூலேடுகளைத் திருடிக்கிட்டுபோய் அவங்க கண்டு பிடிச்ச மாதிரி காட்டிடாங்க.. திருட்டுப் பசங்க!’ என்று விமர்சனங்கள் எழும்போது சிரிப்பு வரும்.  ஏற்கெனவே இது ரிஷிகளின் நூலில் உள்ளவையே என்பதை அறிந்ததும் கோபப்படுகின்றனர். அந்த மேலைநாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததை அதே காலத்தில் இங்கே ஏன் யாரும் செய்து பரப்பவில்லை?

நம் மகான்களின் அவதாரங்களும் சாநித்யமும் முடிவில்லாதாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மகானாகப் பிறந்து மக்களைக் காத்து நல்வழிப்படுத்தும். சிறப்புப் பணிக்காக இவர்கள் பணிக்கபடுகிறார்கள். கிபி 13ஆம் நூற்றாண்டு முதலே ஸ்ரீ பழனிச்சாமி சித்தர் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது இன்னொரு தேகம் எடுத்துத் தங்குகிறார் என்பது அவருடைய மெய்யுரை.

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

ஆரோக்கியம் என்ன விலை?

பசுமை இயற்கை விவசாயம் குழுவின் முக பக்கத்தில் ஒரு செய்தியைக் கண்டேன். 'கொரோனா ஓமைக்ரான் தொற்று வராமல் காத்துக்கொள்ள சிவப்பு கவுனி மற்றும் கருங்குறுவை அரிசியை மட்டுமே சமைத்துச் சாப்பிடுங்கள்' என்று பதிவில் இருந்தது.

இன்றைய சந்தை விலை நிலவரப்படி,

கருங்குறுவை, ₹300/கிலோ

சிவப்பு கவுனி, ₹150/கிலோ

மூங்கில் அரிசி, ₹350/கிலோ

பொன்னி பச்சரிசியே கிலோ ₹50 முதல் ₹56 வரை ஆடிக்கொண்டிருக்கிறது. இதில் மேற்படி அரிசி ரகங்களை நடுத்தர குடும்பத்தால் ஒரு மூட்டை வாங்கிட  முடியுமா? ஓரிரு கிலோ மட்டும் வாங்கி என்ன செய்ய? முழு அரிசி மணிகளை எண்ணி எண்ணித்தான் உலையில் போட வேண்டும். வழித்தால் சட்டியிலிருந்து அகப்பைக்காவது அது வருமா? 😀

அப்படியே சாப்பிட்டாலும் உடல் உடனே வலுப்பெற்று எதிர்ப்பு சக்தியைக் காட்டுமா? சித்த /ஆயுர்வேத மருந்துகளே பெரிய அளவில் நாள்பட்ட பிரச்சனைக்கு குறுகிய காலத்தில் தீர்வு தருவதில்லை. அது ஒரு மண்டலம் தாண்டி மெள்ள வீரியத்தைக் காட்டும்வரை பொறுமையும் நம்பிக்கையும் இருப்பதில்லை. ஏன்?  

சிகிச்சை முறை பற்றி வைத்திய குண சிந்தாமணி சொல்வதென்ன? மருத்துவ பிரயோகத்தை உடல் ஏற்றுக்கொண்டு உடனே செயல்படும் அளவில் அந்த மருத்துவ முறையில் உடலைப் பழக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்குங்கால் நோயாளியைப் பரீட்சித்துப் பார்த்தபின் உடலில் தங்கிய கசடுகளை வெளியேற்ற ஒவ்வொரு முறையும் உள்ளுக்கு சுத்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மருந்து கிரகிக்கப்பட அந்தி சந்தியோ வாரமோ பட்சமோ போதுமானது. பாதிப்பின் தீவிரம் பொறுத்து மண்டலம் அயனம் என கால அளவு போகலாம். அம்மருந்தின் வீரியம் கூட்ட குரு மருந்து சேர்க்கப்படும்.

ஆனால் திடீரென சித்தாவுக்கு மாறுங்கள் என்றால் நம் வாழ்க்கை முறைகளை நம் பூட்டன் காலத்துப் பழைய நிலைக்குக் கொண்டுபோக முடியுமா? முடியாது! மலைவாழ் மக்கள் போல் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் பின்தங்கியவர்கள் என்கிறோம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை! ஆழமாகப் பார்த்தால், உணவும் ஆங்கில மருந்து மட்டும் எதிரி அல்ல, நம்மைச் சுற்றியுள்ள பல நாகரிக அம்சங்களும் வாழ்க்கை முறையும் சித்த மருத்துவ செயல்பாட்டுக்கு சத்ருதான்! உணவே மருந்து என்ற அளவில் நாம் அன்றாட சமையலைச் செய்து உண்டு ஓரளவுக்குக் காத்துக்கொள்கிறோம். இதில் கற்பங்கள் செய்து உண்டால் என்ன என்று நினைக்கும் மக்களும் உண்டு. காய் கனி தானியங்கள் என எல்லாமே மருந்தடித்து விளைவித்து எங்கெங்கிருந்தோ சந்தைக்கு வருகிறது. இதுவே உடலுக்குப் பழகிவிடுவதால் சித்த மருந்துகள் அவசரத்திற்கு எடுபடாமல் போகும்.

நியாயமாகப் பார்த்தால் பாரம்பரிய அரிசி ரகங்களை அரசு ஊக்குவித்து அதை ரேஷன் கடையில் கிடைக்கச் செய்ய வேண்டும். கலப்படமற்ற பால் தேன் பனைவெல்லம் பதநீருக்கே வழியைக் காணோம்! இதில் அரிசியா? சித்த மருந்தோடு நாம் சேர்த்துக் குடிக்கும் அநுபானம் சுத்தமாகக் கிடைக்க வேண்டாமா? 

மக்களே! அதை வாங்காதீர்கள் இதை உண்ணாதீர்கள் என்று சமூக வலையில் உசுப்பேற்றி அதற்குத் தாளம் போடும் கூட்டம் ஒரு பக்கம். தனிமனித மாற்றம் வேண்டும் என்பார்கள். ஆனால் சராசரி மக்களின் பொருளாதாரத்தை நினைத்து எந்தப் பதிவும் வருவதில்லை. வசதி படைத்தவன்தான் தனி மனித மாற்றம் கொண்டு வர வேண்டும். இல்லாதவன் வெறும் கோஷம் போட்டுவிட்டு ஒதுங்க வேண்டும். ஏன்? அதை ஆதரித்து வாங்கி ஊக்கப்படுத்தும் நிலையில் அவனுக்கு வசதி இல்லையே! உற்பத்தி அதிகமானால் விலை குறையும். வாங்கும் திறன் கூடும். இதுவே யதார்த்தம்.

தன் நிலத்தில் விளைந்த அரிசியை விவசாயி உண்டாலும் இதர உணவுப் பொருள்கள் பலவற்றைச் சந்தையில் வாங்கத்தானே வேண்டும்? உடல் ஆரோக்கியம் மாசு அடைந்திட வழியா இல்லை? பொது சந்தையைச் சார்ந்து இல்லாமல் ஒவ்வொருவரும் தன் குடும்பத்திற்கான தனிமனித சுயசார்பை அடைய முடியுமா? கட்டுரைப் பதிவில் இது பற்றி வக்கணையாக எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்கும். ஆனால் நிஜத்தில் ...?

எதை உண்டாலும் விடுத்தாலும் அவரவர் தலை எழுத்து நன்றாக உள்ளவரை எந்த உளைச்சலும் இல்லை. ஈசனே துணை!

-எஸ்.சந்திரசேகர்