நாற்பது வருடங்களுக்குமுன் நாங்கள் வசித்த காலனியில் எங்கள் பக்கத்து வீட்டில் நெல்லை மாவட்டத்திலிருந்து ஒரு குடும்பம் வந்து அதே நாளில் குடியேறினர். அக்குடும்பத்து மூத்தவர் வெங்கடாச்சலம் தாத்தா. நெல்லை மாவட்டத்தில் சங்கனாபுரம் அவர்களுடைய சொந்த ஊர். யாதவ குலத்தைச் சேர்ந்த அவர்களுக்கு அளவில்லா நிலபுலம் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டத்திற்கு 80களில் முப்பந்தல் கிராமத்தில் தங்களிடமிருந்த உபரியான நிலங்களை விற்ற சில குடும்பங்களில் இவர்களும் ஒருவர். தாத்தாவின் தங்கை ரங்கம்மா பாட்டியும் கூட்டுக் குடும்பமாக அவர்களோடேயே இருந்தார். அண்ணனும் தங்கையும் சம்பந்திகள்.
நான் நான்கு வயது சிறுவனாக இருந்தபோது, அவர்கள் பேரன் சுந்தரும் என்னுடன்தான் விளையாடுவான். பாட்டி என்னைப் பக்கத்து வீட்டுப் பையன் என என்றுமே பார்த்ததில்லை. தங்களுடைய இறுதிக் காலம்வரை பாட்டியும்-தாத்தாவும் என்னை அவர்களுடைய பேரனாகவே பாவித்தனர். 'ஏ... சந்தரு... முந்திரிகொத்து செய்து வெச்சிருக்கேன்... வந்து சாப்பிடுதியாபோ?' என்று வாஞ்சையுடன் கேட்டுக் கொடுப்பார். பொக்கைவாய் வெங்கடாசல தாத்தா தன் இருபக்க கன்னத்திலும் உடுக்கை அடித்துப் புதிய ஒலிகளை எழுப்பிப் பரவசப் படுத்துவார். 'ஏம்போ... என் ராசா... அந்தால போஞ்சி கலக்குதேன்.. குடிக்கியாபோ?' என்று நாஞ்சில் மணம் வீசும் தமிழில் கேட்டுவிட்டுப் போவார் பாட்டி. கொப்பு வைத்து அள்ளி முடித்த நரைத்த தலைமுடி, வெள்ளைச்சேலை, பச்சைக்குத்திய கைகள் என்று பாட்டியின் உருவம் மனதில் பதிந்துள்ளது. இலையடை, அதிரசம், கைமுறுக்கு, மரவள்ளிக்கிழங்கு வறுவல், கைக்குத்தல் அவல், எல்லாமே அரங்கேறும். தாத்தா தன் உண்டிகோலால் யார் வீட்டுக் கதவிலோ 'டமார்' என்று கல் அடித்துவிட்டுப் பதுங்குவார். எங்களைவிட அவர்தான் சேட்டை அதிகம். என்னையும் அவனையும் இருபக்கத் தோளில் அமர்த்திக்கொண்டு வாக்கிங் போய் வருவார்.
நாங்கள் வேறு வீட்டுக்குக் குடி போனபிறகும் அவர்களின் வருகையும் நட்பும் நீடித்தது. பாட்டி தன் சுருக்குப் பையிலிருந்து இரண்டு ரூபாய் தாளை எடுத்து என் சட்டைப் பாக்கெட்டில் திணிப்பார். அவ்வயதில் அது எனக்குப் பெரிய தொகையாகத் தெரியும். 'ஏன் பாட்டி, காசெல்லாம் எதுக்கு?' என்பேன். அதற்கு அவர் 'நீ என் கண்ணுகுள்ளயே நிக்கபோ... என் மனசு உன்ன தேடுது' என்று சொல்லி அணைத்து நெற்றியில் முத்தமிடுவார். பாட்டி மறைந்து 30 ஆண்டுகள் ஆயிற்று. அவர் சொர்க்கத்தில் இறைவனடி நிழலில் என்றென்றும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்.
பாட்டியின் மகன் (தாத்தாவின் மருமகன்) தாமோதரன் மாமாதான் சங்கனாபுரத்தில் 50களில் முதன் முதலில் லண்டனுக்குப் போய் மேற்கல்வி படித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். பின்னாளில் பிரிட்டிஷ் கவுன்சிலில் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுத் தன் சொந்த ஊரிலேயே காலமானார். வருடங்கள் கடந்தாலும் அவர்களும் நாங்களும் ஒன்றாகப் பழகிய நாட்களை மறக்கமுடியாது. அது பசுமையாய்ப் பதிந்த நீீங்கா நினைவுகள்! மாமியும் மாமாவும் அன்பின் சிகரங்கள்.
வாழ்க்கைப் பயணத்தில் இக்கதாபாத்திரங்கள் வந்து போனாலும், விட்டகுறை இருந்த படியால்தான் இவர்களோடு பந்தம் ஏற்பட்டது. அவர்களைப்பற்றிய எண்ணம் இன்று ஏனோ வந்து போனது. நெல்லை மக்களின் பந்தமும் பாசமும் அலாதியானது, மறக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக