தமிழ் புத்தாண்டுக்கு இங்கே சாமி கும்பிட்டு, மணியடித்து தீபம் காட்டி, விருந்துண்டு, டிவி பார்த்தபின் உறங்குவதோடு முடிந்துவிடும். சாத்திர சம்பிரதாயங்கள் இருந்தாலும்கூட பெரிதாக வேறு ஏதும் செய்வதில்லை.
ஆனால் தென்கோடி தமிழகம் மற்றும் கேரளா பக்கம், இலந்தம்பழம் கொடுக்காபுளி அரைநெல்லி, திராட்சை முதலியதை கையில் அள்ளி குழந்தைகள் தலையில் கொட்டுவார்கள். பிறகு வெற்றிலை, பழம், வேப்பம்/ கொன்றைப்பூ, 25,50 பைசா என்று பரிசு வைத்துக் கொடுப்பார்கள்.
நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு கால்நடை மருத்துவர் இருந்தார். அவருடைய தந்தை 'ஏ... வேகம் வரணம்... விஷுக்கனி மதுரமாயிட்டு பழங்கள் உண்டு.. இந்தாடா ஒரு கதலி... நன்னாயிட்டு இருக்கும்' என்று சொல்லிவிட்டு மேலேசொன்னபடி செய்வார். காலில் விழுந்துவிட்டு ஆசிர்வாதம் பெற்று, தலையில் பெய்த பழங்களை பொறுக்கி ஜோபியில் நிரப்பிக்கொண்டு, 50 காசுக்கு பன்னீர் சோடா வாங்கிக்குடித்த நினைவு இருக்கு. அவர் கொடுத்த கதலி (வாழைப்பழம்) சூம்பிப்போன கருத்த எலிகுஞ்சு போன்று இருக்கும். அதை உரிப்பதற்குள் பாடுபட வேண்டும். அதுபோக, 'தாத்தா, பலாபழம் எவ்வடே? அது பாக்கியல்லோ?' என்று கேட்பேன். அப்படியும் கேட்டுவாங்கித் தின்ன கூட்டம் நாங்கள்! ஹிஹிஹி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக