இந்த பிரபஞ்சம் பிக்பேங் வெடிப்பில் தோன்றியது முதல் அனைத்து விஷயங்களும் நம்முடைய ஆன்மாவில் பதிவாகியுள்ளது என்பது கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்னதிலிருந்து புரிகிறது. நேற்று என்ன சாப்பிட்டோம் என்பதையே மறந்துபோகும் தன்மையுள்ள நாம் இதை எப்படி ஞாபகத்தில் வைத்துள்ளோம்? அது ஆன்ம வாசனையாக தொன்றுதொட்டு வருகிறது. ஆனால் அவை நினைவு திரும்பாமலேயே போகிறது. பழைய சொந்தங்களை அறிமுகம் செய்துகொண்டு புதுபித்துக்கொள்ள எந்த அவசியமுமில்லை. சமய நூல்கள் சொல்வது உண்மை என்ற அளவில் அதை சாட்சியாகப் பார்க்கலாம். அவ்வளவே!
மனோதத்துவ சோதனையில் மிஞ்சிப்போனால் மூன்று/ நான்கு முற்பிறப்புகள் பற்றிய சங்கதிகளை நினைவு கூறலாம். ஆனால் மகான்கள் எல்லாவற்றையும் கூறி கிருஷ்ணரின் கூற்றை மெய்ப்பிப்பார்கள். நெற்றியில் (ஆக்ஞேயம்) நம்முடைய மூன்றாவது கண் திறக்கும்வரை இந்த உலகத் தொடர்பிலிருந்து ஆன்மா விடுபடுவதில்லை. பிறந்த குழநத்தையின் உச்சிக்குழி மூடும்வரை அது பரவெளியில் அந்த சிவஜோதியை தரிசனம் செய்து கொண்டிருக்கும், அது அசையும்போது அதைப்பார்த்து சிரிக்கவும் அச்சப்படவும் செய்யும். அது மூடியதும் முற்பிறப்புகள் ஏதும் வெளிப்போக்காக நம் நினைவில் இருப்பதில்லை. குழந்தையாக இருக்கும்வரை நாம் தெய்வத்திற்கு சமம். ஆனால் வளர்ந்தபிறகு பூஜ்யத்திலிருந்து நாம் மேம்படவேண்டும். பிறகு மனிதனும் தெய்வமாகலாம் என்ற நிலையை அடைய வேண்டும். இதை அறிந்து சுயம் பிரகாசராவது எளிதல்லவே.
விஸ்வகர்ம தத்துவம் பற்றி ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர் தன் சீடர் சித்தையாவுக்கு எல்லா சூட்சுமங்களையும் விளக்குகிறார். இந்த உலகம் தோன்றியது, சுயம்பு புருஷா-பிரக்கிருதி இணையோடு இறைசக்தி தோன்றியது, பஞ்சமுகத்துடன் பிரம்மாக்கள் வந்தது, தெய்வங்கள் / உபதெய்வங்கள், தெய்வங்களுக்குள் சொந்தம், பஞ்சபூதங்கள்; ஓங்கார பிரணவத்திலிருந்து எல்லா படைப்புகளும் வந்த விதத்தையும், பஞ்ச ரிஷிகள்/சப்த ரிஷிகள், ஜீவராசிகள்/ மனிதகுலம், தொழில்கள், வர்ணங்கள், சாதிகள், என எண்ணிலடங்கா பல நுணுக்கமான சங்கதிகளை ஆழமாக விளக்குகிறார். இதன் அடிப்படையில் திருமந்திரம், திருவாசகம், திருவாய்மொழி மற்றும் ஏனைய நூல்கள் எளிதாக விளங்கிவிடும்.
அகத்தியர் 'சௌமிய சாகரம்' நூலில் சொன்னதுபோல் 'யாரப்பா அறிவார்கள் பர சொரூபம் அந்தரங்கமான சிவா ரூபா ரூபம்' என்பதே உண்மை. போகர் 'ஜெனன சாகரம்' நூலில் தனக்கு இந்த அந்தரங்க விஷயங்களை சக்தி உணர்த்தியதால், அத்தலம் அரங்கம் என்றும், தனக்கு அரங்கன் என்ற பெயர் வந்தது என்கிறார். மணிவாசகர் தன்னுடைய திருவாசகத்தில் 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய்' என்று கூறுகிறார்.
இவை எல்லாவற்றையும் படித்ததும் மலைப்பும், புரிந்து கொண்ட ஆத்ம நிறைவும் வரும், சந்தேகங்கள் தெளியும், காலப்போக்கில் பெரிதாக ஏதும் படித்துத் தெரிந்துகொள்ள அவா ஏற்படாது, மந்திரங்கள் ஸ்லோகங்கள் ஏதும் ஜெபிக்க விருப்பம் வராது, பிரம்மத்தின் தத்துவத்தையும் பிரம்மாண்டத்தையும் புரிந்து கொண்டபின் மௌனமே நிலவும்! அதன் போக்கிலேயே நாம் போவோம்.
இந்நிலையில் சமயத்தை சீர்குலைக்க நூல்களுக்குப் புறம்பான புரட்சிகர விஷயங்களைக் கேட்க நேர்ந்தால் நாம் கோபப்படுகிறோம். ஆன்மிக உலகம் பெரிய சாகரம் போன்றது, நீங்கள் நீந்தி தெளிவுபெற அளவிட முடியாத அளவில் இடமுண்டு. 'கடவுளே, எனக்கு போட்டியா அவனை வர விடாத' என்று வேண்டிடும் காலமாகி விட்டது. இப்படிக்கூட பொறாமை ஆத்திரம் கெடுபுத்தி இம்மார்க்கம் உணர்ந்தவர்களுக்கு இந்நிலையில் வருமா என்று ஆச்சரியப்படுவோம். முதல் கால்பகுதி கலிகாலம் பன்மடங்கு துர்குணம் அடைந்து விட்டது என்பதற்கு இது சான்று. ஹையோ. ஹையோ.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக