அக்காலத்தில் உடுத்தும் உடைகளில் மூலிகைச்சாறு கொண்டு அடிப்படை நிறங்களில் பல வண்ணங்கள் தோய்த்து எடுத்தனர். வேம்பாளம்பட்டை, மருதாணி, மஞ்சள், நீலி அவுரி, பவளமல்லி, ஆடாதொடை, மற்றும் பாஷாணங்கள் கொண்டு சாயங்களைப் பெற்றனர். இதன் விகிதாசாரத்தை மாற்றியமைத்து பல நிறங்களைக் கொண்டுவந்தனர். அக்காலத்தில் அடிப்படை ஆடை பருத்தி & பட்டு. வேறு ஏதும் இருக்கவில்லை. ஆக, நூற்பது நெய்வது சாயம் ஏற்றுவது இயற்கையோடு ஒன்றியே இருந்தது. எந்தத் தொல்லையும் இருக்கவில்லை.
ஆனால் இன்று நாம் செயற்கையாக வண்ணம் ஏற்றப்பட்ட ஆடைகளைத்தான் அணிகிறோம். பருத்தி, சிந்தடிக், தோல், ரெக்சின் என்று எல்லா ஆடைகளை அணிகிறோம். நம்மைவிட சக்திவாய்ந்த மனிதவளம் மிக்க அமெரிக்காவில், சீனாவில் பல உற்பத்திகள் நடக்கிறது ஆனால் நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் அங்கெல்லாம் விசைத்தறி போட்டு பருத்தி துணியில் சாயம் தோய்ப்பது அடியோடு ஒழிக்கப்பட்டது. அதனால் உபரியான வேலை ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி வந்துவிட்டது. வேலைவாய்ப்பும், இறக்குமதி/ ஏற்றுமதி வர்த்தகமும் அதிகமானது. விண்ணில் தொலைநோக்கியையும், கடலடியில் ஆய்வுக்கூடமும் வைக்கத் தெரிந்த அவர்களுக்கு பனியன் ஜட்டி டீ-ஷர்ட் தயாரிப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது?
திடீரென ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்தான் கண்முன் தெரிகிறதாம், மென்மையான வண்ணமய பருத்தி படுத்தும்பாடு யார் கண்களுக்கும் தெரியவில்லை. நம்மூரில் நதியைக் காணோம், பெப்சிகாரன் குடித்தான், கர்நாடகா மறித்தான், என்றெல்லாம் பேசுகிறோம். சாயம் தோய்க்க ஆகும் நீரின் அளவுக்கு நம்மிடம் எத்தனை நதிகள் இருந்தாலும் போதாது. ஆனால் கொங்கு மண்டலத்தைப்போல் தமிழகம் முழுதும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் நடக்கும் பலசெயல்களுக்கு நாமும்தானே உடந்தை? இதில் செந்நிற செப்பு என்ன? ஐயோடின் உப்பு என்ன? பருத்தியின் சாயம் ஓசையின்றி ஆபத்தை உண்டாக்கி விட்டது. 'நீர் இல்லாத சாயம்' என்ற தத்துவம் வந்தாலும், பருத்தியிலேயே மரபணு மாற்றி பலவித வண்ணங்கள் கொண்டுவந்தால் ஒரு தவறுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக