பிரம்மனின் மானச மயபுத்திரர்களில் ஒருவர்தான் ஸனத்குமரார். இவர் சிவனை நோக்கி தவம் இயற்றினார். மகிழ்ந்த சிவசக்தி நேரே எழுந்துஅருளி, 'உனக்கு என்ன வேண்டும்? கேள்" என்றார். அதற்கு ஸனத்குமரர் விளையாட்டாக, 'எனக்கு ஒன்றும் வேண்டாம் உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்" என்றார். உடனே சிவா, "எனக்கு மகனாக வந்து பிறக்க வேண்டும்' என்று சொல்கிறார். 'உமையவள் மௌனமாய் இருக்க நீங்கள் மட்டும் கோரியதால் உங்களுக்கே மகனாவேன்' என்கிறார் சனத்குமாரர்.
அசுரர்களை வதம் செய்யவேண்டி ஒரு இளம் வீரனை அனுப்புங்கள் என்று தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைத்தனர். சிவன் தன் பஞ்சமுகம் மற்றும் ஆகாயத்தைப் பார்க்கும் புலப்படாத அதோமுகம் சேர்த்து, ஆறு நெற்றிக்கண்களில் இருந்து ஆக்ஞா சக்கர ஜோதியை ஆகாயத்தில் வீசினார். அது பொய்கையில் விழுந்து கார்த்திகேயன் என்ற குழந்தையாக உருவானது. அதனால்தான் முருகனுக்கும் ஆறுமுகம்.
ரிக்-யஜுர் வேதங்களில் கார்த்திகேய, ஸ்கந்தா, ஷண்முக, குஹா, அக்னிபுத்ரா, சுப்ரமணியா, என்று பல்வேறு பெயர்கள் வருகிறது. 'பூமியில் பொத்திவைத்து வளர்க்கப்பட்ட பாலன், ஸ்கந்தன்', 'தந்தை வணங்கிய குமாரன்' 'இளம் அழகன் சுவாமிநாத' என்று அற்புதமாக சொல்லபட்டுள்ளது. அவன் நெற்றிகண்ணிலிருந்து நேரடியாக உதித்தான் என்று வேதங்களும், திருமுருகாற்றுப்படையும் சொன்னாலும்; அவனுடைய மூல உருவம் எது? அவன் யார்? என்று பார்த்தீரானால், அவனே வாமதேவ முகத்து மயபுத்திரர் சனத்குமாரர். ஈசனின் வாமதேவம் (இடது பாகம்) விஷ்ணுவும் அவன் சகோதரிக்கும் உடையது. மாலும்-மருகனும் ஒன்று என்றால் முருகனும் விஷ்ணு தோன்றிய வாமதேவ அம்சம்தானே இருக்க வேண்டும்? அதனால்தான் விஷ்ணுவை 'மாயோன்' என்கிறோம். மருகனுக்கும் குறிக்கும்.
முருகன் என்ற பெயர் வேதங்களில் எங்கும் இல்லை. சிவன் தென்னகத்திற்கு அகத்தியரை அனுப்பி குமரனின் ஆசியுடன் தமிழ் வளர்ப்பாய் என்று ஆசி கூறினார். அப்போதுதான் 'முருகன்' என்ற பெயர் உதயமாகிறது. பிற்காலத்தில் சங்கம் வளர்த்த தமிழ்க்கு அவனே பாட்டுடைத் தலைவன் ஆகிறான். சசமஸ்கிருதம், தமிழ்.. இதில் எது முதலானது? சமஸ்கிருதமே! வேதங்கள் எல்லாம் எழுதா கிளவியாக கேட்கப்பட்டு கிரகிக்கபட்டன. அது தேவமொழியாகவே நிலைத்து விட்டது. கார்த்திகேயன் வேதகாலம் தொடங்கும்போதே சிருஷ்டி ஆகிவிட்டான் என்று வேதங்கள் சொல்கிறதே. முதலிலேயே தமிழ் வந்திருந்தால் விராட் பஞ்சமுகத்தான் வேதங்களை தமிழில் சொல்லாது ஏன் சமஸ்கிருதத்தில் படைக்க வேண்டும்? பிற்பாடு இரு மொழிகளிலும் தாக்கம் வந்து காலபோக்கில் பல திரிபுகள் சொல்லாடல்கள் நடந்திருக்கும். யாம் அறியோம்!
பதஞ்ஜலி வியாக்கரண இதை சொல்லும்போது, ஈசன் மொத்தம் நவபஞ்ச (9+5) முறைதான் உடுக்கை அடித்தான். அதிலிருந்துதான் பீஜ அட்சரங்கள் எல்லாமே தோன்றியது என்கிறது. 'தான் வந்த விதம் எப்படி?' என்று விளக்கமாக அகத்தியருக்கு முருகன் உரைத்துள்ளான். ஈசன் 'ஓம்' என்றதும், உடனே பிரபஞ்சம் முழுக்க படைப்புத் தொழில் நடந்தேறியது என்று முருகன் சொல்கிறான். வேதகாலத்தில் அக்னி சுவரூபமாக கார்த்திகேயனை வழிபட்டுள்ளனர். தமிழ்க் கடவுளாக தனக்கு சிவன்தான் பன்னிருகையோன், வேலவன் என்று பெயரிட்டதாகச் சொல்கிறான். முருகன் தெற்கில் மட்டுமல்ல, வடக்கிலும் வணங்கப்படுகிறான்.
பிற்பாடு இங்கே குறிஞ்சிநில ஆதிகுடிகளின் தலைவனாக தோன்றும் போதுதான் 'தமிழ்' படைக்கிறான். ஆகவே, முறைப்படி எழுத்துகள் கொண்டு, ஒரு பண்பட்ட மூத்தமொழியாக தமிழ் உதயமாகியது. அதுவரை சமஸ்கிருதம் பூமியில் பேசப்படவில்லை. ஆக, தமிழும் தமிழனும் வேதகாலத்திலேயே தோன்றியவை என்று சொல்வேன். 'சுப்ரமணியனின் வயது என்ன என்று கேட்டால், அதன் தொகைக் கணக்கு செப்ப முடியாதப்பா' என்று சித்தர்கள் சொல்கிறார்கள். பெருவெடிப்பு ஏற்பட்டபொது பிரபஞ்சம் தோன்றியது என்று வைத்துக்கொண்டால், சுமார் 14பில்லியன் ஆண்டுகள் இருக்குமோ என்னவோ! ஆகவே, முருகன் மயன் வழித்தோன்றி ஈசனின் நெற்றிக்கண்ணில் அக்னிமழையாக மாறினான். தந்தை குழந்தை பெற்றான், தாய் பெயர் சூட்டினாள். அவனை வாமதேவ முகத்தோன் என்பதால் வேங்கட சுப்ரமணியம், கந்தம்பெருமாள், கலியுக வரதன், என்று தொடர்பு படுத்தி பெயர் வைக்கிறோம். முருகனுடைய குல வழி சஸ்பென்ஸ் தெரிந்துகொண்டீர்களா?