ஆதிசங்கரர் நான்கு திசைகளில் நான்கு மடங்களை நிறுவியது போக, 'மூலாம்நாய ஸர்வக்ஞ பீடம்' எனப்படுவது காஞ்சி மடம். இம்மடம் சில காலம் கும்பகோண கிளை மடத்தில் இயங்கி வந்தது. தன் பெரியம்மாவின் மகன் தவறியபடியால் அப்போது தன் தாயுடன் ஊருக்கு வந்தார் சுவாமிநாதன். அங்கு இச்சிறுவனை பீடாதிபதியாக தேர்வு செய்தனர். மாட்டுவண்டியில் அவரோடு துணைக்கு வந்த மேஸ்திரி ஒருவர் 'கொளந்த... எனக்கு என்னமோ நீ ஊருக்கு திரும்பிப் போகமாட்டேன்னு தோணுது.. அவங்க உன்னை அங்கேயே புடிச்சு வெச்சிட்டு சன்னியாசியா வெச்சிபாங்கபா' என்றார். உடனே மனதில் பயம் வந்ததும் 'ராம..ராம' என்று ஜெபிக்க ஆரம்பித்தார். அவர்தான் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
அது 1911-15 காலம். அவருக்கு வயது 16 இருக்கும். கும்பகோணத்தில்தான் அவருக்கு வேதங்கள் கற்பிக்கப் பட்டது. அவருக்கு ஆசிரியர்கள் சிலர் இருந்தனர். அதில் பிரதம அத்தியாபனராக அனந்தராம ஸ்ரௌதிகள் இருந்தார். அவர் இவருக்கு மூன்று ஆண்டுகள் போதித்தார். அனந்தராமன் வசித்தது நெ.17 மேல்கரை, மகாமகம் குளம், குடந்தை. ஆசிரியரின் மனைவி அன்னம்மாள். அவருடைய மகள் வழி பேத்திகள் நாகம்மாள், செல்லம்மாள் இருவரும் சிறுமிகளாக இருந்தபோது, சுவாமிகள் குடிப்பதற்கு சிறிய சொம்பில் பால் கொண்டுபோய் தருவார்களாம். அப்போதே இளம் சுவாமிகளுக்கு தீர்க்கதரிசன பார்வை உண்டு என்று சொல்வார்கள்.
சுவாமிகள் அசாத்திய படிப்புத்திறன் நினைவாற்றல் கொண்டவர். என்னதான் துறவியாக இருந்தாலும் அந்த வயதிற்கான விளையாட்டு புத்தி சற்று இருக்கும். ஒருசமயம் வேதபாடம் நடத்தும்போது இந்த ஆசிரியர் அவரை தொடையில் கிள்ளி அடித்து 'கவனம் இங்கே இருக்கணும்' என சொல்லியுள்ளார். பிறகு தன் செயல் கருதி, "ஜகத்குருவான உங்களை அடித்து விட்டேன், சுவாமிகள் மன்னிக்கணும்" என்று சொல்லியுள்ளார். அதற்கு சுவாமிகள், "ஆச்சாரியா, வருத்தம் வேண்டாம். நீங்கள் என்னை தண்டிக்க முழு உரிமை உண்டு" என்றாரம். என்னவொரு மனப்பக்குவம், தன் ஆச்சாரியரிடம் என்னவொரு பணிவு! காஞ்சி மடத்தின் 68வது பீடாதிபதியாக பொறுப்பேற்ற 'மகாபெரியவர்' தேசம் முழுக்க தர்மம் போதித்து நூறாண்டுகள் வாழ்ந்து ஆன்மிகம் தழைக்கச் செய்தார். இத்தனைக்கும் அவர் காலத்தில் நாத்திக பகுத்தறிவு ஓங்கியிருந்தது. அதையும் எதிர்கொண்டார். இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?
அந்த நாகம்மா பாட்டி சொன்னதை எல்லாம் நான் சிறுவயதில் கேட்டுள்ளேன். அதை நினைவுகூர்ந்து இங்கு பதிவிட்டேன். மஹாபெரியவர் பாதம் போற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக