கீதோபதேசத்தில் கிருஷ்ணர் 'மாதங்களில் நான் மார்கழி, வேதங்களில் நான் சாமவேதம்' என்று சொல்கிறார். ஈசனை துதிக்க சாம கானமே சிறந்தது என்று ரிஷிகள் சொல்லியுள்ளனர். இறைவனை இசையால் துதித்தால் அமைதியைத் தரும். இந்த தொகுப்பு கீதத்தை 'ஸாமன்' என்கின்றனர். வியாசர் தொகுத்த வேத நூல்களை ஒவ்வொரு ரிஷியிடமும் கொடுத்து அதைக் கற்று மற்றவர்களுக்கு கற்பிக்கும்படி செய்தார். அப்படியாக சாமவேதத்தை ஜைமினி ரிஷியிடம் தந்தார். இயல் இசை நாட்டியம் போன்ற நுண்கலைகள் இந்த வேதத்தின் கீழ் வருகிறது.
1875 பாடல்கள் கொண்ட திரட்டுதான் சாம வேதம். இதில் 75 ரிக் வேதத்திலிருந்து கையாளப்பட்டுள்ளது. சப்த சுவரங்களுக்கு இதுவே ஆதாரமாக உள்ளது, அதில் அதன் அளவும் காலப் பிரமாணமும் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது. மேற்கத்திய இசையும் ஏறக்குறைய நம் கோயிலில் சாமவேதம் பாடுவது போலவே உள்ளது. சாமவேதம் பற்றிய ஒரு சுவாரிசயமான செய்திதான் இந்த படத்தில் போட்டுள்ளேன். தோண்டத் தோண்ட பொக்கிஷங்கள் வெளிவருகிறது. இந்த சாமன் சங்கீதம்தான் psalm, song என்று ஆங்கிலத்தில் ஆனது.
ஒருமுறை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, ராஜராஜ சோழனின் ஆயிரமாவது அரியணை விழாவுக்கு வந்த சமயம், பெரிய கோயிலில் வேத விற்பன்னர்கள் சாமவேதம் இசைத்தனர். அதை ரசித்துக் கேட்டவர், 'வடக்கே இதுபோல் கனத்தோடு யாரும் பாடி நான் கேட்டதில்லை, வெரி மெலோடியஸ்' என்று கூறினாராம். சோழன் தன்னுடைய காலத்தில் வேதங்களை காக்கவேண்டி அதில் கற்றுத்தேர்ந்த விற்பன்னர்களை அழைத்து வந்து தன் நாட்டில் குடியமர்த்தி 'சதுர்வேதி மங்கலம்' என்று பெயரிட்டான் என்ற செய்தியையும் கேட்டறிந்தாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக