நான் 9,10,11ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் தமிழ் பேச்சுப்போட்டி, கருத்தரங்கம், ஆண்டு விழா என்று ஏதேனும் நடக்கும். அதில் தொடர்ச்சியாக மூன்று முறை விழாவுக்கு வந்த முக்கிய விருந்தினர்களுக்கு மாணவர்கள் சார்பில் ரோஜா மாலை அணிவிக்க என்னை அழைத்தனர். (அப்படி ஒன்றும் நான் படிப்பில் அசகாய சூரப்புலி எல்லாம் இல்லை. ஆல்ரவுண்டராக இருந்தேன்! நன்கு படிக்கவேண்டும் ஆனால் பள்ளி/ கல்லூரியில் முதல் மதிப்பெண் பெறுவதோ, தங்கம்/வெள்ளி மெடல் வாங்க ஆர்வமோ என்றுமே இருந்ததில்லை.)
முதல் தருணத்தில் திரு.மன்னர் மன்னன் அவர்களுக்கு மாலை அணிவிக்கும்போது அசந்துபோனேன். பாவேந்தர் பாரதிதாசனுக்கே மாலை அணிவித்த ஒரு சிலிரிப்பு. அவருடைய மகனார் அவரைப்போலவே அச்சு அசலாக இருந்தார். 'என்ன தம்பி பிரமிச்சு போயிட்டியா?' என்றார். மாலையை வாங்கிக்கொண்டு எனக்கே அணிவித்து விட்டார். அவருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தேன்.
இன்னொரு விழாவிற்கு கல்வியாளரும், சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்த முனைவர். என்.டி. சுந்தரவடிவேலு அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஒரு மாலை. அவர் மிகவும் மென்மையாகப் பேசினார். அன்று மேசையில் அலங்காரத்திற்கு வைக்கும் பூச்செண்டு வரவில்லை. உடனே பள்ளி வளாகத்தில் இருந்த வண்ணமிகு குரோடன்ஸ் செடிகளை அரையடி நீளத்திற்கு வெட்டி, கெமிஸ்ட்ரி லேபிலிருந்து இரண்டு கண்ணாடி குடுவைகளில் போடாசியம் பெர்மாங்கனேட் கரைசலையும், காப்பர் சல்பேட் கரைசலையும் ஊற்றிக் கொண்டுவந்து செடிகளை சொருகி மேசையின் இருபக்கமும் வைத்து ஒப்பேற்றிவிட்டோம்.
ஆண்டு விழாவுக்கு ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கம் வென்ற திரு.வி.பாஸ்கரன் வந்தார். அவர் நல்ல உயரம். எனக்கு சிரமம் வைக்காமல் அவரே குனிந்தார். மாணவர்களுக்கு விளையாட்டு அவசியம் என்று கூறி புத்திமதிகள் சொல்லிவிட்டு அமர்ந்தார்.
பள்ளிக்கூட நாட்களை எப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியே! என்னுடைய நோக்கில், மாணவர்களுக்கு வெறும் படிப்பு மட்டும் போதாது, இன்னபிற skills திறமைகளை வளர்த்துக்கொள்ள அங்கேயே அடிக்கல்லிட வேண்டும். பின்னர் காலம் கனியும்போது அவை மிளிரும். எனக்கு இவையெல்லாம் பின்னாளில் கைகொடுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக