சார், ஜீவகாருண்யம் வேண்டும் என்று வள்ளலார் வலியுறுத்தி இருக்கார். ஆனால் தாவரங்களுக்கும் உயிர் இருக்கு, அப்போ அதை சாப்பிடுவது மட்டும் சரியா? அதெப்படி ஜீவகாருண்யமாகும். பிராணிகளை மட்டும் சைவர்கள் பேசுவது சரியில்லையே என்று சொல்வார்கள்.
ஆம், தாவரங்களுக்கும் உயிருண்டு. அதன் படைப்பு எதற்கு? நமக்கும் பிராணிகளுக்கும் உணவாகவும் மூலிகையாகவும் பயன்படுவதற்குத்தான். நமக்குப் பயனளிப்பதுதான் அதன் ஜீவித காரணமே. அவை தியாகத்தின் சின்னம். பெரும்பாலும் காய், கனி, இலைகள் என்று பறித்துக் கொள்வதால் செடிகளுக்கு பாதகம் இருப்பதில்லை. ஆனால் வேரோடு பிடுங்கி எடுப்பதோ, வெட்டுவதோ எதைச் செய்தாலும் அதன் அனுமதியோடு 'சாப நிவர்த்தி' பெற்று பயன்படுத்த வேண்டும் என்று சித்தர்பாடல்கள் சொல்கிறது. புலால் மறுப்பு பற்றி சொல்லும் திருவள்ளுவரே இன்னொரு இடத்தில் 'கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' என்று சொல்கிறார். அப்படி என்றால் அது பறித்து உண்பதற்காத்தானே? உண்ண அரிசி பருப்பு, உடுக்க உடை, வசிக்க கூரை, கற்க ஏடு என எல்லாமே தாவரத்திலிருந்து வருபவைதானே?
அக்காலத்தில் வனம் பெருக்கினர், மழை பெற்றனர். ஆனால் இன்றோ கைக்கு வந்தபடி வெட்டி வேரோடு அழிக்கிறோம். இதெல்லாம் சரியில்லை. மேற்சொன்ன கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாததால் அவை ஏதும் இன்று குற்றமாகத் தெரிவதில்லை. மதம் என்ற ஒன்று கொள்கை என்ற ஒன்றை வகுத்துள்ளதால், அதன்படி வாழ்வதே சரி. இன்றைக்கு அதை எப்படியும் வளைத்துக் கொள்ளலாம், பகுத்தறிவோடு அணுகலாம் என்ற நிலை இருப்பதால். இது நமக்கே பாதகமாக முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக