About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அட்சய திரிதியை

டிவியில் நொடிக்கு ஒருதரம் அட்சய திரிதியைக்கு இங்கே வாங்க, அங்கே போங்க என்று தங்கநகை மாளிகைகள் விளம்பரம் கொடுக்கிறார்கள். தங்கம் வாங்க மூன்று தளங்கள், பிளாட்டினம் வாங்க நான்காவது தளமாம். என்றுமே எனக்கு ஏனோ தங்கம் வெள்ளி நகைகள் அணிவதில் ஆசை இல்லை. தெரிந்தவர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன் ராசிக்கல் தங்க மோதிரம் அணிந்துகொள் என்று நச்சரித்தார். 3 கிராமில் ஓபன்கட் செய்து கொடுத்தார்.
அதை அணிந்தபின் எல்லாமே எதிர்மறையாக நடக்கத் தொடங்கியது. வடக்குபட்டி ராமசாமி ஐயாயிரம் தரவில்லை, என்னுடைய அமெரிக்க நிறுவனம் சென்னை கிளையை மூடியது, என் கேனன் கேமிரா நீரில் நனைந்து பழுதானது, உடல் எடை இறங்கியது, இப்படிப் பல நடந்தன. அதன் பின் இது நமக்கு சேராது என்று உள்மனம் எச்சரித்ததால், அடுத்த மாதமே, தங்க மோதிரத்தை வேண்டாமென விற்றேன். வைடூர்யம்-கோமேதகம் கற்களை பிரித்தெடுத்து அம்மன் கோயில் உண்டியலில் போட்டேன். பிற்பாடு நல்ல மாற்றங்கள் நடந்தது.
ராசிக்கல் சமாச்சாரம் எனக்கு ஏற்புடையதல்ல என்பதை ஈசன் உணர்த்தினான். அதுபோல் இது எனக்கு நஷ்டம் ஏற்படுத்தக்கூடாது என்ற வகையில் இதற்கு இணையாக ஒரு தொகை என் பழைய நிறுவனத்திலிருந்து அதிகப்படியான போனஸ்சாக வந்தது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒன்றில் நமக்கு ஆசை இல்லாதபோது யாரேனும் கட்டாயப்படுத்தி கொடுத்தாலும் அதை முழுதும் ஒதுக்கிடவேண்டும்.
அது நடந்த அடுத்தமாதம் வேலூரில் என் நண்பர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்டேன். அப்போது அவருடைய உறவினர் யாரோ ஒரு கிராமத்து பெரியவர் திடீரென என்னருகில் வந்து அமர்ந்து கொண்டு, 'ஏம்போ... செருப்பு கழட்டுபோ..' என்று கூறினார், உடனே அவர் என் வலது மோதிரவிரலை தொட்டுக்கொண்டு ஏதோ மந்திரம் சொன்னார். கண்ணை மூடியபடி, 'ஏ சாமி... வைரம் வைடூர்ய ரத்னங்களில்ல உன்னுள்ள ஓடிகிட்டு இருக்கு...' என்று சொல்லிவிட்டு முருகன்மீது ஒரு பாட்டு எழுதிகொடு என்று கேட்டு வாங்கிக்கொண்டார். ராசிக்கல் எனக்கு ஒவ்வாது என்பதை இவர் இப்படி அறிவுறுத்தினாரோ என்று நினைத்தேன். பிற்பாடு என் நண்பரிடம் 'அந்த பெரியவர் யாரு, என்கிட்ட வந்து திடீர்னு இப்படிச் சொன்னாரு' என்றேன். அதற்கு அவர் 'சந்துரு, அவர் என் அம்மாவோட தாய்மாமன். ஊர்ல அருள்வாக்கு சொல்றவரு' என்றார். எது எப்படியோ நமக்குப் படிப்பினை தந்தது.
சரி. நம் குருநாதர் ஸ்ரீவீரப்பிரம்மம் அவர்கள் தங்கம் பற்றி என்ன சொல்லியுள்ளார்?
"வருங்காலத்தில் தங்கம் காணக்கிடைக்காது. அதன் இடத்தை பித்தளை எட்டிப்பிடிக்கும். பித்தளையே தங்கத்தின் விலைக்கு விற்கும். கொள்ளையடிக்க ஒரு கூட்டமே இருக்கும்."
"அரிசி விலை ஏறும். ரூபாய்க்கு விரல்நுனி கொள்ளளவு நொய்யரிசி கிடைத்தாலே பெரிது."
அடித்துப்பிடித்து குந்துமணி உலோகம் வாங்கிவிட்டு, அது பயன்படாமல் போவதைவிட திருப்தியாக பேரீச்சம்பழம் வாங்கிச் சாப்பிடலாம்.

Image may contain: food

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக