முகநூல் முழுக்க ஆசிஃபாவுக்கு நிகழ்ந்த கோரமான கொலை பற்றிய கண்டன பதிவுகள்தான் அதிகம் இருந்தது. கற்பழிப்பு-கொலைக்கு காரணமான குற்றவாளியை உடனடியாக தூக்கில்போட கடுமையான சட்டம் வரவேண்டும் என்ற ரீதியில் அவை இருந்தன.
காஷ்மீரத்து ஆசிஃபாவைப்போல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சிறுமிகள் தேசம் முழுதும் அல்லல்பட்டு உயிர் துறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பல சம்பவங்கள் வெளியுலகிற்கு தெரியாமலே போகிறது என்பதுதான் உண்மை.
கடுமையான சட்டம் இயற்றுவது கடினம்தான். கடந்த வருடங்களில் நடந்த எத்தனையோ கோரமான குற்றங்களுக்கு அளித்த தீர்ப்பு இன்னும் முற்றுப் பெறாமல் தொங்கிக் கொண்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு, டெல்லி நிர்பயா கொலை வழக்கு, தஷ்வந்த் கற்பழித்துக் கொன்று எரித்த சிறுமி ஹாசினி கொலைவழக்கு, காதலியை வெட்டிக்கொன்ற காதலன் வழக்குகள், உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு, இப்படி இன்னும் எத்தனயோ உள்ளது. எல்லாவற்றிலுமே அப்பீல் மனு போட்டு காலந்தாழ்த்தி தீர்ப்பை ஒத்திப்போட்டு சாதகமாக்கிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஒரு குற்றமோ/வழக்கோ பிரபலமாவதும், ஒன்றுமில்லாது போவதும் அரசியல் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது.
ஒன்றுக்கு நீதி கேட்டால் மற்றொன்றுக்கு சலுகை கேட்கும் தேசம் இது. போதும் போதும், இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தாகிவிட்டது, மரண தண்டனை தேவையில்லை என எல்லாவற்றிலுமே அரசியல் தலைவர்கள் மூக்கை நுழைத்து சட்டத்தை வளைக்க திருத்தம் கொண்டுவரும் காலமாகி விட்டது. ஜனாதிபதி என்ன சொல்வது, ஆளுநர் என்ன சொல்வது, நாங்களே தீர்மானம் இயற்றி விடுதலை செய்வோம் என்ற அளவில் எல்லாமே உள்ளது.
இதில் நம் முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல்கலாம் அவர்கள் 'மரண தண்டனையே நம் நாட்டில் இருக்கக்கூடாது, அடியோடு ஒழிக்க வேண்டும். குற்றவாளிகள் திருந்திவாழ வாய்ப்பு தரவேண்டும்' என்றார். இதற்கு என்ன சொல்வீர்கள்? ஒரு செயல் குற்றமாகுமா, அக்குற்றம் வழக்காக பதிவுபெறுமா, அது விசாரிக்க உகந்ததா, அது நீதிமன்றம்வரை எடுத்துச் செல்லத்தக்கதா, அது பலவருடங்கள் இழுத்தடிக்கப்படுமா என்று ஒவ்வொரு நிலையிலும் கவனமாக வடிகட்டிக்கொண்டு வந்தால் பலகோடி ரூபாய் ஆண்டுதோறும் மிச்சமாகும். இதுபோன்ற செலவுகளைத் தவிர்க்க, சிறை மற்றும் நீதித் துறைகளை தனியாரிடம் கொடுத்திடலாமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக