மனிதன் வாழும்போது அவன் எப்படி வாழ்ந்தான், என்ன சாதித்தான், சமூகத்திற்கு பயனுள்ள பணிகள் செய்தானா, என்ற கண்ணோட்டத்தில்தான் அவன் இறக்கும்போது பேச்சுக்கள் அமையும்.
'அவனா? அய்யே. தற்பெருமை பேசி கொல்லுவான், பகட்டு மனுஷங்களைத் தேடிப்போவான், குடும்பத்தை தவிக்கவிட்டான், கஞ்சிக்கு வழியில்லாம இருந்தான், ஆனா தினமும் ஜரிகை பட்டு கட்டிய பரம்பரைபோல் பேசுவான், கால்காசுக்கு பயனத்த புழுத்தப்பய, பூமிக்கு பாரமா இருந்துட்டு போனான்... ஹூம்.'
'அவரா? அச்சச்சோ! நல்ல மனுஷன். தங்கமான குணம், தவறான வழில போனதில்லை, உபகாரம்னா முதல்ல வந்து நிப்பாரு, நடுத்தர குடும்பமானாலும் தன்னாலான உதவிகளை சத்தம் இல்லாம செய்வாரு, நேத்து காலையிலகூட வாக்கிங் போனாரே... அடடா.'
இந்த இருவித வர்ணனைகளில் நம்மில் யார் எதில் சேர்த்தி என்பதை காலம்தான் முடிவுசெய்யும். வாழும் காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்து ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அமையும். யாரும் பிறப்பால் நல்லவனுமில்லை கெட்டவனுமில்லை. பிறந்த சிசுவின் தேகமானது எந்த குணங்களும் நிரப்பப்படாத காற்றடைத்த தோல் பாவையாக தாதுக்கள் நிறைந்த ஒரு பண்டமாகத்தான் வருகிறது. அதை முதலில் கெடுப்பது தாய், பிறகு சுற்றமும் நட்பும், பிறகு தானே விருப்பப்பட்டு கெடுவான்.
ஊழ்வினையால் ஒவ்வொருவனின் ஆன்மாவும் பாவம் செய்வதிலிருந்து அதிக எதிர்ப்பினை காட்ட முடியாமல் போகிறது என்பதே உண்மை. இதை வாழ்க்கையில் காட்டிப் புரியவைப்பது சனீஸ்வர பகவான், முப்பது வருடத்தில் அவனின் ஆன்மாவை புடம்போட்டு அவனை உயர்த்தவோ இறக்கவோ ஆற்றல்பெற்ற நீதிபதி. சிறுவயது முதலே பஞ்சாட்சரம் ஓதி வந்தால் இப்பிறவியை அழுக்கின்றி கடந்திடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக