சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஹாஜி ஹஸ்ரத் பாபா என்ற ஒரு முஸ்லிம் பெரியவரைக் காண என் நண்பருடன் சென்றிருந்தேன். அவரைப் பார்த்தால், ஆஜானுபாகுவாய் பச்சை பட்டாடையில் வேட்டியும், வழுக்கை தலையில் ஓமகுச்சி ஸ்டைல் தலை முடியும் இருந்தது. வயது 80 களில் இருக்கும். அவர் பலமுறை ஹஜ் புனிதப் பயணம் போய் வருபவர் என்று அறிந்தேன். அவர் மந்திரவாதி என்று மெதுவாக என் நண்பர் சொல்ல, அவரையே உற்றுப் பார்த்தேன். கழுத்து நிறைய மணிகள், கையில் கங்கணம், மோதிரங்கள் என்று பட்டு பீதாம்பரமாக காட்சி தந்தார். சுர்மா இட்ட கண்கள் மேலும் தீட்சண்யத்தைக் கூட்டியது. கால் விரலில் தலா இரண்டு மெட்டிகள் அணிந்திருந்தார்.
அவருடைய பூசை அறையில் விநாயகர், முருகன், மற்றும் சிவனின் பெரிய படமும் இருந்தன. அதன் பக்கத்திலேயே மெக்கா படமும், அரபு மொழியில் எழுதப்பட்ட ஏதோ பெரிய யந்திர தகடுகள், மற்றும் தஞ்சாவூர் குத்துவிளக்கு ஏற்றி மல்லிகைப்பூ அர்ச்சிதிருந்தார். என் நண்பர் தன் குடும்பப் பிரச்சனை தீர்வுக்காக அங்கு சென்றிருந்தார்.
ஹாஜி ஐயா என்னைப்பற்றி விசாரித்தார். அதன்பின் 'இன்னா தம்பி, இங்கே ஹிந்து சாமி படங்களா இருக்கேன்னு பாக்குறியா?' என்றார். நான் சிரித்தேன். அதற்கு அவர், "அல்லாமே சிவன் கிட்டே இருந்துதான் வெளிவரும். கைலாஷ் பழனி மெக்கா, அல்லாமே ஒண்ணுதான்" என்றார். எங்க ஜாதிலேயும் சித்துகள் இருக்குபா.. என்று சொல்லிவிட்டு தன் அனுபவத்தை விவரித்தார்.
மேற்கு மலபாரில் ஒரு மசூதி உண்டென்றும், அங்கு ஒரு மந்திரவாதி உள்ளே இருந்து கொண்டு மந்திரம் ஜெபித்து அதை வேறு ஊருக்கு அலேக்காக தூக்கிச்செல்ல உருவேற்றி கொண்டிருந்ததை இவர் தன் அதிர்வுகளில் இங்கு கண்டுள்ளார். நள்ளிரவுக்குப்பின் அந்த மசூதி எழும்பியுள்ளது போல. உடனே இவர் இங்கிருந்து ஜெபித்து அதை அழுத்தி நிலைக்கச் செய்திட்டாராம். இன்றும் அந்த மசூதி கோணலாகவே நிலைபெற்று விட்டது என்றார்.
இதெல்லாம் எனக்கு விட்டலாசாரியார் கதைப்போல் திகிலாக இருந்தது. இந்த ஹாஜி தன் கிராமத்தில் வறட்சியின்போது தன்னுடைய கிராமத்தில் மட்டும் இரண்டு மணிநேரம் மழை பொழியச் செய்துள்ளார். அரேபியாவில் கார் டிரைவராக வேலை பார்த்த இவர் மகன் விடுப்பில் இருந்த நாளில், அவருடைய எஜமான் வண்டி ஒட்டிவிட்டு யார் மீதோ மோதி கொன்றுள்ளார். அப்பழியை மகன் மீது போட்டுள்ளார். தூக்கில் தொங்கவிட ஆணை வந்தது. தன் அப்பாவி மகனைக் காப்பாற்ற ஹாஜி பாபா இங்கிருந்தே இரண்டு சாமம் முழுதும் விடாமல் மந்திரங்கள் ஜெபித்துள்ளார். மறுநாள் அந்த நீதி மன்றம் திடீரென, அவர் மகனுக்கு அபராதம் மட்டுமே விதித்து விடுதலை செய்ததாம்.
அவர் அதர்வண வேதம் படித்துள்ளார். வாங் இசையோடு சாமன் பாடுவார். அவர் தமிழர் அல்ல என்பது அவருடைய பேச்சில் தெரிந்தது. அவர் என்னைப் பார்த்து, 'உனக்கு கண் திருஷ்டி இருக்கு.. கடவுளோட அனுகிரகம் இருக்கு.. இதை பாக்கெட்ல வெச்சிக்கோ" என்று சொல்லிவிட்டு ஒரு சிறு தகடு கொடுத்தார். அதன்பின் தலையில் ஏதோ மை தேய்த்தார். அதன்பின் அவரை மறந்துவிட்டேன். இன்றுதான் நினைவுக்கு வந்தார்.
இப்படி நம்மைச் சுற்றி பல விஷயங்கள் அமானுஷ்யமாக உள்ளது என்பது உண்மை. நான் சொல்வதை நம்பாமல் சிரிப்போரும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக