கிறித்துவப் பள்ளியில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, எங்கள் பள்ளிக்கு நேர் எதிரே ஸ்ருங்கேரி சாரதா பீடம் உண்டு. என்னுடைய வகுப்பு மாடியில் சாலையை நோக்கி இருந்தது. அந்த வாரம் மூத்த பீடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யாதீரத்த பாரதி சுவாமிகளும், இளையவரும் தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீ வித்யாதீர்த்த பாரதி சுவாமிகளும் முகாமிட்டிருந்தனர்.
மதிய உணவு இடைவேளையில் எனக்கு முன் பெஞ்சில் இருந்த முனியாண்டி அவசர அவசரமாக தொன்னையில் சர்க்கரைப் பொங்கலும் லட்டுவும் எடுத்துக்கொண்டு வந்து, 'டேய் எதிர்ல சாமியார் வந்திருக்காரு போய் வாங்கிகோங்கடா. த பார்.. நான் வாங்கிட்டேன்' என்றான். நாங்கள் ஐந்து பேர், ஷூ சாக்ஸ் கழட்டி டெஸ்கில் வைத்துவிட்டு உடனே மடத்தினுள் பிரவசம் செய்தோம். நான் சாலையைக் கடந்து உள்ளே போகும்முன், அவர்கள் எனக்கு முன்பே தலைதெறிக்க சென்றுவிட்டனர். நானோ நேராக மாடிப்படிகள் ஏறி மேலே சென்றுவிட்டேன். அங்கு இளைய சுவாமிஜியும் வேறு யாரோ இருவர் மட்டும் இருந்தனர். உள்ளே காவி வேட்டி மறைப்பாக சுற்றிக் கட்டி இருந்த அறையில் பெரிய சுவாமிஜி தூங்கிக்கொண்டிருந்தார்.
அங்கே யார் கையிலும் பொங்கல் தூக்கு கரண்டி தொன்னை ஏதும் இல்லாததால், 'ஐயயோ, பொங்கல் தீந்துபோச்சு போலிருக்கு' என்று நினைத்துக் கொண்டேன். அப்போது இளைய பீடாதிபதி, என்னைப் பார்த்து 'அந்த குழந்த யாரு? உங்களோட வந்தானா? அவன் கண்ணைப் பாத்தீங்களோ?' என்று ஆந்திர மணம் வீசும் தமிழில் என்னைப்பற்றி விசாரித்தார். மற்றவர்கள் என்னைப் பார்க்கும் சமயம், பயத்தில் அங்கிருந்து ஜூட் விட்டேன். அப்போது அவர் பார்வைக்கு என்னைப்பற்றி என்ன தெரிந்ததோ.. அறியேன்! கீழே என் தோழர்கள் காத்திருந்தனர். அங்கே பொங்கல் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
சிறுவயது முதலே என்னை அறியாமல் சித்தமாயா வட்டத்தில் எப்படியோ வந்து போயுள்ளேன் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக