'பொன் விளையும் பூமி' என்பதற்கேற்ப முன்பெல்லாம் சித்திரை முதல்நாள் ஈசானப் பகுதியில் பூசை செய்தபின் மெய்யாகவே பொன்னில் செய்த சிறிய (சாக்பீஸ் அளவு - 3 பவுன் இருந்தால் அதிகம்) ஏர்கொண்டு பூமியைக் கீறிவிட்டு உழுதார்கள். இதனால்தான் பொன்னேர் என்ற பெயர் வந்தது. பிற்பாடு எல்லோர் குடும்பத்திலும் செல்வம் குன்ற, ஏரில் ஒரு குந்துமணி தங்கம் கட்டி உழுதனர், இக்காலத்தில் மஞ்சள்-குங்குமம் பூசிய வெறும் ஏர் வைத்து உழுகிறார்கள். நிலம் எதுவும் இல்லாதோர் கற்பனையில் ஏரோட்டலாம்.
முதலில் உழுத மண்ணை சாஸ்திரத்திற்கு ஒரு கூடையில் வைத்து அதை கிரமப்படி உள்ளூர் கோயில் திருப்பணிக்கு கொடுத்தனர். அந்த நிலப்பகுதியில் பிள்ளையார்/வாஸ்து பூசை செய்வதுபோலவே இருக்கும். நிலச்சுவான்கள் முதல் உழவு நாளில் கொழுக்கட்டை, கொத்துகடலை சுண்டல், வெல்ல அவல்/பிட்டு, மோர், வெள்ளரிக்காய் கோசுமல்லி செய்து அங்கு பண்ணை ஆட்களுக்கு விநியோகம் செய்வார்கள். அதன்பின் ஆடிப்பட்டம் விதைக்க நிலம் தயாராகும். (வேலி போட்ட) மிகச்சிறய அளவு நிலத்தில் முதலில் விளைந்த பயிரை கோயில் காளையை விட்டு மேய விடுவார்கள். என் கொள்ளுத்தாத்தா தன் நிலத்தில் அப்படித்தான் செய்தார் என்று கேள்விப்பட்டுள்ளேன். இப்போதும் எல்லா ஊர்களிலும் இப்படித்தான் செய்கிறார்களா என்று தெரியவில்லை.
பொன்னாலான கலப்பையைக் கொண்டு ஏர் உழுதனர் என்பதை மதுரைத்தாலாட்டு சொல்கிறது.
வெள்ளிக்கலப்பைகொண்டு சொக்கர் விடியக்காலம் ஏர்பூட்டி
தங்கக்கலப்பைகொண்டு சொக்கர் தரிசுழுகப்போனாராம்
வாரி விதைபாவ வைகைநதித்தீர்த்தம் வந்து
அள்ளி விதைபாவ அழகர்மலை தீர்த்தம்வந்து
பிடித்து விதைபாவ பெருங்கடல் தீர்த்தம்வந்து
எங்கும் விதைபாவ ஏழ்கடல் தீர்த்தம்வந்து
முத்து விதைபாவ மிளகுச்சம்பா நாத்துநட்டு
பவளக்குடைபிடித்து சொக்கர் பயிர்பார்க்கப் போகையிலே
வங்காளச்சிட்டு வயலிறங்கி மேய்துன்னு
சிங்காரவில்லெடுத்து தெறித்தாராம் அம்பினிலே
ஊசிபோல் நெல்விளையும் ஒருபுறமாய் போறேரும்
பாசிபோல்நெல்விளையும் பட்டணம்போல் போறேரும்
சரஞ்சரமாய் நெல்விளையும் சன்னதிபோல் போறேரும் கொத்துகொத்தாய் நெல்விளையும் கோபுரம்போல் போறேரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக