ஸ்ரீஇராமானுஜரின் தாசராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் கலைஞர். இவருடைய தீவிர வைணவ பக்தியை பகிரங்கமாக ஏற்கும் விதமாக, மார்கழித் திங்கள் முதல் நாளாம் இன்று நவமி திதி முடிந்தபின், தசமியில் கலைஞரின் சிலையை மாலையில் திறக்க ஏற்பாடு செய்த திருக்கழக ஆச்சாரியார்களின் அதீத பக்தியை மெச்சினோம். இது வைணவத்திற்கு கிட்டிய பேறு. ஓம் நமோ நாராயணாய!
This blog carries interesting articles on travel, spiritual, personal, poetical, social experience of the author.
About Author
- S.Chandrasekar
- A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.
ஞாயிறு, 16 டிசம்பர், 2018
புதன், 5 டிசம்பர், 2018
நெல் ஜெயராமன்
தனியொருவனாய் களமிறங்கி
தன்னலமில்லா சேவையாற்றி
தனிப்பெரும் நெற்களஞ்சியம்
தேடிப்பிடித்த நெல்லண்ணலே
துஞ்சாமல் அலைந்து உழைத்து
துடிப்புடன் ரகங்களை சேகரித்த
தன்னிகரில்லா மைந்தனே இத்
தமிழகம் உன்னை மறவாது
வாழ்வாங்கு வாழும் நின் புகழ்!
வானோர் உலகில் இளைப்பாறு!
பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 174 அரியவகை நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.
ஞாயிறு, 2 டிசம்பர், 2018
திவ்ய ரூபம்
தெலுங்கில் அவனைப்பாட இப்போது உதித்தது...
"ஆரத்தி காட்டும்போது கன்னத்தின் குழிகள் ஈர்க்கிறது, உன் சிரிப்பில் விரியும் பலாப்பழம் இனிக்கிறது, வண்ணமிகு வாசனை திரவியங்கள் மணக்கிறது, குவித்த பூவிதழ் உதடுகள் மிளிர்கிறது, உன் சிலையில் வழியும் பிரசாதம் அதிமதுரம், உன்னருளால் இயற்றிய பாடல் அதி விதுரம்."
பிரம்மாண்டமாய்...
கேளிக்கைகாக கனவுலகில் அதிக பிரம்மாண்டமாய் தயாரிக்கப்பட்டது 2.0 படம். இதற்கான செலவு ரூ.550 கோடி என்று சொல்லப்படுகிறது. வருங்காலத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி இன்னும் அதிக பட்ஜெட் செலவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு படம் வரும் நிலை உள்ளது.
அண்மையில் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்ட மிக கனமான GSLV Mark 3 ராக்கெட் தயாரிக்க ஆன செலவு ரூ.400 கோடி. வணிக நோக்கில் செய்தால் ஆயிரம் கோடியில் மூன்று ராக்கெட்கூட செய்து முடிக்கலாம் என்கிறது இஸ்ரோ.
ஆக, இந்தியா செயற்கைக்கோள்களை ஏவும் செலவைவிட, இங்கே கேளிக்கை சினிமா எடுக்க ஆகும் செலவு உயர்ந்து வருவது ஆரோக்கியமான சூழலைக் காட்டுகிறது என்று இதை வைத்து நம் பொருளாதாரத்தை கண்மூடித்தனமாய் சொல்லிட முடியாது என்பதே உண்மை. படம் எடுக்க ஆகும் செலவைப் பொறுத்து இனி சினிமா டிக்கெட் விலை நிர்ணயமாகும் என்று வந்தாலும் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு திரையரங்கின்முன் பேனர் கட்டவுட், பாலாபிஷேகம், ஜிகினா தோரணங்கள், இனிப்புகள் விநியோகம், பட்டாசு வெடிக்க ஆகும் செலவுகள் ஆகியவை ரசிகர் மன்றத்தைச் சேரும்.
படத்திற்கு ரூ.50 கோடி குறைவின்றி சம்பளம் வாங்கும் நடிகர்களின் படத்தை ஓடவைக்க ரசிகர்களாகிய நாம் ரூ.100 முதல் 200 வரை டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதோடு, முதல்நாள் புதுப்பட ரிலீஸ் விழாவும் எடுக்கிறோம் என்றால் நாம் பணக்கார ஏழைகளா? தமிழன்டா!
சனி, 1 டிசம்பர், 2018
குற்றத்தில் பெரியது என்ன?
சமீப நாட்களாக தினமும் செய்தித் தாளைப் படித்தாலே கொலைக் குற்றங்களின் எண்ணிக்கையும் அதை செய்தவர்களின் பின்னணியும் திகிலூட்டுகிறது. மீண்டும் அதே குற்றவாளிகள்தான் இதில் ஈடுபடுவது தெரிகிறது. தடயம் கிட்டாத வகையில் கைத்தேர்ந்த பழையவர்கள் செய்வது சுமார் 70% என்றும் புதிய குற்றவாளிகள் 30% என்று புள்ளிவிவரம் சொல்கிறது. CCTV இருந்தும் அதில் பதிவான கொலை வீரர்களின் முகத்தை குற்றப்பின்னணி ஆவணத்தில் அலசிப் பார்ப்பதும் தாமாகிறது. Face recognition மென்பொருள் மூலம் கூட்டத்தில் முகத்தை சரிபார்த்து அடையாளம் கண்டுபிடிப்பது எளிதாகிவிட்டது என்றபோதும் குற்றவாளிகளைத் தேடுவது சிரமமாக இருக்கிறது. கொலையாளிகள் என்று சொல்வது மரியாதையில்லை என்று கருதும் சமுதாயத்தில் நாம் இருப்பதால், கண்ணியம் குறையாமல் அவர்களை ‘கொலைக்குற்ற வீரர்கள்’ என்று சொல்லிடுவோமே!
‘பல குற்றங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளி’ ‘தண்டனைப் பெற்ற முன்னாள் கைதி’ என்று அவர்களைப்பற்றி அறிமுகம் செய்யும்போது, தவறு சட்டத்திலும், மனித உரிமை ஆணையம் மீதும்தான் தெரிகிறது. குற்றத்தில் சிறிது/ பெரிது, மன்னிக்கப்படுவது / படாதது, இத்தனை வருடங்கள் இருந்தால் தண்டனை காலம் போதும், என்று பரிந்துரை செய்ய சட்டமும் அதை நிலைநாட்ட மனித உரிமை ஆணையமும் செயல்படுகிறது. நியாயப்படி நிரபராதிக்கு அநீதி இழைக்கபட்டால் அதற்கு ஆணையத்தின் தலையீடு வேண்டும்தான். ஆனால் பழையவர்கள் புதியவர்களுக்கு சிறையில் குருகுல பாடத்தையும் செயல்படும் ரகசியத்தையும் கற்பிப்பது ஆபத்தாக முடிகிறது. கோரிக்கை வைத்தால் குற்றவீரரின் பிறந்தநாள்களுக்குக்கூட விடுதலை செய்யும் அதிசய நிலை எதிர்காலத்தில் வரும்போல!
சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகள் மிகக்குறைவு. ஆனால் habitual crime record கொண்டவர்களால் மீண்டும் மீண்டும் கொலை/கொள்ளை குற்றங்கள் எழுகிறது என்றால் காவல் துறைக்கும் சட்டத் துறைக்கும் அது நேர விரயம்தான். எங்கேனும் குற்றம் நடந்தால் பழைய குற்றவாளியை முதலில் தேடுவது வழக்கம். மூன்று முறைக்கு மேல் ஒருவர் தொடர் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்தவர் என்றால் அவரை வேறு விதமாக கையாள வேண்டும். மீண்டும் மீண்டும் டெங்கு கொசு வளர அருமையான சூழலை உருவாக்கித் தந்தபின், ஊரெல்லாம் ஒரே காய்ச்சல் அதை மருத்துவர்கள் கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டுவதுபோல் உள்ளது.
பண பலம், ஆள் பலம், அரசியல் பின்னணி, என்று எல்லாமே கொலை வீரர்களை ஊக்கபடுத்தி வளர்த்து விடுவதால் காவலும்/சட்டமும் என்ன செய்ய முடியும்? ஐயோ பாவம்! பணிந்து போயாக வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளது. இதன் நடுவில் ‘அப்பாவி’ நிரபராதிகளான அந்த ‘ஏழு பேர்’ விடுதலைக் குறித்து நாடே கவலையில் உள்ளது. ஜேப்பிடி, நகைத் திருட்டு முதல் கற்பழிப்பு, கொலைவரை தண்டனைகள் பூப்போல இருப்பது வேடிக்கையாக உள்ளது. அதே தீவிர தண்டனைகலைத் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. மரண தண்டனை என்பது மனித உரிமை மீறல் என்றால் சித்தர்கள் உரைத்த வழியில் தாக்க வேண்டியதுதான்.
“பெரியது கேட்கின் தர்மநெறி மக்களே
பெரிதுபெரிது இளமையில் திருட்டு
அதனின் பெரிது கற்பழிப்பும் கொலையும்
அதனினும் பெரிது மன்னித்தும் குற்றம் புரிதலே”
பெரிதுபெரிது இளமையில் திருட்டு
அதனின் பெரிது கற்பழிப்பும் கொலையும்
அதனினும் பெரிது மன்னித்தும் குற்றம் புரிதலே”
வெள்ளி, 30 நவம்பர், 2018
வியாழன், 22 நவம்பர், 2018
ஞாயிறு, 18 நவம்பர், 2018
உலக கழிப்பறை நாள்
அதிக கனமான ராக்கெட்டை விண்ணில் ஏவி இந்தியா பல சாதனைகளை நிகழ்த்துகிறது. இன்னொரு பக்கம் அமிதாப் பச்சனின் 'சௌச்சாலே கி செப்டிக் டேங்' டிவி விளம்பரம் தினமும் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வருகிறது. இன்னும் எத்தனைக்காலத்திற்கு கழிப்பறையின் அவசியத்தை காட்டுவார்களோ? சௌச்சாலா இல்லாமல் இருக்கலாம் ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க முடியாத நிலைதான் உள்ளது! ஆக, விண்ணும் மண்ணும் சாதனை களம்தான்!
புதன், 7 நவம்பர், 2018
சனி, 3 நவம்பர், 2018
சித்த மருத்துவத்தில் ஒரு புரட்சி
அது ஜனவரி 2016. எனது சித்த நூல்களை படித்துவிட்டு, போகர் மேல் கொண்ட ஈர்ப்பில் என்னோடு நட்பில் சேர்ந்தார் ஒரு அன்பர். இவர் பிடெக் மற்றும் எம்பிஏ படித்தவர். வங்கி பின்னணிப் பணி BPOவில் தற்போது வேலைசெய்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன் இவர் சித்தர்கள், சித்த மூலிகைகளைபற்றி நிறைய சந்தேகங்களை என்னிடம் கேட்டறிந்தார். முதல்முறை படித்துவிட்டு என்னிடம் பேசும்போது அவர் ஏதும் தெரியாத ஆரம்பகட்ட நிலையில்தான் இருந்தார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “சார், இவ்ளோ சக்திவாய்ந்த மூலிகைகள் இருக்குனா, எல்லா நோய்களுக்கும் நல்ல மருந்து செய்து கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து தந்து காப்பாத்தணும்” என்று லட்சியத்தை ஆதங்கத்துடன் சொன்னார்.
“நீங்கதான் செய்துகொடுக்கணும்னு சிவசித்தம் இருந்தா சித்தர் ஆசியோடு கைகூடும். முயற்சி செய்யுங்கள்” என்று சொன்னேன். “சார், நீங்க மருந்துகள் எதுவும் செய்யலையா?” என்றார். “இல்லீங்க. மருத்துவ குறிப்புகள் மூலிகைகள் பற்றி எழுதினாலும், மருந்து செய்துகொடுக்க எனக்கு ஆர்வம் வரவில்லை” என்றேன். அதன்பின் இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மூலிகைகளை பற்றியும், நோய் விதகளை படித்தும், மருத்துவ குணபாகம்/ செய்பாகம் நிறைய கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். வேலைக்கு போய்வந்த பின் சித்த வைத்தியரிடம் சென்று அடிப்படை சூத்திரங்கள் கற்றார். அப்படி வளர்ந்தவர் இன்று சித்த மருத்துவத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியுள்ளார்.
அது என்ன? எல்லா நோய்களுக்கும் ஒரே மூலமருந்து சூரணம். இந்த குருமருந்து சூரணத்தை இதர மருதத்துவ சூரணங்களோடு சேர்த்து கொடுக்கும்போது ஒரு வேளையில், மூன்றே நாளில், ஒரே வாரத்தில், ஒரு பட்சத்தில், ஒரு மண்டலத்தில் நோய் குணமாகிறது. அக்காலத்தில் ஒரு சர்வரோக குளிகை மட்டும் கையில் எடுத்துப் போவார்கள். உடலுக்கு முடியாமல் போனால், அக்குளிகையை தேய்த்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து நாக்கில் தடவி உண்பார்கள். அதுபோல்தான் இந்த சூரணமும். நாளடைவில் எல்லாவித Medical Reportsம் படித்து அறிந்து மருந்து கொடுக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார். இன்னும் வைத்திய 'முப்பூ' பற்றி இவர் கற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்குத் தெரிந்து இவருடைய சூரணங்கள் கீழ்கண்ட நோய்களுக்கு அருமருந்து. சகல ஜூரம், நீரிழிவு, செரிமானம், கல்லீரல் கோளாறு, இரைப்பை, பித்தம், சிறுநீரக கோளாறு; கர்ப்பப்பை /மார்பக/மூளை/ எலும்பு புற்றுநோய்; கர்ப்பப்பை கட்டி, இருதய அடைப்பு, இரத்தக் கொதிப்பு, மூளையில் க்ளாட், இரத்தக் கசிவு, இரத்தப் புற்றுநோய், எய்ட்ஸ், எச்ஐவி, தோல் நோய்கள், மற்றும் முக்குண தோஷங்களை நீக்கும் சூரணங்களாக செயல்படுகிறது. இவரிடம் இதுவரை மருந்து பெற்று உண்ட பல நோயாளிகளின் உரையாடல்களை எனக்கு தினம் அனுப்புவார். அல்லோபதியில் தேறாத பல நோய்கள் இம்மருந்தினால் குணமாகியுள்ளது. கைவிடப்பட்ட முற்றிய நிலையில் வந்து குணமான நோயாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இவரிடம் மருந்து சூரணங்கள் எல்லாம் முற்றிலும் இலவசம். உணவு பத்தியம் நிச்சயம் உண்டு. நோய்கள் எல்லாமே ஊழ்வினையால் வருவது என்பதை அறிவோம். அது குணமாகும் தருணம் வரும்போதுதான் விதியாளிக்கு வைத்தியம் பலன்கொடுக்கும்.
“என்ன ஆச்சரியம்! ரெண்டு வருஷத்துக்கு முன்ன நீங்க இருந்ததுக்கும் இப்போ செய்துள்ள சாதனையையும் பார்த்தா ரொம்ப பிரமிப்பாதான் இருக்கு. விட்டகுறை தொட்டகுறை ஏதோ இருந்துள்ளதால் சித்தர்கள் ஆசியோடு நடக்கிறது. சந்தோஷம்!” என்றேன்.
மருந்தை சுண்டல் விநியோகம்போல் செய்தால் அதன் அருமை தெரியாமல் வீணடிப்பார்கள் என்பதால் சென்னையில் ஒரு குறிப்பிட்ட கடையில் போய் தக்க நபரை அணுகி, நண்பர் அனுப்பும் ஆடியோ செய்தியை அங்கே போட்டுக் காட்டினால்தான் மருந்து பொட்டலங்கள் தரப்படும். இவர் என் வாசகராக, நண்பராக, வைத்தியராக இருப்பது எனக்குப் பெருமை. பெரிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு நல்ல தீர்வு வந்துவிட்டது என்பதை நீங்கள் அறியவேண்டும். பெரிய அளவில் மருத்து தயாரித்து இச்சேவையை கையாளும்போது இவருடைய பெயர், கைபேசி, மின்னஞ்சல் விவரங்களை நிச்சயம் இங்கே பதிவிடுகிறேன்.
இது வியாபார நோக்கில் செய்வதில்லை என்பதால் விளம்பரமோ, விலைப்பட்டியலோ ஏதுமில்லை. நோயாளிகள் சுகம் பெற்றபின் தாங்கள் விருப்பப்பட்டதை கொடுத்து ஜீவகாருண்ய நோக்கில் உதவலாம். இத்தொகை அடுத்துவரும் நோயாளிகளுக்கு மருந்து தயாரித்து கொடுக்க உதவும். “சர்வ ஜனா சுகினோ பவந்து"
அவர் பெயர் திரு.ஜகத்குரு, 9176147041
வெள்ளி, 2 நவம்பர், 2018
ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு?
ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!
நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக் கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.
இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா?
தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.
அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்.
இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.
வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... அப்போது சப்தம் நின்று விடும். பின்பு வெள்ளம் வடிகின்ற போது, மீண்டும் சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.
சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..
பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. அரசும் இது எதற்கு என புதுபிக்க மறந்துவிட்டதா..?
ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது. இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் உண்மையில் அறிவியலுக்காக.
செவ்வாய், 23 அக்டோபர், 2018
தமிழ் பேசு, உண்டியல் காசு
தமிழ் வளர்க்கிறேன், அதற்கு நிதிவேண்டும் என்று யாரேனும் சொன்னாலே, பரவசித்துப்போய் ஜோபியில் இருக்கும் அத்தனையும் எடுத்துக் கொடுக்கும் அளவில் தமிழ் மக்கள் உள்ளனர். தமிழை காசு கொடுத்து வளர்க்க நாம் பாடுபட தேவையில்லை.
ஒரு குடும்பத்தில் 2-3 மொழிகள் பேசுபவர்கள் இருந்தால், அந்தக் குடும்பத்லுள்ள குழந்தை எல்லாமே பேசக் கற்றுக்கொள்ளும். ஆனால் வளர்ந்தபின் அதற்கு எந்த மொழி மனதிற்கு விருப்பமோ அதில்தான் திறமையை வளர்த்துக்கொள்ளும். காசு கொடுத்து அதன் மனதை மாற்ற இயலுமா?
தமிழர்கள் அல்லாதோர் வேட்டி கட்டினாலோ, நெற்றிக்கு விபூதி பூசினாலோ, வாய் நிறைய தமிழ் பேசினாலோ, நாம் மயங்கிப் போகிறோம். ஏன்? நம் மக்கள் பழகாத ஒன்றை, எதிர்க்கும் கலாசாரத்தை வெளிநாட்டினர்கள் செய்வதால் அதை பெரிதும் ரசிக்கிறோம். அதோடு நின்றுவிட்டால் தவறில்லை. அத்தேசத்தில் தமிழ் வளர்க்க அவர்கள் கோரும் அனைத்தையும் நாம் கண்களை மூடிக்கொண்டு தர சம்மதிப்பதுதான் குற்றம். காசு கொடுத்து செய்ய இது மதமாற்றமா?
'Delivery தந்துட்டு Nightக்கு lodgeல தங்கிட்டு bus ticket எடுக்க ATM ல காசு எடுத்துகினு tiffin சாப்டு return வந்துட்டேன்' என்று சராசரி ஆள்கூட சர்வ சாதாரணமாக பேசும் காலம் இது. நம்மூரில் ஆங்கிலம் வளர்க்க கேம்ப்ரிட்ஜ், ஹார்வர்ட், ஆக்ஸ்போர்ட், மற்றும் பிரிட்டிஷ்/அமெரிக்கன் கவுன்சில்கள் கணிசமாக நிதி திரட்டி நம் பல்கலைக் கழகங்களுக்கு கொடுக்கிறதா என்ன?
அயல்நாட்டில் தமிழ் வளர்க்கவும், அரிய தமிழ் சுவடிகளை கொடுத்துதவும் நேசர்களை என்னவென்பது? பல்கலைக்கழகங்கள் பிற தேவைகளுக்கு முதலீடுகள் செய்ய எப்படியாவது நிதி திரட்ட தமிழ் ஏமாளிகளை வலைவீச்ப் பிடிப்பது வழக்கமாகி விட்டது. அந்த பல்கலைகழகம்தான் செய்கிறதோ, அதன் பெயரில் எந்த அமைப்பு செய்கிறதோ தெரியாது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உருவாக்க திரட்டிய $6 மில்லயன் நிதி என்ன ஆனது? தமிழ்நாட்டில் திரட்டிகொடுக்க எத்தனைப்பேர் பாடுபட்டார்கள் என்பது நாம் அறிவோம். இன்றைய நிலையில், பல அரசுப்பள்ளிகளை மூடும் எண்ணத்தில் அரசு உள்ளது. அந்த நிதியை இதற்கு பயன்படுத்தி இருக்கலாம்.
நான் பள்ளியில் படிக்கும்போது 'ஈழப்போராளி இயக்கங்களுக்கு தாராளமாக நிதி தாருங்கள்' என்று நகரம் முழுக்க ஆங்காங்கே பதாகைகள் காட்டி உண்டியல் வசூல் ஜோராக நடந்ததை பார்த்துள்ளேன். ஒரு கட்டத்தில், இயக்கத்தின் நோக்கம் மாறுகிறதை உணர்ந்த எம்ஜிஆர் அதை எல்லாம் தமிழ்நாட்டில் உடனே தடை செய்தார். இத்தனைக்கும் அவர் ஈழத்தில் பிறந்தவர்தான், அவருடைய தந்தை அங்கே மாவட்ட மாஜிஸ்ட்ரேட்!
திங்கள், 22 அக்டோபர், 2018
நாத்திக விளையாட்டு
சித்தர் பாடல்களில் பரிபாசையாக பல தத்துவங்கள் கூறப்பட்டதை மக்கள் தங்கள் தேவைக்கேற்ப நாத்திக முற்போக்கு சிந்தனைக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். பல சித்தர்களின் மறைப்புச் சொற்களுக்கு நேரடியான பொருள்கொண்டு அதையே எதிர்மறையாக இன்றளவும் பரப்பி வருகிறார்கள். சிவவாக்கியர், குதம்பை போன்ற சித்தர்கள் சொன்னதை முற்போக்காக உதாரணம் காட்டிச்சொல்லும் விஷயங்கள் யாது?
கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா, ஆகவே மறுபிறவி இல்லை.
மறுமை இல்லையென்பதால் இம்மையின் பாவங்கள் தொடராது.
வாசியோகம் வசப்பட்டால் செய்த பாவங்களை அழித்திடலாம்.
கல்/உலோக/மர சிற்பங்களை கடவுளாக தொழுவது அற்பத்தனமானது.
மந்திரம் முணுமுணுத்தால் சிலைகளுக்கு எப்படி கேட்கும்?
நாதனை உள்ளே காண்போர்க்கு தில்லையும் திருவரங்கமும் எதற்கு?
பிறப்பு/இறப்பு தீட்டு என்ற ஒன்று இல்லவே இல்லை, அப்படி என்றால் உலகே தீட்டுமயம்.
மறுமை இல்லையென்பதால் இம்மையின் பாவங்கள் தொடராது.
வாசியோகம் வசப்பட்டால் செய்த பாவங்களை அழித்திடலாம்.
கல்/உலோக/மர சிற்பங்களை கடவுளாக தொழுவது அற்பத்தனமானது.
மந்திரம் முணுமுணுத்தால் சிலைகளுக்கு எப்படி கேட்கும்?
நாதனை உள்ளே காண்போர்க்கு தில்லையும் திருவரங்கமும் எதற்கு?
பிறப்பு/இறப்பு தீட்டு என்ற ஒன்று இல்லவே இல்லை, அப்படி என்றால் உலகே தீட்டுமயம்.
உசுப்பேற்றுவதுபோலுள்ள தத்துவங்கள் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். இதையே சாக்காக வைத்து கருப்புக்கழகக் கண்மணிகள் ஆலயத்தில் நுழைந்து கைவரிசைக் காட்டுவது, சிலைகளைத் திருடுவது, பூசை அர்ச்சனை ஆராதனையை எதிர்ப்பது, சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, கோயிலுக்குள் உமிழ்வது என்று எல்லாமே நடத்துவார்கள். திருவள்ளுவரின் குறட்பாக்களுக்கே பதவுரையை மாற்றித் திரித்து எழுதிய தமிழ் சமுதாயம் அல்லவா?
மெய்யாலுமே சித்தர் பாடல்களை நாம் ஒரு பக்குவ நிலை எய்திய பிறதான் படிக்கவேண்டும். அல்லது சித்தர்களுடைய நிலை உணர்ந்து அதைப் புரிந்து கொள்ளவேண்டும். இவை எல்லாமே நம்முடைய இயல்பான நிலைக்கு உபதேசிக்கபட்டதன்று. தவறாக பொருளைப் பரப்பினால் விபரீதம்தான்..
நம்முள் அவனை உணரும்வரை, நாம் அவனாகும் வரை நம் வழிபாடு முறைகள் அனைத்தும் சரியே!
சனி, 20 அக்டோபர், 2018
அம்பு எய்தும் திருநாள்
பழனியில் புலிப்பாணி ஆசிரமத்தில் தசரா வெகு விமரிசையாக நடைபெறும். போகர் பூஜித்த புவனேஸ்வரி அம்மனை பிரதமையில் துர்கையாக ஆவாகனம் செய்து வழிபடுவார்கள். நவராத்திரியில் தொடர்ந்து ஒன்பது இரவுகள் பூஜைகள் நடைபெறும். பத்தாம் நாள் விஜயதசமி அன்று புலிப்பாணி சுவாமிகளை பல்லக்கில் அமர்த்தி பராசக்தியின் வேலை கையில் தந்து, பழனி அடிவாரம் ஆசிரமத்திற்கு 3கிமீ தொலைவில் உள்ள கோதைமங்கலத்திற்கு அழைத்துப் போவார்கள். முருகனே அசுரன் மீது அம்பிட்டு வென்றதன் அடையாளமாக அங்கே வன்னி-வாழை மரங்கள் மீது இவர் சம்பிரதாயமாக அம்பு எய்துவார்.
வியாழன், 18 அக்டோபர், 2018
ஞாயிறு, 14 அக்டோபர், 2018
பெயர்ச்சியும் முயற்சியும்
"அப்பறம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்குமாம்?" என்று என் நண்பர் கேட்டார்.
"அதைப்பத்தி ஏதும் தெரியாது. நான் எந்த கிரகத்தோட பெயர்ச்சி பலன்களையும் படிப்பதில்லை. அதில் என்றைக்கும் ஆர்வம் இருந்ததில்லை" என்றேன்.
"அட நீங்க வேற... ஊரே அதைப் பத்திதான் பேசுது. உங்களுக்கு தெரியாம இருக்குமா?" எனறார்.
"ஆமாம், டிவில பேப்பர்ல போடறாங்க. ஆனா எந்த கிரகம் சொந்த வீட்டுக்கு போனாலும், எதிரி வீட்ல உக்காந்தாலும், நான் அதை கவனிக்கறதில்லை" என்றேன்.
"என்ன இப்படி சொல்டீங்க?" என்றார்.
"ஆமாங்க. நம்ம ஜனனகால ஜாதக கட்டங்களைப் பொறுத்துதான் பலன்கள் அமையும். ஆயுசு முழுக்க திசையும் புக்தியும் அதுபாட்டுக்கு வந்துபோகும். நம்ம ஊழ்வினைகள் தீரும்வரை சோதனைகளும், தர்மநெறிப்படி செய்யும் நல்வினைகள் சாதனைகளையும் தரும். குரு சனி ராகுகேது, சிவனேனு அவங்கவங்க வேலைய பாக்கறாங்க. நான் தினமும் கோளறு திருப்பதிகம் படிச்சுட்டு என் வேலையப் பாக்குறேன். பெயர்ச்சிகள் நடப்பதால நான் முயற்சிகள் செய்யாம இருக்க முடியுமா? சொல்லுங்க!
போட்ட உழைப்பு பலன் தரும்னு நாம எதிர்பார்க்கலாம் ஆனால் அதையும்மீறி முடிவு சாதகமில்லாம போனால் அது நம்மை மீறிய செயல். கூரையை பிச்சிகிட்டு கொட்டுற யோகம் இருந்தா நாம உழைக்காமலே நிச்சயம் அது வந்து சேரும் என்பதுதான் பிராப்தம். நாம என்னைக்கோ செய்த தர்மமோ அடித்தளம் போட்ட உழைப்போ, நாம சும்மா இருக்கும்போது எதிர் பார்க்காமலே யோக காலத்துல பலன் தரும்" என்றேன்.
அவர் "அது சரி. நாம கட்டுப்படுத்த முடியாது. கடவுளா பார்த்து செய்தா உண்டு" என்றார்.
அடடே, நான் சொன்னதை கப்புனு புரிஞ்சிகிட்டார். புத்திசாலி.
ஸ்காட்லன்ட் to மந்திராலயம்.
1827 வரை மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்ரோ, மந்திராலயத்தில் சுவாமி ராகவேந்திரரின் தரிசனத்தை நேரடியாகக் கண்டதை நாம் அறிவோம். இது கவர்மண்ட் கெஸட்டில் உள்ள பழைய செய்தி.
மன்ரோ சந்ததியின் 5 ஆம் தலைமுறையினர் அண்மையில் மந்திராலயம் வந்து மகானின் சமாதியில் வழிபட்டனர். மிகுந்த பக்தி வெள்ளத்தில் எல்லோரும் தங்கள் மூதாதையர் தரிசித்த தலத்தை வணங்கினர். பிற்பாடு அருகிலுள்ள மற்ற கோயில்களுக்கும் சென்றனர்.
மன்ரோ என்ற கிறிஸ்தவனுக்கு கிட்டிய தரிசனம் நமக்கு கிட்டவில்லையே என்று வருத்தப்பட்ட அப்போதைய மடாதிபதிக்கு அம்மகான் கனவில் காரணத்தைச் சொன்னார். கடந்த யுகத்தில் தான் பிரகலாதனாய் இருந்தபோது மன்ரோ தன்னுடைய பால்ய சிநேகிதன் என்றும், அவன் கையால்தான் அதோனி தாலுக்கா மாஞ்சால கிராமம் வரிவிலக்கு பெற வேண்டும் என்பது இறை சித்தம். ஆகவே அவனுக்கு தரிசனம் தந்ததாக தெளிவு படுத்தினார்.
தன் 65வது வயதில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டாவில் காலரா நோய் தாக்கி இறந்தார். அவருடைய உடல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை (St. Marys Church) வளாகத்தில் புதைக்கப் பட்டது. அங்கும் இவர்கள் சென்று மரியாதை செலுத்தினார்கள்.
Sir Thomas Munro |
வியாழன், 11 அக்டோபர், 2018
விடியல் தேசம்
ஈசனிடமிருந்து வடமொழியும் தமிழும் ஒருங்கே பிறந்தன என்று சித்தர் பாடல்கள் மேற்கோள் கொண்டு பழைய பதிவுகளில் ஆழமாக நிறைய பார்த்துவிட்டோம். நம்முடைய தென்னாடு இன்றைக்கு கடல் கொண்டது. குமரிக்கண்டத்தின் எஞ்சிய வடபகுதிதான் பொதிகைக்கு சாட்சியாக இன்றுள்ளது. கடல்கோளில் அது ஏன் அழியவில்லை? அகத்தியனின் மலைத்தேசம் நிலைக்க வேண்டும் என்பது ஈசனின் சித்தம்.
குமரி என்று ஏன் பெயர் வரவேண்டும்? குமரி என்றால் கன்னி, அதிகாலை, விடியல், இளமை, புத்துணர்வு, கற்றாழை என்று பலபொருள் கொள்ளலாம். நம் நாடு மூழ்கிய தேசத்தையும் சேர்ந்தது பகுதிதான் என்றால் பரந்துபட்ட நம் இந்தியாவுக்கு ஏன் குமரி /பாலா என்று பெயர் இருக்கவில்லை? அக்காலத்தில் அன்றைய நிலப்பிரதேசம் தூரக்கிழக்கு எல்லை முதல் ஆப்பிரிக்கவரை இருந்தது. நெடுக்கே ஏறக்குறைய ஆர்டிக் முதல் தென் இலங்கைக்கு கீழாக நெடுந்தூரம்வரை இருந்தது. சித்தர் பாடல்களில் வரும் சில பெயர்கள் இன்றைய வழக்கில் இல்லை என்பதும் தெரிகிறது. சங்க இலக்கியம் சொல்லும் நாவலன் தீவு (ஜம்பு துவீபம்), பஃருளி ஆறு, எல்லாம் குமரிக்கண்டத்தோடு சரி. ஆஸ்திரேலியாவும் அன்றைய பூகோள பகுதியில் ஒருங்கிணைந்த நிலப்பரப்புதான். இதெல்லாம் அவ்வப்போது பழைய பதிவுகளில் பார்த்தோம்.
எந்த பூஜையாக இருந்தாலும் அதில் சங்கல்பம் செய்யும் மந்திரத்தில் ‘ஜம்புத் துவீபே பாரத வருஷே பரதக் கண்டே மேரோ தக்ஷிணே...’ என்ற வடமொழி சொற்கள் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அதாவது, மேருமலைக்கு தெற்கே நாவலன் தீவில் பாரத தேசத்தில் பரதன் ஆண்ட பகுதியில் உள்ளோம் என்று பொருள்படும். போன சுற்று மனுவந்திரம் காலத்தின் சங்கல்ப மந்திரத்தில் என்ன references இருந்ததோ யாம் அறியோம்.
வேதங்கள் எழுதாகிளவியாக வடமொழியில் உச்சரிக்கப்பட்டு, கர்ண பரம்பரையாக அவை வந்தன. அதற்கென எழுத்துரு இருக்கவில்லை. அதனால்தான் பின்னாளில் தொல்லியல்துறை தோண்டி எடுத்த அண்டா/குண்டா/பானை ஓடுகளில் வடமொழியும் தமிழும் பொது பிரம்மியில் எழுதப்பட்டிருந்தது. வேதங்களிலேயே முருகனைப்பற்றிய குறிப்பு உள்ளது என்றால் இரண்டு மொழிகளும் ஆதி மொழிகளே. ஒன்று வடிவம் இல்லாத உபதேச மந்திரமொழி. இன்னொன்று வடிவம் பெற்ற மனுமொழி. வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் குமரிகண்ட எல்லை பற்றி குறிப்பு உள்ளது. அதாவது ‘ஜம்பு துவீபத்தின் வடக்கே உதயகிரி சிகரத்தில்தான் சூரியன் (பானு) தன் ரதத்தை செலுத்தத் துவங்கி, அரை சுற்று முடித்து மேற்கே அஸ்தம கிரியில் மறைகிறான்’ என்பதுதான் அந்தக் குறிப்பு. பிறகு அரைசுற்று முடித்து பனிமலை மேருவை வலம் வந்து மீண்டும் உதயகிரியில் எழுகிறான்.
நமக்குத் தெரிந்து The land of rising sun என்பது ஜப்பான். ஆக, அதுவும் நம் தேசத்தில் இருந்ததுவே என்பதும் தெளிவாகிறது. அதுசரி, பாரத் என்பது பரதனின் பெயரைத்தான் குறிக்கும் என்றால் அது தவறு. பானுவின் ரதம் புறப்படும் தேசம் என்பதால் அது பா-ரதம் என்று அழைக்கலாயிற்று. நம்முடைய நாவலன் (எ) ஜம்பு துவீபம் எத்தனை பெருமை வாய்ந்தது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவு.
முதலில் வந்த மொழியைக்கொண்டே தேசம் பெயர் பெற்றது. தமிழை ஆராயும்போது வடமொழியை ஏற்றிச்சொல்வது முரணாகும் என்ற அறியாமையில் ஈசனின் மொழியை ஒரு நூற்றாண்டாக பழித்து வந்தனர். இறை மார்க்கத்திலுள்ள தமிழ்நேச அருளாளர்களும் இத்தவறை செய்து வருகிறார்கள்.
சனி, 6 அக்டோபர், 2018
ஒரு தவறும் இல்லை!
பதிவிலுள்ள படச் செய்தியைப் படிக்கும்போது "கிறித்துவங்க இப்போ என்ன புதுசா கொளுத்தி போடறாங்க?" என்ற எண்ணம்தான் வரும். சமீப காலமாக ஹிந்து கடவுளையும் ஹிந்துக்களையும் வசைமாரி பொழிந்து கேலி பேசும் கிறித்தவர்களைக் காண்கிறோம். இன்றைய கொந்தளித்த நிலையில் இதைப் பார்க்கும்போது "என்ன துணிச்சல் இருந்தா இப்படி போடுவானுங்க?" என்று கோபப்பட தோன்றும்.
ஆனால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நிலவியது என்ன? முற்போக்கு எண்ணங்களும், ஆரியர் எதிர்ப்பு, வேதம்/சமஸ்கிருதம்/பிராமணர் எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் ஏழை பிராமணர்களை புறக்கணித்த சமுதாயம் இருந்தது. தமிழகத்தில் பெரியார் இயக்கம் காலூன்றி இருந்தபோது, இவர்களுடைய வளர்ச்சியை எல்லா வழியிலும் தடுத்தனர். ஒரு கட்டத்தில், வேறு வழியில்லாமல் மதராஸ் மாகாணத்தில் பள்ளிக்கல்வி வரை படித்த வறுமையில் வாடிய பிராமணர்களை கிறிஸ்துவ மிஷனரிகள் அணுகியது. "மேற்படிப்பு தருகிறோம், நல்ல எதிர்காலம் அமைத்துத் தருகிறோம், உன் பெற்றோருக்கு வேண்டிய உதவி செய்து கொடுக்கிறோம், எங்கள் மதத்தில் சேர விருப்பமா?" என்று கேட்டன.
இவர்கள் அப்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு மதம் மாறினார்கள். ஏதோ, வறுமையில் இருந்த பிற தாழ்த்தப்பட்ட சாதியினர்தான் மதம் மாறினார்கள் என்று நினைக்க வேண்டாம். பிராமணர்களும் மாறினர். இவர்கள் பிற்காலத்தில் சர்வகலாசாலை துணை வேந்தர்களாக, மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, கல்வியாளராக பரிமளித்தனர். அக்காலத்தில் இப்படி எல்லாம் நடந்தைப் பற்றி சொன்னவர் காலஞ்சென்ற டாக்டர். மால்கம் ஆதிசேஷய்யா.
இப்படியொரு நிலை இருந்துள்ளது என்பது நமக்கே ஆச்சரியத்தைத் தரும். உடுமலைபேட்டை சங்கர் கொலை முதல் அண்மையில் தேனியில் நடந்த அருந்ததி கற்பழிப்புக் கொலைவரை நம் சமூக ஊடங்கங்களில் 'மேல் ஜாதியினரின் அராஜகம்' என்று தலைப்பிட்டு அம்பேத்கர்/ பெரியார்/ முற்போக்கு இயக்கங்கள் பிராமணர்களைத்தான் ஏசுவதை பார்த்துள்ளேன். அதை படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. இதுபோன்ற சாதி மறுப்பு கொலைகளில் கைதான முக்குலத்தோர், கவுண்டர், முதலியார், ரெட்டியார் எல்லோரையும் பிராமணராக கருதி அங்கே விமர்சனங்கள் போடுகிறார்கள். ஆக, இப்படி இருக்கிறது இன்றைய நிலை!
போர்த்துகீசியர் காலத்தில் வேளாங்கண்ணி மாதா தரிசனம் தந்த காலத்தில், தேவாரம் பாடல்பெற்ற தென்னாட்டு தலங்களில் எல்லா ஜாதி ஆண்களும் குடுமிதான் வைத்திருந்தனர். அப்படியான ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கலாம். அதைப் பார்த்து விட்டு 'மேரி மாதாவிடம் ஒரு பிராமணன் யாசகம் கேட்பதாக சித்தரிப்பது தவறு' என்று பல அமைப்புகள் திடீரென வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளது. இதை பெரிது படுத்தாமல் விடுவதே நன்று.
செவ்வாய், 2 அக்டோபர், 2018
காந்திய சோதனை
"மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்று உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும்" என்று மஹாத்மா காந்தி தன்னுடைய 'சத்திய சோதனை'யில் சொல்லியுள்ளார்.
இன்றைக்கு இதையெல்லாம் சிறு குழந்தையும் நம்பாது. பெரிய கொலைகளை செய்துவிட்டு இந்த மாதிரி பாவமன்னிப்பு கேட்டு விட்டால் சிறை தண்டனை கிடைக்காதா? அல்லது சிறையில் சொகுசாக வாழ வசதி செய்து கொடுக்க மாட்டார்களா? இனிமேல் பாதகம் செய்யமாட்டேன் என்று நீதிபதிமுன் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டால் சிறையில் இருந்துகொண்டே வெளியே வந்து பலபேர்களை தீர்த்துக் கட்டிவிட்டு அமுக்கமாக போய் சிறையில் மீண்டும் உட்கார்ந்து கொள்ள முடியாதா?
காலக்ஞானம் தீர்க்கதரிசன நூலில் போதுலூரி ஸ்ரீ வீரப்ரம்மேந்திர சுவாமி இவ்வாறு கூறினார், "கலி 5000 ஆண்டுகளுக்குப்பிறகு வைசியர் குலத்தில் காந்தி என்ற ஒரு சத்தியவான் வருவான், தேசத்தின் போக்கை நல்வழிப்படுத்துவான்."
அக்காலத்து தர்மநெறிக்கு அவர் பேச்சு எடுபட்டது. நாடு சுதந்திரம் பெற்ற ஓராண்டுக்குள்ளேயே அவரை அனுப்பி வைத்தோம். மஹாத்மாவின் போதனைகள் ஐம்பது ஆண்டுகளிலேயே பயனில்லாமல் போய்விட்டதும், கிண்டல் கேலிக்கு உட்படுவதும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதர்மம் மேலோங்கும் இக்காலத்துக்கு அவருடைய போதனைகள் சற்றும் ஏற்புடையதல்ல. இத்தனை ஆண்டுகள் தண்டனை அனுபவித்தாகி விட்டது இனியும் சிறையில் இருக்க வேண்டியது அவசியமில்லை. ஜனாதிபதியும் ஆளுநரும் கொலைக் கைதிகளை விடுவித்தே ஆகவேண்டும் என சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்றும் அளவில் இருக்கிறோம். அவரவர் மனதிற்கு சரி எனப்பட்டத்தை எல்லா கட்சியினரும் செய்கிறார்கள். நாம் வேடிக்கைப் பார்க்கிறோம்.
மஹாத்மாவை இனியும் நாம் கிண்டல் செய்வதும் பக்தி பூர்வமாக பாசாங்கு செய்வதும் கடவுளுக்கே அடுக்காது! நான் யதார்த்தமாக சொல்வது சரியா தவறா என்பதை அவரவர் மனம்தான் முடிவு செய்யவேண்டும். என்னடா இவன் இப்படிப் பேசுகிறான் என்று நினைக்க வேண்டாம். நான் மாணவனாக இருந்தபோது கல்லூரிகளுக்கிடையேயான 'Gandhian Studies' தலைப்பில் வைத்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவன். இன்றும் 'சத்திய சோதனை' புத்தகத்தை படித்துப் பாதுகாக்கிறேன்.
வெள்ளி, 28 செப்டம்பர், 2018
திரிகோணவியல் மாயன் கட்டுமானம்
பிரமிட் என்றால் எகிப்து மட்டுமே என்று பலபேர் நினைப்போர்
உண்டு. அப்படி இல்லை. தஞ்சாவூர் கோயில் விமானம் முதற்கொண்டு உலகில் பல கட்டுமானங்கள்
மயன் காலத்து சூத்திரங்கள் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். காலங்கி போகர் கருவூரார்
எல்லோருமே ‘மயன் வம்ச விஸ்வகர்மா எனலாகும்’ என்பது பல பாடல்களில் குறிப்பு உள்ளது.
பலபேருக்கு இந்த விஸ்வகர்மா என்ற பெயர் கேட்டாலே புதிராக
இருக்கும். சிலர் ஏளனமாக பார்ப்பதுண்டு. நான் பார்த்தவரை, முகநூலிலேயே ஆரியர்கள்
அல்லாத குறிசொல்லும் மருளாளிகள் சிலர் சந்தடிசாக்கில் விஸ்வகர்மாக்களையும் சித்த
நூல்களையும் பழித்துப் பேசுவதைக் கண்டுள்ளேன். என்னதான் அருளாளர்கள் என்றாலும்
ஜாதி துவேஷம், மறை எதிர்ப்பு, மொழி வெறி, சித்த நிந்தனை என்பது இருக்கத்தான்
செய்கிறது. அவர்கள் தி.க. கட்சியினரோ என்ற சந்தேகம்கூட வரும். நாம் இதுகாறும்
பாதுகாத்து படித்த சித்த நூல்கள் எல்லாமே பொய் புரட்டு என்று இத்தகையவர்கள்
கிளப்புவது சகஜமாகிவிட்டது. அரசாங்க ஆவண காப்பகத்திலும், தஞ்சை சரஸ்வதி மஹாலிலும்
உறங்கும் பல எண்ணற்ற சுவடிகளின் ரிஷிமூலம் நதிமூலம் கண்டறிவது கடினம். அப்படி என்றால்
திருக்குறளும் இந்த சந்தேக பட்டியலில் வரும் போல! அத்தகைய அரிதான நூல்கள் எல்லாம்
எப்படி யார் மூலம் அங்கு போய் சேர்கிறது, பின்னணியிலுள்ளவர்கள் யார் என்பதைப்பற்றி
முன்பு விளக்கமாக ஒரு பதிவிட்டேன். சரி, நாம் விஷயத்துக்கு வருவோம்.
ஆக்கங்கள் எல்லாமே தேவ தச்சர்கள் வழியில் வந்த பஞ்சமகலை
என்பதைக் முன்பே குறிப்பிட்டிருந்தேன். முன்பெல்லாம் எல்லா அரண்மனைகளும் கோயில்
கோபுரங்களும் பிரமிட் வடிவம்போல் அகண்ட விமானம் கொண்டிருந்தது. இன்றும் சீன,
மலையாள கோயில்கள் எல்லாமே இதனை நன்கு பின்பற்றுகிறது. பிறகு பொருளாதாரத்தையும் இடப்
பற்றாக்குறையும் கருத்தில் கொண்டு அதன் அளவு சிறுத்துப்போய் ஓரளவுக்கு இன்று
நிலைத்துள்ளது. எகிப்து பிரமிட்களில் இதுவரை பல மேல்நாட்டு ஆய்வாளர்கள் இறங்கி
சோதனை செய்தார்கள். அடிக்கடி Netfilx இதைப்பற்றி பறைசாற்றும். ஆனால் அவர்கள்
யாரும் நம் இந்துசமய வாஸ்து சாஸ்த்திர நோக்கிலோ, வேதமந்திர சப்த அதிர்வுகள்
கோணத்திலோ, புவி ஸ்படிக யந்திர பரீட்சையோ செய்யவில்லை. ஏன்? அங்கு யாரும்
நம்மவர்கள் இல்லை. நம்மைப் பொறுத்தவரை ஸ்ரீசக்ரம் (எ) மேரு வடிவமே பிரமிட்தான்.
வியாழன், 27 செப்டம்பர், 2018
தர்மம் காக்கப்படுகிறதா?
“காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு பலமாதங்களாக ஊதியம் தரப்படவில்லை” என்ற ஒரு செய்தியை அண்மையில் படித்தேன்.
கோயில் அர்ச்சகர்களுக்கு மூவாயிரத்துக்கும் குறைவாக அடிமாட்டு சம்பளமும் அதேசமயம் அறநிலயத்துறையில் கடைநிலை ஊழியருக்கு இருபதாயிரமும் உள்ளது. கோயில் பெயர் பலகையில் ‘அருள்மிகு’ என்ற சொல் பொறித்த அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் நீங்கலாக சில கோயில்களில் மட்டும்தான் கவுரதையான ஊதியத்தை அர்ச்சகர்களுக்கு வழங்குகிறார்கள். கோயிலில் உண்டியில் விழும் பணம் அர்ச்சகர்களுக்குப் போய்ச்சேராது. தட்டில் விழுந்தால் மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
எல்லா கோயில்களிலும் சேரும் நிதி என்னவாகிறது? அர்ச்சகர்கள் மற்ற நாட்களில் மண்டபத்தில்/ வீடுகளில் வேறு விசேஷங்களுக்கு போயாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். இல்லாவிட்டால் எப்படி ஜீவனம் செய்வது? அதனால் தங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையை வேறு தொழில் கல்விக்கு போகும்படி பணிக்கிறார்கள். இதுபோக நம் அரசு இந்து அறநிலையத்துறைமூலம் சேரும் நிதியைக்கொண்டுதான் மற்ற மதங்களின் பள்ளிவாசல்/தேவாலய தேவைக்கு கொடை செய்கிறது என்பது நாம் அறிந்ததுவே.
ஒருபுறம் அர்ச்சகர்களின் நிலை இழிவாக உள்ளது. இன்னொருபுறம், கலியுகத்தின் பிரதம பாதத்தில் கலி 5000 ஆண்டுகளுக்குப்பிறகு வேதியர்களின் நிலை சீர்கெடும் என்று அன்றே காலக்ஞானத்தில் தீர்க்கதரிசனம் உள்ளது. இது அவர்களுடைய ஊழ்வினைப் பயனே! இல்லாவிட்டால் வேறு ஜாதியில் பிறந்து வேறு தொழில் செய்யாமல் இக்குலத்தில் வந்து பிறப்பானேன்? இனி ‘எல்லா ஜாதியினரும் கோயில் அர்ச்சராகலாம்’ என்ற நிலை வந்தால் அவர்களும் ஆளாளுக்கு கோயில் தூணில் சாய்ந்து கொண்டு அட்டதிக் பாலகர்கலாக அமரவேண்டியதுதான். இறைத்தொண்டு புரிந்து வேதம் ஓதி பூசிக்கும் ஆதிசைவர்களைப்போல் எளிமையாக பொறுமையாக வாழ மற்றவர்களால் இருக்க முடியுமா? ஏதோ, சமூக கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்காக கழக ஆட்சியில் இதெல்லாம் வீம்புக்காக செய்யப்பட்டது. கேரளத்தில் இது சாத்தியப்பட்டாலும் இங்கு இது வேலைக்கு ஆகுமா? இதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆன்மிகத்தை ஆகமங்களை வேதத்தை வேதியனை, எதிர்த்து ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆரம்பித்த விடுதலை வேட்கையில் கழக தீவட்டிகளே எரிந்துபோகும் அபயாமே உள்ளது. இதுவும் பஞ்சபூதத்தானின் சீற்றத்தை அதிகரிக்கச் செய்யும். ஆரியர் / திராவிடர் என சொல்ல ஆரம்பித்து இறை நிந்தனை செய்து, மறையை எதிர்த்து, எல்லாமே தமிழ்தான் என்று சொல்லிக்கொண்டு பாதகங்களை விளைவித்து விட்டனர். இறை மொழியைக் கொண்டே இறைவனை எதிர்க்கும் தத்துவம் நம் தென்னகத்தில்தான் நடக்கும். நாம் எல்லோரும் இதிலிருந்து தப்பிக்கும் உபாயத்தை அறிந்துள்ளோம்.
என்னதான் ஈசனைத் தொட்டு பூசித்தாலும், மிகஅரிதாக எங்கேனும் தவறு இழைக்கும் அர்ச்சகர் இருக்கத்தான் செய்வார். அது அவருடைய கோள்சார கர்மவிதியாக இருப்பது. நிர்வாகமோ அதன் முக்கியஸ்தரோ இவர்களை மிரட்டிப் பணியவைத்து காரியம் சாதித்தால்தான் உண்டு. அதைத்தாண்டி தனி நபராக எந்தவொரு பெரிய துணிகர கொள்ளையோ, கடத்தலோ செய்துள்ளதாக எனக்குத் தெரிந்து இல்லை. வறுமையின் காரணமாக இவர்கள் வேதம் ஓதுதலை நிறுத்தினாலோ, தங்கள் பணியை செய்யாது போனாலோ குந்தகம் யாருக்கு? இதைப்பற்றி திருமூலர் முதல் திருவள்ளுவர் வரை விரிவாகச் சொல்லியுள்ளனர். அது நாட்டின் இறையாண்மையையும் மக்களையும் பாதிக்கும், வளத்தை சீர்குலைக்கும் என்கிறார்கள்.
‘யானைப்பாகன் பணக்காரன் ஆகிவிட்டான். ஆனால் யானை இன்னும் யாசித்துக்கொண்டு இருக்கிறது’
இரகுவம்ச ராஜ்ஜியம்
இராமனுக்குப் பிறகு மகன்கள் அரசாட்சி செய்தனர். மகன் குசா அரசாட்சி செய்த காலத்தில் நம் தேசத்தை ஒட்டியபடி இருந்தவொரு மஹா துவீபத்தை இரு பிரிவாக பிரித்து ஆண்டான். அவை, சிவதான் மற்றும் குஷ் த்வீப். துவாபர யுகத்தில் இருந்த இவ்விரண்டும் இன்றைக்கு சூடான் மற்றும் அபிரிக்காவாக உள்ளது. குசாவுக்குப் பிறகு சுமார் 28 தலைமுறைகள் கழிந்தபின் பிருகத்பாலனோடு ரகுவம்சம் வாரிசில்லாமல் முடிவுக்கு வந்து நின்றது என்று பாகவத புராணம் கூறுகிறது. இந்த பிருஹத்பாலன் பின்னாளில் குருக்ஷேத்திர போரில் கௌரவர்களுக்கு ஆதரவாக போரிட்டான். அவன் அபிமன்யுவால் சக்ரவியூகத்தில் கொல்லப்பட்டான்.
அதெல்லாம் சரி. புராணங்களில் சொல்லப்பட்டதை நாம் பார்த்தோமா? எப்படி நம்புவது? ஒவ்வொரு துவாபர யுகத்திலும் வியாசர் என்பவர் அவதரித்து அனைத்து சுருதி-ஸ்மிருதி நூல்களை செப்பனிடுவார் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். இதெல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டது. துவாபர யுகத்தில் ஒவ்வொருவரும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தனர் என்று போகர் சொல்கிறார். அப்படிப் பார்த்தால் இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் இரண்டிற்கும் சுமார் 20,000 வருடங்கள் இருக்கவேண்டும். என் ஆய்வுப்படி இராவணன் இராமனைவிட பல்லாயிரம் வருடங்கள் மூத்தவர். ஆகவே மனிதனால் இத்தனை புராணங்களையும் எழுதி நிர்மாணித்து, இன்று நாம் படித்துத் தெரிந்து கொள்ளும்வரை அதை காப்பது என்பது கடவுள் செயல்.
வேத காலம் என்பதே சுமார் 3000 வருடங்கள்தான் ஆகிறது. நீங்கள் சொல்வதற்கு தக்க தொல்லியல் ஆதாரங்கள் உண்டா? அதெப்படி காக்கப்படும்? என்று இன்றைக்கும் நம்மவர்கள் கேட்பதால் மேல்நாட்டு பாதிரிகளும் இஸ்லாமியர்களும் குதர்க்கமாக கேட்கத்தான் செய்வார்கள். குகையில் நபி நாதருக்கு ஜிப்ரேல் அசரீரியாக குரான் அளித்தார் என்று சொன்னால் மட்டும் நாம் ஏன் ஏற்கவேண்டும்? நேரில் பார்த்தோமா? இயேசு விஸ்வகர்ம ஆச்சாரி என்று நாம் சொன்னால் மேல்நாட்டினர் எற்பார்களோ? நாம் இன்றைக்குப் படிக்கும் வால்மீகி/ கம்பன் இராமகாதைகளில் பல வேற்றுமைகள் உள்ளதால் அவற்றை கற்பனை என்கிறோம். ஆனால் புராணங்கள் அப்படியல்ல.
இலங்கையில் பிரம்மாஸ்திரம் எய்தும்போது இராமனுக்கு முருகன் நின்று அருள் புரிந்தான். இராமன் வெற்றிபெற அகத்தியர் மந்திர உபதேசம் செய்தார். முருகன் இருந்தால் தமிழ் இருக்கும். அப்போது இராமன்/இராவணன் ஆகியோர் தமிழையும் அறிந்திருப்பார்கள். அப்படி என்றால் இன்றைக்கு இந்தியாவுக்கு மேற்கே/வடக்கே ஆரிய பகுதிகள் என்று நாம் சொல்லும் தேசங்களில் எல்லாம் தமிழே இருந்தது. அதெப்படி திடீரென்று ஆரியர்கள் என்ற சொல் பிரயோகத்தில் வரும்? பொதுவாக ஆரிய என்றால் மேன்மை, உயர்வு, முதன்மை என்று பல பொருள்படும். கடந்த யுகங்களில் எல்லாம் ஒன்றுபட்ட பூமியாகவே பெரிய துவீபமாக திகழ்ந்தது. எல்லாவற்றுக்கும் குமரிக்கண்டம்தான் அஸ்திவாரம். அதன் எஞ்சிய பகுதியே இன்றைய குமரி. அங்குதான் சுயம்பு மனு மனித குலத்தை சிருஷ்டித்தான். ஆக, ஏன் நம்மை பிறர் எதிர்கிறார்கள்? நாம் நம்முடைய தெய்வாம்ச புராணங்களை மட்டமாக பேசுவதாலும், நம்ப மறுப்பதாலும் மற்றவர்கள் கையோங்கிவிட்டது. ருஷியா அப்கானிஸ்தான் எகிப்து சுமேரியா தென்னமரிகா முதலான பிராந்தியங்களில் வேதம் மந்திர கோஷமாகவும், தமிழ் சமூக மொழியாகவும் நிலைத்து இருந்தது. அங்கு எடுக்கப்பட்ட பானைகள் கல்வெட்டுகள் எல்லாமே நம் தென்கோடி கீழடி வரை பேதமின்றி ஒத்துப்போகிறது. சமஸ்கிருதம்/ தமிழ் மொழிகளிருந்து பிற்பாடு பரந்துபட்ட ஆரிய தேசங்களில் பல மொழிகள் பிறந்தன.
ஈசனின் வேதத்தை வியாசர் தொகுத்தார். ஆனால் ஏன் இத்தனைப் புராணங்களை அளிக்கவேண்டும்? கடந்துவந்த பாதையையும் நடந்த நிகழ்வுகளையும் கலியுக மக்கள் அறியவேண்டும் என்பதற்காக ஈசனே பணித்த தொகுப்புப் பணிதான் இவை. ஒரு பேச்சுக்கு அச்சு/மின்னூல்/ஒலி/ஒளி முறைகளிலுள்ள வேதங்களையும் புராணங்களையும் எப்பாடுபட்டாவது அழித்துவிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் என்னவாகும்? அரூபமாக ஈசனின் கட்டுப்பாட்டில் உள்ள அத்தனையும் மீண்டும் சிருஷ்டியாகும். மேருவுக்கு உத்தரத்தில் (வடக்கே/வட மேற்கே) எல்லாமே ஆரிய பகுதி என்றும், கீழே தென்னாடு அனைத்தும் தக்ஷிணபாதம் என்று கொள்ளப்பட்டது. எல்லாமே வேதமறை போற்றிய மனுமொழி தமிழ் சமூகமே! முற்போக்கு நாத்திகர்கள் மற்றும் அயல் மதத்தினர்கள் இங்கே சர்ச்சை கிளப்பி நம் தொல் தத்துவத்தை புறம் தள்ளுகிறார்கள். வடக்கே நம் சகோதர்களுக்குத் தெரியாத பல ரகசியங்களை நாம் தெரிந்து வைத்துள்ளோம்.
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் எத்தனைப்பேர் மாண்டார்கள் என்பதை காலாங்கி பார்த்துள்ளார். அதுபற்றி போகர் கூறுகிறார். கிருத யுகத்தில் கோடி சங்கம், திரேதா யுகத்தில் லட்சத்து நூறு சங்கம், த்வாபர யுகத்தில் லட்சமது எண்பத்திரண்டு சங்கம். கலி யுகத்தில் அவர் சமாதிக்குப் போகும் வரை பார்த்தது லட்சமது நாற்பத்திரண்டு சங்கம் என்று விவரிக்கிறார். (சங்கம் =1015, quadrillion) இத்தனை ஜனத்தொகை அப்போதிருந்ததா என்ற ஐயம் சிலருக்கு எழும். இதில் மறு ஜென்ம பிறப்பு/ இறப்பு அடங்கும் என்று அனுமானித்துக் கொள்ளவேண்டும். கலியுக முடிவில் மனிதனின் ஆயுள் நூறு மட்டுமே என்கிறார் போகர்.
(கற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் அடுத்து வரவுள்ள என்னுடைய புத்தகத்தில் ஒரு சிறு பகுதியை கருத்துப் பதிவாக இட்டேன்.)
செவ்வாய், 25 செப்டம்பர், 2018
மறைந்துவரும் ‘லென்டிங் லைப்ரரி’
பல வருடங்களுக்குப்பிறகு இன்றுதான் ஒரு லென்டிங் நூலகத்திற்குச் சென்றேன். ‘விக்னேஸ்வரா லென்டிங் லைப்ரரி, வளசரவாக்கம்.' பழுப்பாகிப்போன பல புத்தகங்கள் அங்கே புத்தக அடுக்குகளில் சோம்பிக் கிடந்தது. சாண்டில்யன், லட்சுமி, தீபம் பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் இக்கால எழுத்தாளர்கள் வரை பலதும் அடுக்கி வைத்திருந்தார். இன்னொருபுறம் ஹேட்லி சேஸ், அகதா கிறிஸ்டி, டின்டின், முதல் ஹாரி பாட்டர் வரை இருந்தன. எங்களை யாரேனும் வந்து புரட்டிப் பாருங்கள் என்று கூவாத குறையாக அங்கே ரசகற்பூரம் மணக்க புத்தகங்கள் ஏங்கிக்கொண்டு இருந்தன.
“சார், இப்பல்லாம் மின்னமாதிரி அதிகமா யாரும் படிக்க வருவதில்லை. சித்தர்கள், அமானுஷ்யம், சுயமுன்னேற்றம், இதை மாதிரி படிக்கும் சிறு கூட்டம் உண்டு. மத்தவங்க எல்லாம் கல்கண்டு, ராணி, குரு பெயர்ச்சி பலன்கள் போன்றதை தேடுகிறார்கள். இன்னும் சில பசங்க வந்து காதல் கவிதைகள் புக்ஸ் இருக்கானு கேக்குறாங்க” என்று கூறினார் அதன் உரிமையாளர் திரு.சுப்பிரமணியன்.
“வரும் சந்தா பணமும், சர்குலேஷனில் வரும் லென்டிங் பணமும் போதவில்லை. கடை வாடகைக்கே வரும் தொகை போய்விடுகிறது. சிலர் படித்துவிட்டு அப்படியே அபேஸ் செய்வார்கள், வீடு மாற்றிக்கொண்டு கொடுக்காமல் போய் விடுவார்கள், தொலைந்து போச்சு என்பார்கள், இப்படியே முக்கால்வாசி புத்தகங்கள் போய்விடுவதுண்டு. அத்தனையும் என்னுடைய 50 வருட சேகரிப்பு சார் என்றார். 1990ல் சுமார் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் இருந்தார்கள். இப்போது முன்னூறு பேர் இருந்தால் அதிகம். இப்போதெல்லாம் எந்த புதிய புத்தகத்தையும் நான் லாமினேட் செய்வதில்லை. போன மழையில் கடையில் தண்ணீர் ஒழுகி மெஷின் கெட்டுப்போச்சு. ரிபேர் செய்ய செலவு ஆவதால் அப்படியே விட்டுட்டேன்.
இங்கே ஆண்டு சந்தா ரூ.400, அதுபோக வாசிக்க எடுத்துப்போகும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் குறைந்தது ரூ.25 - 35 வரை ரீடிங் சார்ஜஸ் வாங்குவேன். அந்த புக்ஸ் நம் கடைக்கு திரும்பி வரும்வரை நிச்சயமில்லை. குறித்த தேதியில் வராவிட்டால் அதைத்தேடி நான் அவங்க வீட்டைத்தேடிக் கண்டு பிடித்து சிரமப்படுவதும் உண்டு. இந்த காலத்துல எந்த பசங்களும் நோட்ஸ் எடுப்பதில்லை. ஸ்கூல் பசங்க இன்டர்நெட்டில் காப்பி அடித்து ஹோம்வர்க் செய்யறாங்க. இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்துகிற e-books ஐ நிறையபேர் முழுதும் படிப்பதில்லை. வாசிப்பு சுத்தமா மாறிப்போச்சு சார். நூலகத்தை என் ஆத்ம திருப்திக்காக நடத்துறேன்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.
அப்போது காரில் வந்து இறங்கிய மெத்தப் படித்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர் ஐந்து தமிழ் புத்தகங்களை திருப்பிக் கொடுக்க வந்தார். மேசையில் வைக்கும்போது அவை என்னவென்று பார்த்தேன். அத்தனையும் அக்கால எழுத்தாளர்களின் நாவல்கள் மற்றும் ஆன்மிக புத்தகங்கள். ஆக, இதுபோன்ற தலைப்புகள்தான் இவர் கடைக்கு சுவாசம் ஊட்டிக் கொண்டிருக்கிறது. புத்தகத் திருட்டை ஒழிக்க முடியாது. வாசிப்பு உலகில் இதெல்லாம் சகஜம்! ஆனால் சற்று காது கேளாத இவருக்கு வாசகர்களின் செயல் நஷ்டப்படுத்தும்.
அவருக்கு நான் எழுதிய சில சித்தவியல், சமூகவியல், தன்னம்பிக்கை புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு வந்தேன். ‘சார், ரொம்ப தேங்க்ஸ். இன்னைக்கே அதை கேட்டலாக் போட்டு ஷெல்ஃப்ல வெச்சிடுறேன் சார்” என்றார். மனிதர் மிகவும் நெகிழ்ந்து போனார்.
தெய்வப் பழம் நீ
பழனி தவத்திரு தங்கவேல் சித்தர் சுவாமிகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூல் 'தெய்வப் பழம் நீ' என்னிடம் இருந்தது. அதை ஒளிநகல் எடுத்து மின்னூலாக மாற்றி இங்கே பதிவேற்றி உள்ளேன். வாசிக்க விருப்பம் உள்ளோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://drive.google.com/open?id=1P0l0-wdxWnceoh-lLvwnmKFqlPaSepdU
https://drive.google.com/open?id=1P0l0-wdxWnceoh-lLvwnmKFqlPaSepdU
வியாழன், 20 செப்டம்பர், 2018
புதன், 19 செப்டம்பர், 2018
நீயும் பொம்மை நானும் பொம்மை
எங்கள் தெருவில் ஒரு Play school உள்ளது. காலையில் 8 மணிக்கெல்லாம் குழந்தைகளை வீட்டிலிருந்து அள்ளிக்கொண்டுவந்து பெற்றோர்கள் இறக்கி விடுவார்கள். காலையில் தவறாமல் 8.30க்கு ஒரு குழந்தை வீரிட்டு அழுவது தெரு முழுக்க ஒலிக்கும்.
அதுபோல் இரவு 8 மணிவரைக்கூட சில குழந்தைகள் வாசல் கதவை பிடித்துக் கொண்டு அழுதுகொண்டு வேடிக்கைப் பார்க்கும். பணிக்கு செல்லவேண்டிய கட்டாயத்திலுள்ள பெற்றோர்கள் வந்து கூட்டிச் செல்லும்வரை நிலை இதுதான். எனக்குத் தெரிந்து அது பெரிய வீடுதான், வராண்டா பகுதியில் பொம்மைகள் விளையாட்டு சாமான்கள் உள்ளது. நாள் முழுக்க அவை என்னதான் விளையாடும்? அலுத்துப்போகும். அங்கே மண்டசோரி ஆசிரியைகள் இருவர், மேய்க்க ஒரு ஆயா உள்ளாள், வாசலில் ஒரு செக்யுரிட்டி. ஆசிரியைகள் போனபின் அடைந்து கிடக்கும் குழந்தைகள் என்னதான் செய்யும்?
கேட்டைத் திறந்துக்கொண்டு சாலையில் இறங்கி விளையாடவும் முடியாது. வாசலில் நின்றால் கொசு கடிக்கும். அவை மிருககாட்சிசாலை கூண்டில் அடைபட்ட பிராணிகளைப்போல் சோர்ந்துபோன முகத்தோடு அங்கேயே திரிந்துகொண்டு இருக்கிறது. இந்த அவஸ்தைகளை குழந்தைகள் அனுபவிக்க வருடத்திற்கு ரூபாய் 1 லட்சம் பீஸ் கட்டுகிறார்கள். இக்குழந்தைகள் ஞாயிறு மட்டும் வீட்டில் தாய் தந்தையோடு விளையாடினால் அதிகம். அதற்குள் தொலைகாட்சி/ வீடியோ கேம்ஸ் போட்டு அதற்கு வெளியுலகம் அறியாமல் செய்து விடுகிறார்கள். கணவன்-மனைவி பொருளீட்ட வேண்டும், குழந்தை பெறவேண்டும், பொருளாதார அந்தஸ்த்து அடைய வேண்டும் என்றால் எப்படி? ஓய்வுபெற்ற நிலையில் எத்தனை பாட்டி தாத்தா இதுபோல் பேரக் குழந்தைகளோடு சரிசமமாக விளையாட முடியும்? அவர்களுக்கே ஒரு காப்பாளர் வேண்டிய நிலைதான் உள்ளது.
இப்போது தெருவில் வரும்போது அக்குழந்தைகள் என் கணில்பட்டனர். குழந்தைப் பருவம் என்னவென்பதை அறியாமலே வளர்ந்து விடுவார்கள். ஐயோ பாவம்!
திங்கள், 17 செப்டம்பர், 2018
ஆனந்தக் களிப்பு
1988 ல் கருவறை பூட்டப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று செப் 16, 2018 திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகளின் சமாதி கோயில் கருவறை திறக்கப்பட்டது. இரவு முதல் அதிகாலைவரை மழை பொழிந்து குளிரிவித்தது. சுவாமிகளின் படத்தை அகற்றினால் பெரிய கதவு புலப்படும். இந்நாள்வரை அக்கதவு வெளியே தெரியாதவாறு படத்தை வைத்து மறைத்திருந்தனர். நீதிமன்றம் சாவியை ஒப்படைக்க வாயில் திறக்கப்பட்டது. குருநாதர் பாதங்களுக்குப் போற்றி. 'வேலும் மயிலும் துணை'
ஞாயிறு, 16 செப்டம்பர், 2018
பாதாள நரகம்!
எனக்குத் தெரிந்த ஒரு கிழவி அண்மையில் தன் 95வது வயதில் மாண்டாள். அவள் இருந்தவரை தன் மகளுடன் கூட்டு சேர்ந்து தன் மருமகளுக்கு சொல்லொணா துயரங்கள் தந்தாள். அக்கிழவியின் குணத்தை அவள் மகனும் ஆதரித்ததுதான் கொடுமை. ஒரு கட்டத்தில் மருமகளை வீட்டை விட்டு துரத்தியும் விட்டாள். காலம் முழுக்க கிழவி பிரச்சனையாகவே இருந்தாள். அவள் எங்கே உள்ளாள் என்பதை அதிகாலை கனவில் பார்த்தேன்.
அவளை யாரோ புதைக்குழிக்குள் இழுப்பதும் அவள் வாய் மூக்கு காது எல்லாம் மண் அடைத்து, கீழே இழுக்கப்படுவதைக் கண்டேன். அவள் என்ன ஆனாள் என்று பார்க்க பாதாள உலகம்வரை பயணித்தேன். அங்கே ஒரு தடாகம் இருக்க சிறு சுறா ஒன்று என் முன்னே வந்து நின்றது. அது தன் வாயை எனக்குத் திறந்துகாட்ட, அங்கே மேல்/ கீழ்த்தாடை கூர் பற்களுக்கு இடையே இக்கிழவி சிக்கிக்கொண்டு திணறுகிறாள். என்னைப் பார்த்ததும் 'நானே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தேன்' என்றாள். உடனே சுறா மீன் போய்விட்டது.
கெத்துதான்! அக்கிழவி இப்படிச் சொன்னது எனக்கு நகைச்சுவையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்ன?
"பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு"
கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு"
பாவங்கள் செய்வதால் அல்லல்பட்டு இறக்க நேரிடும், அந்த ஊழ்வினைக்கேற்ப பிறவிகள் துரத்தும், யமன் துரத்துவான். இப்படியே இந்த ஓட்டம் தொடரும். கோபத்தையும் அதன் காரணிகளையும் விட்டொழித்தால் பிறப்பு-இறப்பு அறுபடும். வேதம் உரைத்த தர்மநெறிப்படி வாழ்ந்தால் மேன்மையான இடத்தை அடையலாம் என்ற கடுவெளி சித்தர் பாடல் என் நினைவுக்கு வந்தது. சொர்க்க/ நரக பதியில் என்ன நடக்கிறது என்பதை பார்த்த குருநாதர் போகரும் இதையேதான் வலியுறுத்தியுள்ளார்.
Divine photo 4
At the Naga-Valli நாகவல்லி ritual function of the wedding, when I clicked, a naga sarpam appeared in the flame with a long projecting split tongue. This homam is done in the afternoon, to propitiate nagadevas and purify the generation without any sarpa dosham. This ritual is widely followed by smartha brahmins of Andhra and Karnataka.
ஞாயிறு, 9 செப்டம்பர், 2018
புது தம்பதி
ஓரினச் சேர்க்கை LGBT சம்பந்தமாக ஒரு தீர்ப்பைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டது உச்ச நீதிமன்றம்! இனி ஊரெல்லாம் ஒற்றைத் தோடு படு ஜரூராக வியாபாரமாகும். ஆங்காங்கு முகநூல் வாட்ஸப் பக்கங்களில் ஆண்களின் வலதுகாது பளபளக்க நிறைய படங்கள் பதிவேற்றம் ஆகிறதாம். மறைவாக செயல்பட்டவர்கள் இனி பகிரங்கமாக உலா வருவார்கள். புறத்தே ஒன்றுமாக, அகத்தே ஒன்றுமாக உருவம்கொண்ட மனிதர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. 'ஒரே குலம் ஒரே இனம்' 'சுதந்திர சுவாசம்' என்று பதாகைகள் ஏந்தி கொண்டாடிய தம்பதியர்கள் அதிகம் இருந்தனர். நேற்றைய டிவி செய்தியில் இதுதான் பிரதானம்.
வாசிக்கலை, நினைவாற்றல், மருத்துவ வர்மம் செயல்பாட்டிற்கு இரு காதுகளிலும் ஆண்கள் கடுக்கன் போட்ட காலம் மலையேறிவிட்டது. ஒற்றைக் காதில் மட்டும் கடுக்கன் /தோடு அணியக்கூடாது என்பது விதி.
அமலுக்கு வரும் புதிய சட்டத்தைக் கொண்டாடும் பிரஜைகளுக்காக ஒரு திருமண வாழ்த்து மடல்.
"ஆணும் ஆணும் நித்திய சிரஞ்ஜீவியாய்
பெண்ணும் பெண்ணும் சுமங்கலியாய்
காணும் ஓரினத்தில் தம்பதி சமேதமாய்
பூணும் வாழ்க்கையில் நீடூழி வாழுங்கள்."
பெண்ணும் பெண்ணும் சுமங்கலியாய்
காணும் ஓரினத்தில் தம்பதி சமேதமாய்
பூணும் வாழ்க்கையில் நீடூழி வாழுங்கள்."
சனி, 25 ஆகஸ்ட், 2018
சூட்சுமம் உணராதோர்
கேரளாவில் கடும்வெள்ளம் ஏற்படும் என்று போன வருடமே ஒருவர் கோள்களின் சஞ்சாரம் மற்றும் பஞ்சாங்க சூத்திரங்களை வைத்து கணித்திருந்தார். அதற்கெல்லாம் சாத்தியமில்லை என்று வானிலை ஆய்வு மையம் அப்போது மறுத்தது.
அண்மையில் அனைத்து வயது பெண்களும் 'சுத்தபத்தமாக' தங்கள் சௌகரியம்போல் சபரிமலைக்கு செல்லலாம். 12-50 வயது பெண்களுக்கு இனி கட்டுப்பாடில்லை என்று உச்சநீதி மன்றம் ஆணை பிரப்பித்தது. இன்றைக்கு எல்லோரும் கல்வியில் முன்னேற்றம் கண்டுவிட்டதால் கோள் என் செய்யும், கடவுள்தான் என் செய்யும் என்ற மூட தத்துவம் பேசி வருகிறார்கள். இவற்றை இன்னும் பின்பற்றுவது சரியில்லை என்பார்கள். ஆக, பக்தியும் உண்டு சிலசமயம் நாத்திகமும் உண்டு என்பதுபோல் சூழல் அமைந்து வருகிறது. அதை மீறிப்போனால் சாதிகள், அடக்குமுறை என்று பிரச்னை எழுப்புவார்கள்.
கேரளாவில் பாதுகாப்பற்ற அணைகளும், பராமரிப்பில் அக்கறைக் காட்டாத பொதுப்பணித் துறையும் இருப்பதால் இந்த அளவுக்கு வெள்ளச் சேதம் ஆகியது. இதில் ஆருடமும் ஐயப்பனும் எப்படி வரும்? என்று சுப்ரதீபமாக பேசும் கூட்டமும் உண்டு.
கேரளாவில் நடந்த பேரிடர் போனவருடம் கணித்த ஆருடத்தாலா? ஐயப்பனின் கோபத்தாலா? கேரள பொதுப்பணித் துறையின் அலட்சியத்தாலா? காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் என்று சிம்பிளாக சொல்லிடலாம். காக்கை உட்கார பனம் விழவேண்டும் என்பது விதி.
மேற்கூறிய எல்லாமே ஒருங்கே நடந்தது. அதுதான் கடவுளின் சித்தம். பஞ்சபூதனின் சூத்திரத்தை அறியாதோர் எல்லாம் பேசுவார்கள். செரித்த உணவும் குடித்த நீரும் மலமும் சிறுநீருமாக பிரிந்து வெளியேறும் என்பது சரீர விதி. உணவு செரிக்க நெட்டை குட்டை, பணக்காரன் ஏழை, புத்திமான் முட்டாள் என்ற பாகுபாடு ஏதுமில்லை. மணமுள்ள உணவை சக்தியாக மாற்றி, துர்நாற்றமிக்க மலத்தை வெளியே தள்ளவும் உடலுக்கு எப்படித் தெரியும்? குடலில் இதை யார் பிரிக்கிறார்கள்? பிரியாவிட்டால் என்னவாகும்? உணவு உண்டு செரித்து சத்துகள் கிரகித்து அதை உடலுக்கு சக்தியாகித் தருவது யாருடைய வேலை? தன்னிச்சையாக நடப்பதா? இதற்கு விடை தெரிந்தால் அவனவன் வாயை மூடிக்கொள்வான்.
வியாழன், 23 ஆகஸ்ட், 2018
புதன், 22 ஆகஸ்ட், 2018
தெரிந்த சங்கதிதான்!
"இப்படி இரு அப்படி இரு. மும்மலங்களை நீக்கு, நல்ல மனதோடு இரு. கெட்ட குணம் கூடாது, உற்றுப்பார்த்து மெய்ப்பொருள் அறிந்துகொள். உன் குருவை உணர உனக்கு ஞானம் வேண்டும். பற்று இல்லாமல் இரு, அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் குணம் கூடாது. நல்லவனாக இரு."
எத்தனை வேதாந்திகள் எத்தனை உபதேசங்கள்! இப்படி ஆளாளுக்கு சொல்வதை எல்லாம் யார் செவி கொடுத்து கேட்பது? நான் யாரையும் கிண்டல் செய்வதாய் நினைக்கக்கூடாது. மேலே சொன்னவை எல்லாமே எல்லோரும் அறிந்த விஷயங்கள்தான். ஆன்மிகம் என்பது அனைவரிடமும் உள்ளொளியாய் இருப்பதுவே. அதை கர்ம வினையின் பலன்கள்தான் திரையிட்டு மறைத்து அஞ்ஞானியாக வைக்கிறது.
ஆன்மிக அன்பர்கள் உபதேசித்தபடி எல்லாம் நாம் கற்று அதன்படி இருக்கமுடியுமா? நாளை என்ற கவலை எல்லோர் மனதிலும் மேலோட்டமாகவோ ஆழ்மனதிலோ இருக்கும். அதை முதலில் எப்போது களைவது? அந்த அச்சம் போனால்தான் மற்றவை கைக்கூடும். வாழ்க்கையில் இதெல்லாம் சௌகரியமாக இருந்தால் மற்ற நெறிகளும் ஆன்மிக பற்றும் தன்னாலே வரும். அவன் எப்போது சாதிப்பது? ஏதோவொரு பிரச்சனை அவனுக்கு வந்துக்கொண்டே இருக்கும். அகக்கடல் எப்போது அடங்குவது? எல்லோருமே சுயம்புதான்! தக்க நேரம் வந்தால்தான் அவன் தன்னை உணர முடியும். தனக்கும் தன்னை சார்ந்தவர்களின் எதிர்கால தேவைகளை பொருளீட்டி பூர்த்தி செய்யவேண்டி இருப்பதால் விசாரங்கள் வந்து வாட்டும். சொத்து சுகம், நிலம் வீடு எல்லாம் சேர்த்து வைத்து, ஓய்வூதியமும் பெற்று மலையடிவாரத்தில் ஒரு ஆசிரமம் நிறுவி செட்டில் ஆகிவிட்டு, 'வாங்க, கடவுளை உணரலாம்!' என்று சொல்லி காலத்தைக் கழிக்க எல்லோராலும் இயலாது. அங்கு உட்கார்ந்தபடி உபதேசம் செய்வது அனைவருக்கும் எளிதே!
பற்றற்ற நிலையை கைக்கொள்ளவும் குருவை உணரவும் ஞானியாகவும் தக்க சமயம் வரவேண்டும். என்னதான் பக்திமானாக வேதாந்தியாக ஆசிர்வதிக்கப்பட்ட அருளாளராக இருந்தாலும், அவனும் மனிதனே! அவனுடைய ஆழ்மனம் அமைதியுற்று தன் புறச்சூழலில் நடக்கும் எதுவும் தன்னை பாதிக்காமல் இருக்குமாறு வைத்துக்கொண்டு தினமும் இயங்கினால்தான் மனம் தெளிவடையும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையவேண்டும் என்றால் அது தன்போக்கில் எந்த உந்துதலும் இல்லாமல் தானே நடக்கும். அதுவரை மந்திரம் தந்திரம் உபதேசங்கள் எல்லாமே வீண்தான். பக்தி நம்பிக்கை பொறுமை, இவைதான் முக்கியம்!
கோடிக்கரையில் பூங்குழலியின் கானம் பலபொருள் கொண்டு கல்கியின் புதினத்தில் நம் காதுகளில் ஒலிக்கிறது.
"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?"
சனி, 18 ஆகஸ்ட், 2018
ஜலப் பிரளயம், ஒரு பாடம்
பஞ்சபூதங்களை உரிமைக் கோரலாமா? கூடாது. அது எல்லோரும் ஜீவித்து வாழ்வதற்காக உள்ளது. கடந்த ஒருவாரமாக அண்டை மாநிலமான கேரளா படும் இன்னலைப் பார்க்கும்போது இருவேறு உணர்வுகள் மேலோங்கும். ஒருபுறம், 'தமிழ்நாட்டைவிட சின்ன மாநிலம். ஐயோ, இத்தனை மழை வெள்ளத்தை அது தாங்குமா?' என்றும், இன்னொருபுறம் 'எல்லா நதிநீரும் தனக்கேனு சொல்லி அணைகள் கட்டிச்சே!' என்று ஏளனமும் வரும்.
உண்மையில் இத்தனை அணைகள் தேவையா? தேவையில்லை. தரை மட்டத்திலுள்ள ஏரி தாங்கல் குளம் கண்மாய்கள் நிரம்பினாலே போதும். அதெல்லாம் தாண்டி எங்கேனும் நதி பெருக்கின் கட்டுப்பாட்டை சீராக்க அணை வேண்டும். மூன்று ஜில்லாவுக்கு ஒன்று என்ற அளவில் சிறிய தடுப்பணைப்போல் இருந்தாலே போதும். பூமிக்கு மேலே சுவர் எழுப்பி நீர் தேக்குவதற்கும், பூமிக்கு சமன்பாட்டில் நீர் தேக்குவதற்கும் நிறைய வேற்றுமை உண்டு. கரிகாலன் தன்னிடம் இருந்த படைபலம்கொண்டு பல அணைகளை கட்டியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. உறுதியாக, எளிமையாக, பயன்பாட்டுக்குத் தக்கபடி கல்லணை ஆயிரம் வருடங்களைக் கடந்து கம்பீரமாக உள்ளது.
இடுக்கி அணைபோல் நீர் தேக்கி வைக்க அதி பயங்கர அணை ஒன்று கேரளாவுக்குத் தேவையில்லை. இயற்கையானது உடனே தன்னுடைய எதிர்மறை போக்கைக் காட்டாது. ஒரு தலைமுறை காலம் எடுக்கிறது. கேரளாவில் நடந்ததும் அப்படியே. குறவன்- குறத்தி மலைகளுக்கு குறுக்கே மத்தியில் சுவர் எழுப்பி, 550 அடிக்கு நீர் தேக்கும் கிண்ணமாக வைத்ததுதான் தவறு. அப்படியே கட்டினாலும் 200 அடி போதுமென கட்டியிருக்கலாம். நீர்தக்கத்தின் உயரம் கூடக்கூட புவியழுத்தத்திலும் பூகோள தட்டுகளின் ஸ்திரமற்ற போக்கு அதிகரித்தது. பேராசை பெரு நஷ்டம்! அங்கு மழை வெள்ளம் அடித்தால், தமிழகத்தில் வலிக்கும். அதுதான் இயற்கையின் நீதி. ஏதோ தமிழகத்தில் வெள்ளப் பேரிடர் நடந்ததுபோல் இங்கு நம்மூருக்குள் பாயும் நதிகள் எல்லாமே பெருக்கெடுத்து பொங்கி ஓடுகிறது.
எல்லா நதிகளையும் இணைக்கும் திட்டம் வந்தால் கடல் முகத்திலுள்ள நமக்கு அது அனுகூலமா ஆபத்தா என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். பல கிராமங்கள் மூழ்கியதால் மீட்பும் நிவாரணமும் நடக்கிறது. நம் மாநிலத்தில் எல்லா நீர்நிலை வழிகளும் கச்சிதமாக பராமரிக்கப் பட்டிருந்தால், கடைமடை பகுதிவரை இண்டு இடுக்கு நீர் நிலைகள் நிரம்பி, பூமி கிரகித்ததுபோக எஞ்சியது எல்லாமே தன்னிச்சையாகவே கடுலுக்குப் போயிருக்கும். நமக்கும் நிறைய தடுப்பணைகள் கட்ட அவசியம் இருக்காது. மணல் திருடியதால் சமனற்ற நதிப்படுகையே உள்ளது. ஆனால் பல நீர்நிலைகள் பதிவு ஆவணங்களில் இன்றும் இடம்பெற்றுள்ளன, பூகோளத்தில் இல்லை. நாம் சுயமாக பாடம் கற்க இதோ டிசம்பர் மாதம் வருகிறது.
எல்லா நதிகளையும் இணைக்கும் திட்டம் வந்தால் கடல் முகத்திலுள்ள நமக்கு அது அனுகூலமா ஆபத்தா என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். பல கிராமங்கள் மூழ்கியதால் மீட்பும் நிவாரணமும் நடக்கிறது. நம் மாநிலத்தில் எல்லா நீர்நிலை வழிகளும் கச்சிதமாக பராமரிக்கப் பட்டிருந்தால், கடைமடை பகுதிவரை இண்டு இடுக்கு நீர் நிலைகள் நிரம்பி, பூமி கிரகித்ததுபோக எஞ்சியது எல்லாமே தன்னிச்சையாகவே கடுலுக்குப் போயிருக்கும். நமக்கும் நிறைய தடுப்பணைகள் கட்ட அவசியம் இருக்காது. மணல் திருடியதால் சமனற்ற நதிப்படுகையே உள்ளது. ஆனால் பல நீர்நிலைகள் பதிவு ஆவணங்களில் இன்றும் இடம்பெற்றுள்ளன, பூகோளத்தில் இல்லை. நாம் சுயமாக பாடம் கற்க இதோ டிசம்பர் மாதம் வருகிறது.
'கலியுகத்தில் கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம், பூகம்பம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடும் துன்பங்களில் சிக்கி இறப்பார்கள்' என்கிறது பாகவத புராணம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)