இக்கலியுகத்தில் சித்தர்கள் எண்ணற்ற பல அவதாரங்கள் எடுத்து பாவிகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டி வருகின்றனர். என்னதான் அவர்கள் நிலைநாட்டினாலும் கிருத, த்ரேதா, துவாபர யுகங்களில் நிலவிய தர்மம் இன்றில்லை.. தள்ளினாலும் போகாத அளவில் இருக்கும் பாவங்களை இந்த யுகத்தில் அவ்வப்போது அகற்றி தர்மபூமியை செப்பனிட்டு வருகிறார்கள்.
கடந்த பதிவுகளில் நாம் இதுகாறும் அறிந்தபடி திருமாலின் வடிவாகிய சித்தர் போகர்தான் இறுதியாக வரப்போகும் கல்கி அவதாரம். எப்போது வரும்? இன்னும் நாலு லட்சத்து இருபத்தேழாயிரம் வருடங்கள் போகவேண்டும். அதற்குள் எத்தனையோ மகான்களாக போகர் சுழற்சியில் வந்து அதர்மத்தை அழிப்பார். இறுதியான கல்கி வரும்முன் இவர் பல அவதாரங்கள் எடுத்து முன்னோட்டம் காண்கிறார்.
ஆனால் இக்காலத்தில் பலபேர் 'நானே கல்கி' என்று சொல்லி வருவது நமக்கு குழப்பத்தைத் தரும். அல்லவா? கல்கியின் முன்னோடிகளாக வருவோர் ரிஷி குலத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை. கல்கியின் பிரதிநிதியின் வலைப்பின்னலில் வரும் பலபேர் சிறுசிறு அளவில் கல்கியாகவே தனித்து செயல்படுவர். இவர்களை கல்கி என்று நாம் சொல்லிட முடியாது. ஆனால் அந்த ஆளுகைக்குட்பட்டு தர்மம் காக்க விழைபவர்கள்.
எப்படி கான்ஸ்டபிளையும் / ஐஜியையும் பொதுவாக 'போலீஸ்காரர்' என்று சொல்வோமோ அதுபோல்தான் இதுவும். இங்கே நம்முடைய நட்பு வட்டத்தில் ஒத்த சிந்தனையும் ஆன்மிக தாக்கமும் கொண்ட பலபேர் இருக்கிறோம். நம்மில் யாரோ ஒருவர் கல்கியின் நேரடி பிரதிநிதியாக இருக்கலாம், நமக்கே தெரியாது. மற்றவர்கள் இந்த வலைப்பின்னலில் வரும்போது ஒவ்வொருவருமே கல்கி என்ற நிலையில்தான் செயல்படுவோம். ஆனால் உண்மையில் நாம் கல்கி அவதாரம் இல்லை என்றாலும், தர்மத்தைக் காக்க எடுக்கும் முயற்சியும் விடுக்கும் செய்தியும் நம்மை கல்கியாகவே எண்ணச் செய்யும். 'அந்நியன்' அம்பி போல்தான்.
போலியான கல்கிகள் பலபேர் வந்தாலும் நாம் அவர்கள் பின்னே போனதில்லையே.. ஏன்? மெய்யான கல்கி நம்மை வழிதவற விடுவதில்லை. அப்படியேபோய் ஏமாறினால் அது கர்மவினை பயன்தான். பல போலி கல்கிகள் வந்து போவார்கள். பல உண்மை கல்கிகள் ஒசையின்றி செயல்படுவார்கள். அப்படிப் பார்த்தால் நீங்களும் கல்கி அவதாரமே! அது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சித்தரின் அருள் எல்லோருள்ளும் உள்ளது. தக்க சமயம் வரும்போது இருள் விலகும் அருள் வெளிப்படுத்திக் கொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக