படத்தில் உள்ள வாசகத்தை முகநூலில் தற்போது பார்த்தேன். இதைப்பற்றி யோசித்தேன். மதத்தை எப்படி மறக்க முடியும்? சைவம் சொல்வதை இஸ்லாம் ஏற்காது, இஸ்லாம் சொல்வதை கிறித்துவம் ஏற்காது,. எல்லோர்க்கும் பொதுவான சிலபஸ் கோட்பாடு வரவேண்டும் என்றால் எல்லோரும் சித்தர்களாக வேண்டும். அவர்களில் பல சாதிகள், மதங்கள் இருந்தாலும், அனைவரும் சித்த மரபு பின்பற்றி ஒரு குடையின்கீழ் இருந்தனர். நம்மால் அப்படி இருக்க முடியுமா?
உணவு, உடை, கலாச்சாரம், வழிபாடு, கொள்கைகள் என எல்லாமே வேற்றுமையாகவே நிற்கும். தர்மநெறி/கண்டிப்பு/ஒழுக்கம் வேண்டும் என்றால், அவர்கள் வேண்டாம் என்பார்கள். நண்பர்களாய் மனிததத்தோடு பழகுவது வேறு, அவர்களின் பழக்க வழக்கங்களை நாம் அனுசரித்தே ஆகவேண்டும் என்பது வேறு. எல்லோராலும் இப்படி சங்கமிப்பது கடினமே! ஆக, சிலவற்றை நாம் மாற்ற முடியாது. தனிப்பட்ட அளவில் 'மனிதம்' வேண்டும் என்று சொன்னாலும், அதைத் தாண்டி பல நுணுக்கமான விஷயங்கள் உண்டு. அக்கம் பக்கத்து நாடுகளுடன் நம்மாலும் அவனாலும் ஒத்துப்போகவில்லையே! பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் ஓரிடத்தில் மத நல்லிணக்கம் என்பது அவர்களுடைய கொள்கைகளில் நாம் மூக்கை நுழைக்காமல் இருப்பதுவே. அவர்களுடைய சுதந்திரத்தில் நாம் தலையிடாமல் ஒதுங்கி இருந்து, நட்பு பாராட்டுவதே உகந்தது. மதமே கூடாது என்றால் சிவன் கோயிலில் கிறித்துவ ஜெபம் தாராளமாக நடக்கட்டுமே!
நான் சுத்த சைவம். என்னுடைய நண்பர்களில் ஒரு சிலர் சுத்த அசைவமாக, நாத்திகவாதியாகவும் இருக்கிறார்கள். நான் அவர்களோடு நெருங்கிப் பழகுவதால் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் எனக்கும் பிடிக்கும் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுடைய பழக்கவழக்கத்தை என்னால் ஏற்க முடியாது. அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம், என்னை பாதிக்காது. ஆனால் ஏதோவொரு இழையில் என்னுடைய ஆளுமையும் நிலைப்பாடும் அவர்களுக்குப் பிடித்துள்ளது என்பதால் என்னோடு பழகுகிறார்கள். 'மனிதம்' என்பது வேறு 'தனிமனிதக் கொள்கை' என்பது வேறு. எல்லோருமே பொதுவான நிலைப்பாட்டில் வரவேண்டும் என்றால் இருவருமே எதையேனும் தியாகம் செய்யவேண்டும்.
குடும்பத்தினரிடையே ஒற்றுமை இல்லை, முதலாளி-தொழிலாளி இடையே புரிதல் இல்லை, அண்டை வீட்டாரோடு இணக்கமில்லை, இப்படி எல்லாம் இருக்கும்போது மதத்தைக் கடந்து எல்லோரும் ஒத்த சிந்தனை, வழிபாடு, ஜீவகாருண்ய கொள்கையோடு வேற்றுமையின்றி வாழவேண்டுமென்றால் அது கடினமே. எனக்கு எந்த மகானின் வழிகாட்டுதலும் வேண்டாம், என்வழி தனிவழி, நான் வகுப்பதே நெறி என்று சொல்வது சரியில்லை. நம்மால் சித்தர்களாக முடியாவிட்டாலும், அட்லீஸ்ட் புதிதாக ஒரு சிறுபான்மை மதத்தை உருவாக்கிக்கொள்ள அரசு அங்கீகாரம் கிடைக்குமோ என்னவோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக